‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று அவதூறு பரப்பியவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில், முன்னேற்றம் கண்டுள்ளது. கண்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் பதிவினை, முகநூலில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
‘‘1994 இல் எழுதப்பட்ட முட்டாள்தனமான, ஆதாரங்கள் ஏதுமற்ற, ஒரு குப்பை நூல், அதில் உமிழப்பட்ட வஞ்சகக் கருத்துகள், தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக, போலி அறிவு ஜீவிகள் அல்லது சுயநல அறிவுப் பிழைப்புவாதிகள் சிலரையும், தற்குறித் தொண்டர்கள் சிலரையும் சொறிந்து விட்டது. அந்த நூல் எஸ்.குணசீலன் (குணா) எழுதிய ‘திரா விடத்தால் வீழ்ந்தோம்’ என்ற நூல்.
பார்ப்பனியத்தை நட்பு சக்தியாகவும், பெரியாரை எதிரியாகவும் கட்டமைத்த இந்நூலின் கருத்துகள்தான் இன்றளவும் இந்துத்துவ, சாதிய, போலி தமிழ்த்தேசிய, அடையாள குறுங்குழுவாத நபர்களுக்கு அடிப்படை நூலாக விளங்குகின்றது. இந்த நூலையேகூட படித்திராத சிலர், அதில் உமிழப்பட்டு அவதூறுகளாய் பரப்பப்பட்ட பொய்களை, தற்போது மேலும் மேலும் ஊதிப் பெருக்குகின்றனர்.
இந்துத்துவத்தை எதிர்த்து எழுதுகின்ற நபர்களுக்கு, கோடிக்கணக்கில் பணம் வருகிறது என்று ஜெயமோகன் முன்பு வன்மம் நிறைந்ததொரு பொய்யைச் சொல்லியிருந்தார். ஆனால், உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் திராவிடத்தை எதிர்த்து பேசுகின்றவர்களுக்குத்தான், அப்படிப் பணம் வருகிறது. அவர்கள் சகலவசதிகளுடன், சொகுசாகவும், பாதுகாப்புடனும் வாழவைக்கப்படுகின்றனர்.
ஆனால், முரண் என்னவெனில், பெரியாரிய திராவிடக் கருத்துகளை உள்வாங்கி, திட்டங்கள் ஆக்கி செயல்படுத்திய, செயல்படுத்துகிற தமிழ்நாடுதான் இன்றைக்கு இந்திய ஒன்றிய அளவிலேயே – வீழ்ந்துவிடாமல் – முதன்மையாக எழுந்து நிற்கிறது. இப்போதும் இவர்கள், அதே பொய்யை, சத்தம் போட்டு பேசுகிறார்கள்.
ஓயாமல் ஒன்றைச் சத்தமிட்டு உளறுகிறவர்களை, பைத்தியங்கள் என்று அழைப்பார்கள். ஆனால், சமூக அரசியலிலோ இன்று அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள்!’’ என்கிறது அந்தப் பதிவு.
நன்றி: ‘முரசொலி’, 23.9.2025