வல்லம், செப்.22- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில், 13.09.2025 அன்று, கல்வித்துறையில் சிறப்பாகப் பங்களித்து, மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆசிரியர்களை, அந்நிறுவனத்தில் பயிலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மூலம் தேர்வு செய்து விருது வழங்கும் விழா கோலாகமாக நடைபெற்றது.
இந்த விழாவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் ஏ.ஆர்.திலகவதி அவர்களுக்கு “மாற்றத்திற்கு விதையிட்ட சிறந்த ஆசிரியர்” என்ற பெருமைமிகு விருது வழங்கப்பட்டது.
கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்த விருது, திலகவதி அவர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாது, சமுதாய முன்னேற்றத்துக்கும் அவரது பெரும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டதற்குப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.