விவேகானந்தரை குமரிமுனையில் நிறுவினார்கள், விவேகானந்தரைப் போற்றுவதற்காக அல்ல – இந்தியா மனுதர்மத்தின் தேசம் என்று குறிப்பால் உணர்த்துவதற்காக!
ஆனால், கலைஞர் அவரை விட வானுயர வள்ளுவனை நிறுவி, இந்த மண் சனாதனவாதிகளுக்கானது அல்ல; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்துக்கானது என்று உணர்த்தினார்.
மூலைக்கு மூலை, கடைக்கு கடை இராமாயணமும், கீதையும், எந்த ஒரு முற்போக்குச் சிந்தனையுமின்றி கொச்சை மொழிபெயர்ப்பு சுலோகங்களாக தொங்கிக்கொண்டு இருந்தன. அதில் எந்த வாழ்வியல் சிந்தனையும் கிடையாது, முற்போக்குக் கருத்தும் கிடையாது.
அந்த இடத்தில் திருக்குறளைக் கொண்டுவந்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும், பொருளோடு குறளைக் கொண்டுவந்தார். இரண்டு வரியில் பள்ளிக்குழந்தைகளும் படித்து மகிழ்ந்தனர்.
இராமாயணமும் மகாபாரதமும் மட்டுமே இந்தியாவின் இலக்கியங்கள் என்று அதற்கென பக்கம் ஒதுக்கி நாளிதழ்கள் கூட பொழிப்புரைகள் எழுதிவந்தன,
அந்த இடத்தில் தமிழரின் வாழ்வியல் பெருமைகளை உலகம் காணச்செய்தார். அந்த அலையில் நாளிதழ்களில் இருந்து சுலோகங்களின் பொழிப்புரைகள் காணாமல் போனது.
அவர் ஒரு காப்பரண், தந்தை பெரியாரின் மாணவர், அறிஞர் அண்ணாவின் தம்பி. – அவருக்குத் தெரியும் எதிரிகளின் கணைகளின் வேகம். அதை எதிர்த்துக் களத்தைப் பலப்படுத்தும் முன்பு பாதுகாப்பரண் தேவை என்பதை அவர் தன்னுடைய செயலில் காட்டினார்.
தொடர்ந்து எதிர்த்தார்கள், இறுதிவரை எதிர்த்தார்கள், மறைந்த பிறகும் நீதிமன்றத்தில் வென்ற ஒரே தலைவர் கலைஞர்தான். அவர்கள் கலைஞரை எதிர்க்கவில்லை, கலைஞர் சுமந்து வந்த திராவிடச் சிந்தனைகளை, பெரியாரின் ஆணைகளை, அண்ணாவின் ஆலோசனைகளை எதிர்த்தார்கள்.
நேரடியாக எதிர்க்காதவர்கள் விலைபோனவர்களின் மூலமாக விதைத்தார்கள் நச்சு விதையை! அதை உரமாக்கித் தமிழ்நாட்டை உயர்த்திக்கொண்டே வந்தார்.
கலைஞர் என்ற பட்டத்திற்கு எக்காலமும் பொருத்தமானவர்…..
அவர்தான் கலைஞர்! அவரது நூற்றாண்டு இது! இன்னும் பல நூறாயிரம் ஆண்டுகள் அவர் புகழ் நிலைக்கும்!
– சரவணா ராஜேந்திரன்