சென்னை செப்.23 “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் செப்டம்பர் 25, 2025 அன்று, மாபெரும் கல்வி சாதனை கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஏழு முக்கிய அரசுத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
முக்கியத் திட்டங்கள்:
- நான் முதல்வன் திட்டம்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சிகளை வழங்குகிறது. இதுவரை 14.60 லட்சம் மாணவர்கள் 41 லட்சம் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இத்திட்டம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தால், மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் கல்வித் திறன் அதிகரித்துள்ளது.
- புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் (GER) அதிகரித்துள்ளது. 5.29 லட்சம் மாணவிகள் பயனடைந் துள்ளனர்.
- தமிழ்ப்புதல்வன் திட்டம்: 3.92 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு, அது கல்வி மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுகிறது.
- விளையாட்டு மேம்பாடு: விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 548 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெற்றிகரமான வீரர்களுக்கு ரூ. 150 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 75 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- சாதனையாளர்களுக்கு ஊக்க மளித்தல்: முதல் தலைமுறைப் பட்ட தாரிகள் உள்பட, திறமையான மாணவர்களுக்கு உயர்கல்விக்கு அரசு உதவி செய்கிறது. தருமபுரி, சென்னை போன்ற இடங்களிலிருந்து மாணவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க உதவி பெறுகின்றனர்.
- சிறப்புக் குழந்தைகள் சாதனை யாளர்கள்: சிறப்புத் தேவையுடைய 150 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைப் படிக்க வைத்ததற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களுக்கான நிதியுதவி வெளியீடும், மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 2.57 லட்சம் குழந்தைகள் இத்திட்டங்களால் பயன்பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிப் பயணத்தையும், அதன் சாதனைகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.