சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு அறைகூவல் விடுவதற்கு மூன்று பெரும் வேட்டைகள் நாட்டில் படமெடுத்தாடுகின்றன!
- பண வேட்டை
- பதவி வேட்டை
- புகழ் வேட்டை
மனித குலத்தின் துவக்க சமூக வாழ்வு மிருகங்களை வேட்டையாடி, அதில் கிடைத்த வற்றை உண்டு வாழ்ந்த காடு – நாடு என்று பேதப்படுத்தாத ஒரு சமூக வாழ்வு.
அந்த ‘Hunter – Gatherers’ – என்ற வேட்டை நிலைக்குப்பின், அடி நாளில் மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, காடுகளைத் திருத்தி, கழனிகளாக்கி, வேளாண்மையைக் கண்டறிந்தான்.
ஆடு, மாடு மேய்த்தும் வேட்டையாடியும் நாடோடிகளாகவும் திரிந்தவர்களுக்கு நிலைத்து நின்ற உழவுப் பணிகள் வியப்பைத் தந்ததோடு, அவர்களுக்கு இது பழக்கமில்லாததால் அய்யோ பூமாதேவியை பிளப்பதா என்று கூறி, விவசாயத்தை வெறுத்து ஒதுக்கினர். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. உடலுழைப்பின்றி மேய்ச்சல் மூலம் ஒரு வகை சோம்பேறி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆதிக்கவாதியாளர்.
விளைச்சல் அமோகமாகி தன்னிறைவைத் தாண்டிய கட்டம் வந்து விட்டது!
தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் உற்பத்தி, லாபம் இவை மூலம் சமூகத்தில் முதல் வாய்ப்புப் பெற்றவர்கள் மற்றோரை அடக்க இந்த பணவேட்டை ஆதிக்கமே முழு முதற் கருவியாக நாளடைவில் கிடைத்தது.
ஆதிக்கவாதிகள் தாங்கள் மற்றவர்களை பிரித்து பேதப்படுத்தி உயர்ந்தவர்களாகி மற்றவர்களை அடிமையாக்கினார்.
ஒழுக்க முறைகளுக்காக ஏற்பட்டதலைமை ஆதிக்க பீடமாகியது.
ஜார்ஜ் ஒர்வெல் (George Orwell) என்பவர் ‘Animal Farm’ என்ற பெயரில் ஒரு சமூகத்தைப் பற்றி எழுதிய உருவகப் புதினத்தில் ஓர் அருமையான சொற்றொடர்
‘‘விலங்குகள் எல்லாம் சமம்தான் ஆனால் ஒரு சில விலங்குகள் சமத்திற்குச் சற்று மேலானவர்’’ என்று ஆரம்பிக்கும் (All animals are equal; but some animals are more equal than others) இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் இன்று பெருகிக் கொண்டு உழைக்கும் மக்களைப் பிரித்து பேதப்படுத்தி, சிதைத்து சின்னாபின்னாபடுத்தி ‘ஜனநாயக’ ஏற்பாட்டிலும்கூட உழைத்தோ, உழைக்காமலோ, குறுக்கு வழிகளிலோ, திருட்டு, புரட்டு, கொள்ளை மூலமோ எப்படியோ பணத்தை சேர்த்து விடுதே தங்கள் வாழ்வின் இலக்கு என்று வாழ்கிறார்கள்.
‘‘நாய் விற்ற காசு குரைக்காது!
கருவாடு விற்ற காசு நாறாது!’ என்ற பழமொழிபோல பணம் சேர்ந்தவர்கள் ‘எல்லாம் கடவுளுக்கென்று ‘புனித’ கற்பிக்கப்பட்ட பிம்பத்திற்குச் சமமாகி ‘கோடீஈஸ்வரன்’ என்று ஈஸ்வரனுக்குப் பக்கத்தில் இடத்தையும் பெற்று விட்டனர்.
எப்படிப்பட்ட குறுக்கு வழியினாலும் பணம் சேர்க்கப் பழகிக் கொண்டனர்.
பிறகு ‘‘ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அப்பணமே, பணத்தைச் சம்பாதித்து பன் மடங்குகளுக்கு உன்னைப் பரவசப்படுத்தும்’’ என்று போதிக்கப்படும் புதுநிலை – ஆடம்பர, டாம்பீகப் பெருமிதப் போட்டியே இன்றைய உலகில் ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக ஒளிர்கிறது.
எனவே பண வேட்டை எல்லையின்றிப் போய், அதன் தரந் தாழ்ந்த கொடுமை அதனை வைத்து விளையாட்டு – சூதாட்டத்தில் ஈடுபட்டு மேலும் அச்சூதாட்டம் – அரசியலையும் பற்றிய பெரு நோயாகி, உழைப்பு, நேர்மையை மதிப்பிழக்கச் செய்கிறது.
இந்த வகையில் பணவேட்டைதான் இன்றைய சமூகத்தின் சீர்கேட்டின் முதன்மைக்கேடு.
எந்தக் கேவலமான வேலை செய்தாவது பணத்தைச் சம்பாதித்து நம்முடைய மனித மூளை அதி வேகத்தில் சென்று ‘சைபர் கிரைம்ஸ்’ என்ற கணினியுகத்தில் ஒரு வகை புது மோசடி எப்படியெல்லாம் உலக அளவில் பரவி வருகிறது பார்த்தீர்களா?
எளிதில் கண்டுபிடிக்க முடியாது; வங்கிக் கணக்கில் தானாகவே தனி நபர்களின் இருப்புகள் திருடப்படுவது என்று ‘புதுப்புது வகை டெக் னிக்குகள்’.
முதுமை அடைந்தவருக்கு ஒரு துணை தேவை என்றவுடன் – வசதியைக் குறி வைத்து கணவனே தன் மனைவியை மணமாகாத பெண் என்று கூறி லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் பரிதாபங்கள்.
இப்படி பண வேட்டை பல ‘அவதாரங்களில்!’
(தொடரும்)