பெண்கள் தங்கள் வாழ்க்கை முறையை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். படித்த பெண்கள் வேலைக்காக மட்டும் படிக்காமல் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் திறனையும் அறிந்து செயல்பட வேண்டும். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும். என்ற தந்தை பெரியாரின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அவரது ஆட்சிக் காலத்தில் சட்டவடிவமும் தரப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு குடும்பங்கள் தாம் தீர்மானிக்கிறார்கள். அதற்கான காரணங்களை வலிமையாக வலியுறுத்தினாலும் திருமணத்திற்குப் பிறகான கடமைகள், பொறுப்புகளை முன்பே தெரிந்து கொண்டு அந்த வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வருவோமா என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். குடும்பங்கள் அனைத்தும் பெண்ணின் மீதே கட்டமைக்கப்படுகின்றன. ஆண்கள் வெளியே சென்று சம்பாதித்தாலும் குடும்பப் பராமரிப்பு பெண்ணிற்கு உரியதாகத்தான் இன்றுவரை உள்ளது. அதாவது குழந்தை பிறப்பு முதல் அதை வளர்த்துப் பராமரிக்கும் பணியைத்தான் முதன்மையான கடமையாகக் கருதி பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கிறார்கள். இங்கு ஆண்கள் பெரும்பாலும் சுதந்திரமாகத் தாம் இருக்கிறார்கள். இந்த முறையைப் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
திருமணத்திற்கு முன்பு பொருளாதாரத் தற்சார்பு நிலைக்கு பெண்கள் வந்த பின்பே திருமணமோ, குழந்தைப் பேறோ இருக்கும்படி ஒவ்வொரு பெண்ணும் உறுதியான மனநிலையில் இருக்க வேண்டும். தானாக இந்த மன உறுதி வந்து விடாது. அதற்கான புத்தகங்கள், வாழ்வியல் முறைகள் போன்றவை நூலகங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களை குறைந்தபட்சம் வாசிக்க வேண்டும்.
குடும்ப வன்முறைகள் அதிகம் பத்திரிகைகளில் செய்தியாக வருகின்றன. காரணம் பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாத இடங்களில் இத்தனைத் துயரங்கள் இருப்பதைக் கண்கூடாகத் தெரிந்து கொள்ள முடியும். ஏன்? எதற்கு? என்ற பெரியாரின் சிந்தனைகள் பெண்களுக்கு ஓர் ஊன்றுகோல். எதையும் கேள்வி கேட்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தி வந்ததன் உண்மை புரியும். எந்த இடத்தில் பெண்கள் பேசாமல் இருக்கிறார்களோ அந்த இடம் தான் திருமணம். திருமண ஏற்பாட்டிற்கு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒரே தகுதி இருக்க வேண்டும். தரமான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தற்சார்பு அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். பெண் வீட்டில் தரப்படும் வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டு திருமண வாழ்க்கைக்குள் போக நினைப்பதே மாபெரும் தவறாகும்.
