இன்றைய சமூகத்தில் பண வேட்டைக்காரர்கள் அதிகம் என்றாலும் வறுமையில் உழல்வோர் பலர் உண்டு. பெரும்பான்மையினர் அவர்களே!
வறுமைப் பிடியிலும்கூட, கொள்கையில் தலை தாழாச் சிங்கங்களாக வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் சமூகத்தில் – சரித்திரத்தில் பலர் உண்டு.
வறுமையாயினும் செம்மை என்பதைக் கடைப்பிடித்து நேர்மை, நாணயத்தை தம் மூச்சுக் காற்றாகக் கொண்டவர்களும் ‘குறிஞ்சி மலர்கள்’ போல் சமூகத்தில் ஆங்காங்கே சிலர் இருக்கவே செய்கிறார்கள்!
‘‘பண வேட்டையில் ஜெயித்த பலருக்கு ஒரு தவறான குறுக்கு வழிமுறைச் சிந்தனை அவர்களது உள்ளத்தில் ஒரு தொற்றுநோய் போல் தொற்றிக் கொள்ளுகிறது!’’
பணம் நம்மிடம் இருப்பதால், எதையும் செய்துவிட்டு, பணத்தின் வீச்சுகளால் எப்படியும், யாரையும் விலைக்கு வாங்கலாம்!
நீதியைக்கூட வளைத்து குற்றம் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் அல்லது குத்தகைக் குற்றவாளிகளாக சிலரை தக்க கூலி கொடுத்து, தாங்கள் இருக்க வேண்டிய சிறைக் கூண்டையும், தண்டிக்கப்பட்ட பிறகு இருக்க வேண்டிய சிறைக் கூட அறைகளைக்கூட சிலருக்கு ‘மேட் ஒவர்’ (Made over) – செய்து மாற்றி தக்கவிலை கொடுத்து தள்ளிவிட, குஷாலாக ராஜ நடை போடுகின்ற கொடுமையும் சகிக்க முடியாத ஒன்று!
‘பணம் பத்தும் செய்யும்’ என்று ஒரு பழமொழி உண்டே!
(‘பணம்’ என்ற திரைப்படத்தில்?) கலைவாணார் என்.எஸ். கிருஷ்ணன் எடுத்த திரைப்படத்தில்,
‘பணமே, பணமே’ என்ற ஒரு பொருள் பொதிந்த சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி அவர்களின் சிறப்புப் பாட்டு –
‘பணமே பணமே நீ எங்கே சென்றாய்?’ என்ற பல்லவியுடனே துவங்கும்.
அது ‘வெள்ளையாகக் கொஞ்சம் கருப்பாக மிகுதி’ என்று நடிகர்களுக்கு தரப்படுவதால் அதனைச் சேர்ந்தவர்களுக்கு பணத்தின் பலத்தால் விளம்பர வெளிச்சம்; விளம்பர வெளிச்சத்தில் அரசியல் சந்தையில் நுழைந்து, நாட்டை ஆளும் சக்ரவர்த்தியாக பெருமை பெற ஒரு பேராசை!
‘‘காசேதான் கடவுளடா?’’ என்பது பரவலாகி பணம்தான் வாக்கு வாங்கியாக (வாக்கு வங்கி அல்ல) அரசியலில் வலம் வரும் விசித்திர ஓட்டு வியாபாரம்!
ஒழுக்கக்கேடு தனி மனிதனில் தொடங்கி நாட்டின் மக்களாட்சியின் அமைப்பையே தகர்த்தெறியும் அளவுக்குப் போகும் தகாத போக்கு!
பதவி வேட்டைக்கான முக்கிய கருவிகள் வில் அம்பு துவங்கி ஏவுகணை, பதிக்கவைக்கும் கண்ணி வெடிகள் வரை ஏராளம்!
கார்ல்மார்க்ஸ் சொன்னதுபோல பெரும் பணத் திமிங்கலங்கள், சிறு சிறு வியாபாரிகளான மீன்களை விழுங்கி, ஜீரணம் செய்து விட்டு ஏகபோகமாக சாம்ராஜ்ஜியம் அமைத்து, சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியம் அடைந்து பரவசத்துடன் கோடி பணத்தை செலவழிக்க ஆடி, ஆடம்பர அரண்மனை கட்டுவதிலிருந்து அகிலத்தையே அரங்கத்திற்கு அழைக்கும் ஆடம்பர உச்ச திருமணத் திருவிழா, வாண வேடிக்கைகள்! அரசு நாயகர்கள் இதனைக் கண்டிக்காவிட்டாலும், தண்டிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் இத்தகைய அதி ஆடம்பர திருமணங்களுக்கு வரி போட்டு (திருமண மண்டபங்களுக்கு வரிபோடுவதைவிட முக்கியம் – இந்த ஆடம்பரத் திருமணங்களுக்கு அரசு வரி வசூலித்தால் அரசுகளின் நிதிப் பற்றாக்குறைகள்கூட ஓரளவு குறைக்க முடியுமே!)
பண வேட்டை நாளும் அதிகமாகி, வங்கிக் கொள்ளைகள், நகைக் கொள்ளைகள், திருடியவனைக் கண்டு பிடித்தால் அவன் அப்பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் வைத்து இழந்து விட்டான் என்று பதில் சொல்லும் விசித்திர நிலைமை போன்ற கேலிக் கூத்துகள் ஏராளம் – ஏராளம்.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?
(வளரும்)