பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது பார்ப்பனர்களின் விஷமப்பிரச்சாரத்திற்கு தீனி போட்டதாகிவிடும் என்பதை உணர்ந்த பெரியார் அவர்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 14.5.1953 அன்று வெளிவந்த விடுதலை தலையங்கம் அதை தெளிவு படுத்தியது.
“திராவிடர் கழகத்தில் ஏராளமான முஸ்லிம் கிறிஸ்தவ தோழர்கள் உறுப்பினர்களாகவும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் இத்தனை ஆயிரம் நபர்களும் பெரும்பாலும் நாஸ்திகர்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும். மசூதிக்குச் செல்லாத முஸ்லிம் இளைஞர்களும், மாதா கோயிலுக்கு செல்லாத கிறிஸ்தவ இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். திராவிடர் கழக உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர அனுதாபிகளாக இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பகுத்தறிவாளர்களான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏராளமாய் இருக்கின்றனர்.
ஆனால் 27ஆம் தேதி அன்று நடைபெறப் போகும் கிளர்ச்சியில் மட்டும் இவர்கள் நேரடியாக பங்கு பெறாமல் இருப்பது தான் நல்லது என்பது நம் கருத்து. ஏனெனில் இத்தகையோர் ஆரிய மத ஆபாசங்களை உதறித் தள்ளி விட்டு வெளியேறியவர்களின் சந்ததிகளாவார்கள். குறிப்பாக கிருஷ்ணன், விநாயகர், ராமன், சிவன் போன்ற ஆபாச கடவுள்களின் லீலைகளை கேட்க சகிக்காமல் ஆரிய மதத்தை விட்டு வெளியேறியவர்களே பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆதலால் இத்தகையோர் விநாயகர் உருவ உடைப்பு கிளர்ச்சியில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று தெரிவித்துக் கொள்கிறோம். இது அவசியம் இல்லாதது என்பதுடன், எதிரிகள், வைதீகர்கள், அக்கிரகாரவாசிகள் ஆகியோரின் விஷமப் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டு விடக் கூடும் என்றும் கருதுகிறோம். ஆதலால் பிற மதத்தவர்கள் என்று கூறப்படுகின்ற திராவிட கழகத் தோழர்கள் அனைவரும் கருத்து ஆதரவு கொடுத்தால் போதும். பொதுக்கூட்டங்களில் ஏராளமாக கலந்து கொள்வது மட்டும் போதும்.” என்றது.
பிள்ளையார் உடைப்பு போராட்டத்திற்கு ஒரு வார கால இடை வெளியே இருக்க, மே 20ஆம் தேதி வெளிவந்த விடுதலையில், தஞ்சை தாலுக்கா சுயமரியாதை மாநாடு மே 24ஆம் தேதி நடைபெறும் என்றும் சாமி கைவல்யம் படத்தை தந்தை பெரியாரும், பட்டுக்கோட்டை அழகிரி படத்தை ஏ.பி.ஜனார்த்தனமும், சிங்காரவேலர் படத்தை ஜீவாவும் திறந்துவைக்க உள்ளதாகவும் செய்தி வெளியிட்டது. விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வோரின் பட்டியல் ஊர் வாரியாக தினந்தோறும் விடுதலையில் வெளிவந்தது.
“விநாயகர் உடைப்பு – ஆஸ்திக உலகின் பெரும் கலக்கம்! தங்கள் தெய்வத்தின் தெய்வீகத்தை நம்பாது சர்க்காரிடம் அபயம்!” என்று 21 ஆம் தேதி விடுதலை தலைப்பு செய்தியோடு வெளிவந்தது. ஆச்சாரியார் குட்டிக்கதைகள் கூறி மக்களை கண் துடைக்க முற்படலாம். ஆனால் ஆஸ்திக உலகமோ இந்த விநாயக உடைப்பு நடவடிக்கையை கண்டு தங்கள் ஆஸ்திக கோட்டையில் தீப்பற்றிக் கொண்டது போல் கலங்குகின்றனர்; பதறுகின்றனர். ஆனால் பிள்ளையாருக்கு ஏற்பட்ட ஆபத்தை தடுக்க அந்த விநாயக ரிடமும் அல்லது மற்ற பக்தவச்சலா தெய்வங் களிடமும் முறையிடாது ஆட்சியாளரிடமே அபயம் அடைகின்றனர் ஆத்திக சிகாமணிகள்! என்று கிண்டலடித்தது.
