சென்னை, செப்.23 சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், துறை செயலாளர் பொ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மேனாள் மாணவர்கள் சங்க மய்யத்தில் புதிதாக கட்டப்பட்ட புகழ் மண்டபம், சிறிய ஒளிப்பட அரங்கு மற்றும் விருந்தினர் அறைகளையும், கல்லூரி முகப்பில் புனரமைக்கப்பட்ட கடிகார கோபுரத்தையும் அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்து பேசியதாவது:
அகில இந்திய அளவில் முனைவர் பட்டம் பெரும் மாணவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேபோல், பெண்கள் உயர்கல்வி பயில்வதும் தமிழ்நாடுதான் அதிகம். 50 சதவீதத்துக்கும்மேல் பெண்கள் பயிலும் கல்லூரி இது. உயர்கல்வித் துறை கூட்டம் நடக்கும்போது, மாநிலங்களுடன் மட்டும் போட்டி போடாமல், உலக நாடுகளுடன் போட்டி போடுகிறது என்ற சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேசிய துறை செயலாளர் பொ.சங்கர், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு உள்கட்டமைப்பு, தரம் இங்கே உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடியில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மேனாள் மாணவர்கள் கல்லூரிக்கு செய்துவரும் உதவிகள், மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை மிகவும் பாராட்டுக்குறியது’’ என்றார்.
வெளிநாடு செல்வோருக்கு புதிய வசதி
சான்றிதழ்களை இணையத்தில் சரிபார்க்கும் வசதி அறிமுகம்
சென்னை, செப்.23 வெளிநாடு செல்லும் மக்களின் வசதிக்காக, ஆவணங்களின் உண்மைத்தன்மையை இணையதளம் வழியாக சரிபார்க்கும் புதிய வசதியை வெளியுறவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், வெளிநாடு செல்வோரின் அலைச்சல் குறையும்.
வேலை, உயர்கல்வி அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்வோர், தங்களின் பிறப்பு, கல்வி, திருமணச் சான்றிதழ்கள் போன்ற பல்வேறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை வெளியுறவு அமைச்சகம் மூலம் உறுதி செய்ய வேண்டும். இந்தச் சான்றிதழ்கள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வெளிநாட்டு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் அவற்றை அங்கீகரிக்கும்.
இதுவரை இந்தச் சரிபார்ப்புப் பணிகளை, அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாகவே செய்ய வேண்டியிருந்தது.
தற்போது இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், விண்ணப்பதாரர்கள் நேரில் செல்லாமல், esanad.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தால், அதன் உண்மைத்தன்மையை வெளியுறவு அமைச்சகமே நேரடியாக உறுதி செய்யும்.
இந்த புதிய வசதிக்கு, 140 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் வெளிநாடு செல்வோருக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி எளிதாகும் என்று சென்னை வெளியுறவுத் துறை கிளைச் செயலகத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.