லண்டன், செப். 23- இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்கா புறக்கணிக்கும் நிலையில், அவர்களை கவர பிற நாடுகள் களத்தில் குதித்து இருக்கின்றன. இதில் சீனாவை தொடர்ந்து இங்கிலாந்தும் கவனத்தை திருப்பி இருக்கிறது.
“இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு திறமை பணிக்குழு அதற்கான பணிகளை வேகப்படுத்தி இருக்கிறது. சுமார் ரூ.640 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்ட இந்த குழுவினர், இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த உலகின் முன்னணி அறிவியல் தொழில்நுட்ப திறமையாளர்களை இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான திட்டங்களை தீட்டி வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
குறிப்பாக உலகின் முதல் 5 இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், உயரிய விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட திட்டங்களும் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரம்
பங்கு சந்தை வீழ்ச்சி-ரூபாய் மதிப்பு சரிவு
மும்பை, செப். 23- அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்1-பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ நேற்று (22.9.2025) 466 புள்ளிகள், அதாவது 0.56 சதவீதம் சரிந்து 82 ஆயிரத்து 159 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 124 புள்ளிகள் (0.49 சதவீதம்) சரிந்து 25 ஆயிரத்து 202 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.