அதிக வலிகளைத்தான் தரும்
காதல் திருமணமோ, ஏற் பாட்டுத் திருமணமோ எதற்காக இருந்தாலும் பொருளீட்டாமல் திருமண பந்தத்திற்குள் செல்லாமல் இருப்பது சமூகத்திற்கு நல்லது. படித்த பெண்கள் முதுகலைப் பட்டம் வாங்கிவிட்டு வேலைக்குப் போகாமல் இருந்து கொண்டு அந்தக்காலப் பெண்களைப் போல இருக்கலாம் என்பது அறியாமைதான். இந்தக்கால வாழ்வியல் முறைகள் மாறி விட்டன. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைக்கும் தன்மையைப் பெண்கள் அதிகம் தெரிந்து கொள்ளாவிட்டால் இந்த திருமண முறை பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் அந்த சமூக நிர்ப்பந்தம் அதிக வலிகளைத்தான் தரும். எந்த ஒரு விசயத்திற்கும் ஓராயிரம் முறை யோசிக்கும் பெண் கள் திருமண பந்த்தத்திற்குள் போகும் முன் நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
அன்பு, பாசம், நேசம் இவை யெல்லாம் திருமண வாழ்க்கைக்குத் தேவையில்லாத ஆணிகள்! இதை நம்பிக்கொண்டு திருமண ஏற்பாட்டிற்குள் இத்தனை காலமும் பெண்கள் – ஆண்கள் இருபாலரும் சிக்கி சின்னாபின்னமான கதைகள் வெளியே தெரிவதில்லை என்பது பெரும்பாலும் உண்மை. பெரும்பாலான மனிதர்கள் இதைச் சொல்வதை விரும்பமாட்டார்கள். இங்கு நடக்கும் வரதட்சணைக் கொடுமை அதைச்சார்ந்த தற்கொலை கள், கொலைகள், அனைத்திற்கும் பெண்கள்தான் பலியாகிறார்கள். தண்டிப்பதற்குச் சட்டம் இருந்தாலும் இந்தப் பந்தத்திற்குள் செல்வதற்கான பழமையான முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
திருமணத்திற்கு ஜாதகம் பார்த்துப் பொருத்தம் பார்க்கும் ஏமாற்று வேலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த ஜாதகத்தால் நல்ல படித்தவர்கள், வேலை பார்ப் பவர்கள் வாழ்க்கையில் இணைய முடிவதில்லை. ஏதோ ஜாதகப் பொருத்தம் உள்ளவர்கள் அவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, ஜாதகம் பொருந்திவிட்டது என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன்பின் வரும் துன்பம் துயரம் அனைத்தும் மிகமிக மோசமான கட்டமைப்பு என்பதை உணர வேண்டும். ஊரில் பக்கத்து வீட்டு ஜோசியக்காரர் வசதி வாய்ப்பானவர். தன் ஒரே மகளுக்கு ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். வயிற்றில் ஆறுமாதக் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். இன்றுவரை கணவர் வீட்டிற்குப் போகவில்லை. இதில் வேடிக்கை என்ன வென்றால் இன்னும் ஜோசியக்காரர் வீட்டில் கூட்டம் குறையவில்லை. காரணம் ஏன்? எதற்கு? என்ற கேள்வி அங்கு இல்லை.
உழைக்காமல்,
ஆடம்பர வாழ்க்கையா?
அடுத்து பெண்கள் வரதட்சணை தர வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர் களை இந்த பெண்வீட்டார் நம்புவது இல்லை; ‘காசு பணம் வேண்டாம் என்று சொல்பவர் நோயாளியாக இருப்பார் ‘ என்ற நினைப்பு எத்தனை அற்பத்தனமானது; இன்னொரு முக்கியமான விசயம். காசு பணம் வாங்காமல் வாழும் மனிதர் நல்ல சமூகத்தினை உருவாக்குபவர் என்ற உயரிய சிந்தனை இருக்க வேண்டும். ஆணோ பெண்ணோ உழைக்காமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஒருவரை ஒருவர் நிர்பந்திப்பது போன்ற மோசமான வாழ்க்கை முறையும் கேள்விகளுக்கு உட் படுத்தப்பட வேண்டும்?
திருமண பந்தத்தில் இருவரும் உழைக்க வேண்டும். தங்களுக்கான வாழ்க்கை முறைகளுக்கு தடையாக இருக்கும் விசயங்களை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். உண்மையான புரிதலுடன் பாலின சமத்துவத்துடன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைக் கொண்டு சென்றால் இங்கு சமூகம் நலமாகும் நல்ல மாற்றங்களை மனித குல வாழ்வில் தந்தை பெரியாரின் உயரிய சிந்தனைகளான ஏன்!? எதற்கு? என்று கேள்வி கேட்டு வாழ்க்கையை வளமாக்கு வோம்.
– விஜி, திண்டுக்கல்