சென்னை, செப்.22 நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல – திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,
நேற்று (21.9.2025) நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் மறைவுற்றார். அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:
நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் அவர்கள் தனது 80 ஆவது வயதில் மறைந்தார் என்பது, இந்தக் குடும்பத்திற்கு மட்டும் உரிய சோகச் செய்தி அல்ல. திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வாகும்!
நடிகவேள் பெயரில் மன்றம் அமைத்தவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் அவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா பெயரில் மன்றம் அமைத்தவர்.
காரணம், நடிகவேள் அவர்கள் சிறையில் இருந்த காலத்திலும் சரி, அவர்கள் வெளியில் இருந்த காலத்திலும் சரி, அவருக்குத் துணையாக இருந்ததோடு, தந்தை பெரியார் அவர்களோடும் அந்த அம்மையார் அவர்கள் மிகுந்த பாசத்தோடு, நேசத்தோடு இருந்தவர்கள்.
அதோடு மட்டுமல்லாமல், அன்பிற் குரிய ராதிகா அவர்களின் தந்தை நடிகவேள் எப்படி நெருக்கமோ அதேபோல, திரு.சரத்குமார் அவர்களுடைய தந்தையும், நாங்களும் மிக நெருங்கிய நண்பர்கள்.
வருத்தத்திற்குரியது!
அப்படிப்பட்ட ஓர் உறவுக் குடும்பம், நட்புறவுக் குடும்பத்தில் இப்படி ஓர் இழப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது; என்றாலும், இயற்கையை நினைத்து ஆறுதல் அடையவேண்டும். – இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.