23ஆம் தேதி விடுதலை தலையங் கத்தில், புத்தர் பிறப்பு மற்றும் பிள்ளையார் வருகை வரலாற்று ரீதியாக விளக்கி எழுதப்பட்டிருந்தது.
“27ஆம் தேதி புதன் கிழமை அன்று ஆரிய எதிர்ப்பு வீரரான கவுதம புத்தர் பிறந்த நாள். இவர் சத்திரிய வகுப்பில் பிறந்தவர் என்று பார்ப்பனர் கூறுகின்றனர். புத்தர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 653 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அதாவது 2576 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக வரலாறு கூறுகிறது. ஆரிய இந்து மதத்தை ஒழித்து ஜாதியையும் ஒழிப்பதற்காகவே இவர் தம் அரச பதவி, மனைவி, மக்கள் ஆகியோரைத் துறந்து 45 ஆண்டுகள் பிரச்சாரம் செய்து இந்தியாவெங்கும் தம் கொள்கையைப் பரப்பிவிட்டு எண்பதாவது வயதில் நேபாள பகுதியில் கூசிநாகரா என்ற இடத்தில் காலமானார்.
தமிழ்நாட்டில் இன்று காணப்படும் சைவ வைணவக் கோவில்கள் முழுவதும் முன்பு பவுத்தப் பள்ளிகளாக இருந்ததை எல்லா சைவ வைணவ பக்தர்களும் ஒப்புக் கொள்வது மட்டுமல்ல இன்றைக்கும் தஞ்சை காஞ்சிபுரம் போன்ற பல ஊர்களிலும் கோயில்களிலேயே காணலாம். இதற்கு ஏராளமான அகச்சான்று புறச்சான்றுகள் இருக்கின்றன.
ஆரியமதமான பார்ப்பனீயமும் அதன் பிள்ளைகளான சைவ வைணவ மதங்களும் புத்தக் கொள்கைக் காரர்களை எதிர்த்து ஒழிக்காதிருந்திருந்தால் இந்த நாட்டில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் மருந்துக்குக் கூடக் கண்டுபிடித்திருக்க முடியாது. ஓரளவேனும் முற்போக்கு கருத்துகளைக் கொண்ட மேற்கண்ட இரு மதங்களும் வேரூன்றியிருக்கின்ற சமுதாயத்திடையே ஆரிய மதம் பரவுவது எப்படி முடியாத காரியமோ அது போல், இவ்விரு மதங்களை விடப் பல மடங்கு முற்போக்குக் கருத்துகளை கொண்டிருப்பதான பவுத்த இயக்கம் பரவியிருக்கும் இடங்களில் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆரியம் ஆகிய மூன்று மதங்களும் பரவ முடியாது.
கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல் ஒழுக்கம் எதையும் கிறிஸ்து புதிதாகக் கூறவில்லை என்று பெர்ரண்ட் ரஸ்ஸல் என்ற பேரறிஞர் 1927 ஆம் ஆண்டிலேயே லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் கூறியிருக்கிறார்.
இப்பேற்பட்ட அறிவு இயக்கத்தை அறவே ஒழித்துக் கட்டிவிட்டது இந்த நாட்டில் புகுந்த ஆரியம். இந்த ஆரியத்தை ஒழிப்பதற்கு கச்சையை வரிந்து கட்டி நிற்பது தான் திராவிடர் கழகம். ஆரியத்தைச் சுட்டுப் பொசுக்கிய சாம்பலில் அறிவு நீர் பாய்ச்சி, அதில் பொதுவுடைமை விதையை ஊன்றினால் தான் அது செடியாக மரமாக வளர்ந்து, ஏழை மக்களுக்கு பலன் தரும். இல்லாவிடில் ஆரிய வெப்பம் தாங்காது கருகிப்போகும். ஆதலால் தான் 27ஆம் தேதி என்று ஒரு சிறு ஒத்திகை நடக்கப்போகிறது பிள்ளையார் உருவ உடைப்பு கிளர்ச்சி மூலம்!
