ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிட மிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்ச மும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946-இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம். இந்த உரிமைகூட பெண்களுக் குத் தரக்கூடாதென இந்து மகாசபைக் காரரும், சனாதனிகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்களாம். இந்தச் சட்டத்தை சட்டசபை நிராகரித்துவிட வேண்டுமெனத் “தேசபக்த” மாளவி யாவும் கேட்டுக் கொண்டாராம்.
பெண்களுக்குக் கலியாண விடு தலைக்கு அனுமதியில்லாமலும், ஒரு கணவன் இருக்கும்போது, மற்றொரு கணவனை மணந்து கொண்டு வாழ உரிமையில்லாதபொழுது, கணவனுக்கு மாத்திரம் மற்றொரு மனைவி கட்டிக் கொள்ள அனுமதியிருப்பதுமான சட் டம் எவ்வளவு புரட்சிகரமானது, மாறுத லானது என்று பேசப்பட்டாலும் – அது உண்மையில் பலனற்றது என்பதே நமது கருத்து.
இந்தச் சட்டமானது இதுவரையிலும் காந்தியாரும், காங்கிரசுக் காரர்களும், இந்து சீர்திருத்தக்காரரும் தீண்டாமை யைப்பற்றிப் பேசிவந்த சூழ்ச்சியைப் போலும் சூழ்ச்சி இல்லாவிட்டால், அறி யாமையைப் போலும், இரண்டுமில்லா விட்டால் ஒரு வீண் வேலையைப்போல் தான்ஆயிற்றே ஒழிய, வேறொன்று மில்லை.
நிறைவேறியிருக்கும் புதிய சட்டத் தில் பெண் தனித்திருக்கலாம் என்றிருக் கிறது. இதனால் பெண்ணுக்கு இலாப மென்ன? தனியே இருந்து வேதனைப் பட வேண்டியது தவிர, அல்லது புருஷனால் கருதப்படும் கெட்ட காரியமென்னும் விபசாரமென்று சொல் லப்படும் குற்றத்திற்குப் பெண்களை ஆளாக்கக் கணவன் உள்பட மற்றவர் கள் ஆதாரங்கள் கவனிப்பதைத் தவிர வேறென்ன முடியும்?
ஜீவனாம்சம் என்று சொல்லுவதும் இதற்கு முன் இருந்து வருகிற ஜீவனாம் சமே தவிர புதிய ஜீவனாம்சம் ஒன்றும் இல்லை.
ஜீவ சுபாவங்களின் இயற்கை உணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சி திருப் திக்கு வசதியில்லாத கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் வைத்துக்கொண்டு, எந்தவிதமான மாறுதல் செய்தாலும் வருணாசிரமத்திற்குப் புதிய பாதுகாப் பும், வியாக்கியானமும் ஏற்படுவது போலும், புராணங்களுக்குத் தத்துவார்த் தம் சொல்வது போலுந்தான் முடியுமே தவிர வேறில்லை. ஆகவே, பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காகத் தாங்கள் முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என் னும் விலங்குகளைத் தகர்த்தெறிய முற் பட்டாலொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து, அனுபவித்துக் கொண்டு வரும் ஆண்களாலும், எப் படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும், பொதுவுடைமைக்காரருடைய புரட்சி யாலும் விடுதலை ஏற்படாது என்பது எமது கருத்து.
– 06.04.1946 – ‘குடிஅரசு’