தென்காசி, செப்.23 தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மய்யத்தில், சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஈட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வுப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், 2024-ஆம் ஆண்டு முதல் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இரும்புக்கால இடுகாட்டில் அகழாய்வுப் பணிகள் நடை பெற்று வருகின்றன. அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார் மற்றும் துணை இயக்குநர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அகழாய்வு குறித்து பேசிய துணை இயக்குநர் காளீஸ்வரன், “தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன. 13.50 மீட்டர் நீளமும், 10.50 மீட்டர் அகலமும் கொண்ட 35 கற்பலகைகளால் அமைக்கப்பட்ட அரணுக் குள் ஈமத் தாழிகள் கண் டறியப்பட்டுள்ளன. அவற் றின் மேல் 1.50 மீட்டர் உயரத்துக்குக் கூழாங்கற்கள் நிரப்பப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார். இதுவரை தோண்டப்பட்ட 38 குழிகளில், 75 சிவப்பு நிறத் தாழி களும், ஒரு கருப்பு-சிவப்பு தாழியும் என மொத்தம் 76 ஈமத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, வட்டம் மற்றும் கூட்டல் போன்ற பல்வேறு குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
நீளமான ஈட்டி
மேலும், 2.5 மீட்டர் நீளமுள்ள ஈட்டி ஒன்றும் கிடைத்துள்ளது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஈட்டிகளில் இதுவே மிக நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், 3 தங்க வளையங்கள், பல்வேறு வடிவ மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் என 250-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான ஆவணப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஆய்வு மாணவர்களும் பங்கெடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.