இந்த கிளர்ச்சியை கண்டு அறி வுள்ளோர் ஆத்திரப்பட மாட்டார்கள். ஏனெனில் பிள்ளையார் தமிழர்களின் கடவுள் அல்ல. சங்க இலக்கியங்களில் பிள்ளையார் இல்லை. குறிப்பாக தமிழரின் திருமறை என்று கூறப்படுகின்ற திருக்குறளில் விநாயகர் காப்போ, கணபதி வணக்கமோ கிடையாது. இந்தப் பிள்ளையார் தமிழ்நாட்டில் புகுந்த ஆண்டு கி.பி 650 ஆகும். அதாவது 1330 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி அய்ந்தாம் நூற்றாண்டில் விநாயக வழிபாடு வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. மராட்டிய நாட்டிலும் சிறிது பரவி இருந்தது.
பல்லவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற பேரரசனின் மகன் நரசிம்மவர்மன் அவனுடைய தளபதி நரசிம்மன் இவனது ஆட்சி காலம் கிபி 630 முதல் 668 வரையில். பரஞ்சோதி என்ற சிறு தொண்டன் மலைச்சாமி மீது படையெடுத்து அவர்களது தலைநகரான வாதாபியை அழித்தது 642 ஆம் ஆண்டில். அக்காலத்து வழக்கப்படி தோல்வியுற்றோரின் நாட்டில் இருந்த கடவுள் உருவங்களில் ஒன்றாகிய யானை முகம் கொண்ட விநாயகரை கொண்டு வந்து தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் (தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கின்ற சிற்றூர்) நாட்டினார் பரஞ்சோதி. இது நடந்தது 650 ஆம் ஆண்டு. இவர்தான் வாதாபி கணபதி என்று அழைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் என்ற கிராமத்தில் உள்ள குன்றின் குகைகள் ஒன்றில் காணப் படுகின்ற விநாயகர் உருவமும் அது பற்றிய கல்வெட்டும். மகேந்திரவர்மன் (615 – 630) காலத்தில்தான் முதன் முதல் விநாயகர் தமிழ்நாட்டில் புகுந்தார் என்பதை காட்டுவதாக வேறு சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
ஆகவே கி.பி.630 அல்லது 650ஆம் ஆண்டில் புகுந்த இந்த ஆபாச உருவத்தை காப்பாற்றுவதற்காக இத்தனை ரத கஜ துரக பதாதிகள் புறப்படுவானேன்? இதை உடைத்து நொறுக்குவதில் உண்மை தமிழர்கள் பின்வாங்கலாமா?
புத்தருக்குப் பின்னால் 1273 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நுழைந்தவர் விநாயகர். புத்தர் உலகம் போற்றும் உத்தமர்! விநாயகர் உலகத்தார் காரி உமிழ்கின்ற உருவத்தைக் கொண்டவர்! புத்தரைப் பின்பற்றும் மக்களிடையே ஜாதி கிடையாது! விநாயகரை வழிபடுகின்ற மக்களிடையே பல்லாயிரம் ஜாதிகள்! புத்தர் ஒப்பற்ற தியாகி! விநாயகர் (புராணக் கதைகளின்படி) கோட்சே பார்ப்பனரைவிட படு மோசமான கொலைகாரன்! புத்தர் வரலாறு கண்ட கர்ம வீரர்! விநாயகர் காளிகள் கட்டிவிட்ட கற்பனையின் பிறப்பு! புத்தர் பார்ப்பனியத்தின் கோடரி! விநாயகர் பார்ப்பனியத்தின் பாதுகாப்பு அரண்!
இப்பேர்ப்பட்ட ஆபாச கற்பனை உருவத்தை உடைக்க வேண்டும் என்பது திராவிட கழகத்தார் முடிவு. போலித் தமிழர்கள் விநாயகர் வரலாறு தெரியாத தமிழர்கள் அக்கிரகார ஆரியர்கள் 27ஆம் தேதி அன்று எப்படியோ நடந்து கொள்ளட்டும். உண்மை தமிழர்களே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறுகின்ற ஆஸ்திக தமிழர்களே! 27ஆம் தேதி அன்று உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! செய்கையில் காட்டுங்கள்! என்று எழுதி சிந்திக்கத் தூண்டியது.
மே 24 ஆம் தேதி தஞ்சையில் சுயமரியாதை மாநாடு ஊர்வலத்தோடு தொடங்கியது. ஊர்வலத்தில் அக்னி சட்டி ஏந்தியும், தீமிதித்தும் தெய்வீக பித்தலாட்டத்தை கழக தோழர்கள் அம்பலப்படுத்தினர். மாநாடு தொடக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கழகக் கொடியேற்றி உரையாற்றினார்,
அவர் தனது உரையில், “இந்நாட்டில் கழக லட்சியம் வெற்றியடைய வேண்டுமானால், கழகக் கொள்கையில் தோழர்கள் உறுதியாக நின்று திராவிட தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஒன்றுபட்டு கட்டுப்பாடாக நின்று பணியாற்ற வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார். “மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்படாமல் கொள்கையில் உறுதியுடன் நின்று கருஞ்சட்டை அணிந்து கொள்கைப் பிடிப்பைக் காட்ட வேண்டும்!” என்று வற்புறுத்தினார். “பெரியார் ஆணையை என்றும் ஏற்று அதன்படி தான் நடக்கத் தயார்!” என்பதாக உறுதி கூறியதுடன் கழகத் தோழர்களும் இந்த படி உறுதியாக இருக்க வேண்டும் என்றார். மாநாட்டில் புத்தர் மாநாடு, உருவ வழிபாடு ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
விடுதலையில் வந்த மற்றோர் செய்தி, “பிள்ளையார் உடைப்பு போராட்டத்தினால் பொது ஜன அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் ஆகவே இந்தப் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதுரை திருவருள் தவநெறி மன்றத்தின் சார்பாக ஒரு மனு கொடுத்திருப்பதாக தெரிகிறது” என்றது. “பிள்ளையார் சிலை உடைப்பு போராட்ட நாளான 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆஸ்திக அன்பர்கள் யாவரும் அவரவர்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் விநாயகர் அகவலை பாராயணம் செய்ய வேண்டும்” என்று மாயூரம் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டியார் வேண்டுகோள் விடுத்திருந்ததை ‘விநாயகரை வைதீகம் காப்பாற்றுகிறது” என தலைப்பிட்டு மற்றொரு செய்தியும் வெளியிட்டிருந்தது.
பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை எதிர்த்து சிலர் பெரியார் உருவத்தை உடைக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வர அப்படி ஒரு வேளை நடந்தால் அதற்கு தோழர்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என திராவிடர் கழக செயலாளர் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை 24 ஆம் தேதி விடுதலையில் வெளியானது.
பிள்ளையார் சிலை உடைப்பைக் கண்டித்து சென்னை சிவனடியார் கூட்டம் சுதேசமித்திரனில் 21ஆம் தேதி எழுதியதற்கு விடுதலை மறுநாளே பதிலடி கொடுத்தது.
“விநாயகர் உருவ உடைப்புக்கு எதிராக அன்று பெரியார் உருவம் உடைக்கப் போவதாக சில பத்திரிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. சில பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர்களும் பார்ப்பன கூலிகளும் இந்தப் படி செய்யும்படி தூண்டி வருகிறதாகவும் தெரிய வருகிறது. அந்தப் படி 27 ஆம் தேதி எங்காவது பெரியார் உருவம் உடைக்கப்படுமானால் கழகத் தோழர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதுடன் அதை மதிக்கவும் தேவையில்லை என்பதோடு அந்தக் காரியத்திற்கு எவ்வித சிறு தடை கூட செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் அந்த மாதிரியான கூட்டத்திற்கு கழகத் தோழர்கள் கண்டிப்பாக வெறும் காட்சியாளர்களாகக் கூட செல்லக்கூடாது என்பதோடு எவ்வித கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் காரணஸ்தர்களாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு சமயம் குழப்பத்திற்கும் கலவரத்திற்கும் கழகத் தோழர்கள் யாராவது காரணஸ்தர்களாக இருந்தார்கள் என்று தெரிய வருமானால் அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!” என்று எச்சரித்தது.
‘விடுதலை’ 25.5.1953ஆம் நாள், “27ஆம் தேதி பற்றிய முக்கிய குறிப்புகள்!” என்ற தலைப்பில், “பிள்ளையார் உடைப்பு பிரச்சார கிளர்ச்சியை 27 ஆம் தேதியான புத்தர் பிறந்த நாள் தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இக் கிளர்ச்சியில் மட்டும் முஸ்லிம் கிறிஸ்தவ பகுத்தறிவு தோழர்கள், சுயமரியாதை தோழர்கள் ஒதுங்கி நிற்கும்படி வேண்டுகிறேன். ஆரிய மதத்தில் பிறந்த கழகத் தோழர்களும் பொதுமக்களும் மட்டுமே கலந்து கொள்வதுதான் எதிரிகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு இடம் தராமல் இருக்கும்!” என்ற ஒரு அறிவிப்பு மத்திய திராவிடர் கழக செயலாளர் பெயரில் வெளிவந்தது.
திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் 27ஆம் தேதி புதன் மாலை 6 மணிக்கு டவுன்ஹால் முன் நடைபெறும். தி.போ.வேதாச்சலம் தலைமையில் பெரியார் ஈவெரா அவர்கள் மற்றும் பலரும் பேசுவார்கள். மாலை 5 மணிக்கு மணிக்கூண்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு டவுன்ஹால் முன்பு பிள்ளையார் பொம்மை உடைப்பு நடைபெறும் என்ற செய்தியும் வெளியானது.
திட்டமிட்டபடி 27 ஆம் தேதி தமிழகத்தின் மய்யப் பகுதியில் புகழ் மிக்க உச்சிப்பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படும் மலைக்கோயில் அமர்ந்துள்ள திருச்சி மாநகரில் படு களேபரமாக நிகழ்ச்சி தொடங்கியது! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட களம்காண தோழர்கள் கருஞ்சட்டையுடன் திருச்சி நோக்கித் திரண்டனர்.
புத்தர் நினைவுநாள்! அதோடு கூடிய வினாயகர் சிலை உடைப்பு! தோழர்களிடையே உற்சாகம் கரை புரண்டது. திருச்சி மணிக்கூண்டிலிருந்து மாபெரும் ஊர்வலம்! பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் அணிவகுக்க, ஆரியத்தின் வேரறுக்கப் பிறவி எடுத்து வந்த ஆரிய வைரி புத்தர் பெருமானின் உருவம் வரையப்பட்ட பெரும் பதாகை பொருத்திய வாகனம் முன்னே ஊர்ந்து சென்றது. ஓர்வல வழி நெடுகிலும் புத்தர் வகுத்த வழிபாடுகள் ஓங்குக! புத்தர் கொள்கைகள் ஓங்குக! உருவ வழிபாடுகள் ஒழிக! சிலை வணக்கம் ஒழிக! பெரியார் வாழ்க! எனத் தோழர்கள் தொடர் முழக்கமிட்டனர். கழகத் தோழர்களைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பேரணியில் அணிவகுத்தனர். தெருக்களின் இரு மருங்கிலும் பார்வையாளர்களாக திரண்டிருந்த மக்களும் ஊர்வலத்தைத் தொடர்ந்த படி மேடை நோக்கிக் குவிந்தனர்.
பேரணி டவுன்ஹாலை சென்ற டைந்தது. கணபதி ஒழிக! உருவ வழிபாடு ஒழிக! என லட்சம் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை முட்ட பல்லாயிரக் கணக்கான பிள்ளையார் சிலைகள் சுக்கு நூறாகி தெறித்தன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் காட்சியை, “பெரியார் பிள்ளையார் சிலை உடைத்த காட்சி – மக்கள் கடலின் மகிழ்ச்சி!” என விடுதலை மிகுந்த உற்சாகத்தோடு செய்தி வெளியிட்டது.
பிள்ளையார் சிலை உடைப்பைத் தொடர்ந்து பெரியார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோழர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த திருச்சி நீதிபதி, களிமண் கடவுள்களை உடைப்பது தவறல்ல! என்று சொல்லி தள்ளுபடி செய்தார். வழக்கு அப்பீல் போகவே, “சம்பந்தப்பட்ட பிள்ளையார் உருவம் வழிபாட்டில் உள்ள கடவுள் உருவமல்ல. அது அவருடைய சொந்த சொத்து ஆகிறது. அதை அவர் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தவோ அல்லது அழிக்கவோ செய்யவும் உரிமை உண்டு” என்று அப்பீல் மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிபதி மீண்டும் வழக்கைத் தள்ளுபடி செய்தார். (விடுதலை 13.1.1954)
ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்த கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்!! என்று சொல்லி பெரியார் தானே முன்னின்று நடத்திக் காட்டிய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல். பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட நாளை (மே 27!) மனதில் நிறுத்துவோம்!
தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!