பத்மசிறீ டாக்டர்
வி.எஸ்.நடராஜன்
(முதியோர் நல மருத்துவர், சென்னை)
உதறுவாதம் நோய் ஏற்படுவதற்கு நரம்பு மண்டலக் கோளாறே காரணம் எனக் கூறலாம். மூளையில் உள்ள டோபாமையன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது.
ஆனால் எதனால் இத்திரவம் குறைகிறது என்பது பற்றிச் சரியாக தெரியவில்லை. இந்நோய் சுமார் 80 சதவீதம் அளவிற்குத் திரவம் குறைந்த பின்னரே இந்நோய் அறிகுறி தோன்றும்
நோய் வர வாய்ப்புள்ளவர்கள்
முதுமை காரணமாwகவும், தலையில் ஏற்பட்ட காயத்தாலும், சுமார் 15 முதல் 20 சதவீதம் பேருக்கு நோய் வரலாம். இவை தவிர பரம்பரைத்தன்மை காரணமாகவும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.
மெதுவாகச் செயல்படுதல் சதை இறுக்கம், நடுக்கம், நிலை தடுமாறுதல், இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
முதுமையில் மெதுவாகத் தோன்றுவதால் சில சமயங்களில் முதுமையின் விளைவுக்கும் இந்நோய்க்கும் அதிக வித்தியாசம் காண முடிவதில்லை.
தொல்லைகள்
உதறுவாதம் நோயாளிகள் ஒரு காரியத்தைச் செய்வதற்குத் தாமதம் ஏற்படும். உதாரணம்: ஒரு பேனாவை எடுத்து எழுதுவதற்கு கையை மெதுவாக எடுத்து விரல்களை மடக்கி பேனாவைப் பிடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.
அதைப்போல நடப்பதற்கு சிரமப்படுவர். காலை சிறு சிறு அடியாக எடுத்து வைத்து மெல்ல, மெல்ல தள்ளாடிய படியே நடப்பர். கையெழுத்து சிறிதாக மாறும்.
உடை உடுப்பது, உணவு உண்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வர்.குரல் வளம் குறையும். முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.
சதை இறுக்கம்
உடலுள்ள தசைகள் எல்லாம் இறுக்கமுற்று மரக்கட்டை போல் ஆகி விடும். சதை இறுக்கத்தால் எவ்வித அசைவுமின்றி மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்து கொண்டேயிருப்பார்கள். நிற்க வைத்தாலும் அதே நிலைதான். தான் செய்து கொண்டிருக்கும் வேலைகளை எவ்வித காரணமுமின்றி திடீரென்று நிறுத்திக் கொள்வார்கள். உதாரணம்: உடை உடுத்தும் போதும், உணவு உண்ணும் போதும். இதைப் பார்க்கலாம்.
நடுக்கம்:
இந்நோயின் முக்கிய அறிகுறியே நடுக்கம்தான். இது மெதுவாக கையில் ஏற்பட்டு படிப்படியாக உடல் முழுவதம் தோன்றும். தொடக்கத்தில் கையில் ஒரு மாத்திரையை வைத்து எப்பொழுதும் உருட்டுக் கொண்டு இருப்பது போல செய்து கொண்டு இருப்பார்கள். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். உதறுவாதம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குப்பின் நோயின் தன்மை தீவிரம் அடைந்து பல தொல்லைகள் வர வாய்ப்புண்டு. நிமோனியா, படுக்ககைப்புண், சிறுநீர் தாரையில் பூச்சித் தொல்லை, எலும்புமுறிவு ஏற்படும் இத்தகைய தொல்லைகள் எல்லா நோயாளிகளுக்கும் ஏற்படும் என்று சொல்லமுடியாது. இவைகளை ஓரளவிற்குத் தடுக்க முடியும்.
பரிசோதனைகள்
உதறுவாதத்தை, சரியாக கண்டறிவதற்கு இன்னும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்கள் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும். CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்தவித மாற்றமும் இருக்காது. PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும். ரத்த பரிசோதனையை உதறுவாதத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.
சிகிச்சை முறைகள்
உதறுவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் திசுக்களை கொண்டு வருவதோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது. ஆனால் மருந்துகள் மூலம் நோயின் தொல்லைகளிலிருந்து ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வெவ்வேறு மாதிரியான சிகிச்சை முறை தேவைப்படலாம். இது நோயாளியின் வயது, செய்யும் வேலை, பிற நோய்கள் மற்றும் குடும்பச்சூழ்நிலையை பொறுத்து சிகிச்சை வேறுபடும். சமீபத்தில் அப்போ மார்பின் (APO MORPHINE) எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் நல்ல பயன் கிடைக்கிறது. ஆனால் இதை தினமும் தேவைக்கேற்றார் போல பல முறை செலுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஊசியின் மூலம் குறுகிய காலத்தில் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் விலை அதிகம்.
இயன்முறைச் சிகிச்சை
உதறுவாதத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மருந்து மாத்திரைகளை விட உடற்பயிற்சியே மிகவம் அவசியம். இந்நோய் தீவிரமடையும் போது இயன்முறைச் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
அறுவைச் சிகிச்சை
மருந்துகள் மூலம் குணமடையாதவர்கள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் சற்று குணம் அடைய வாய்ப்புண்டு. ஆழ்மூளைத்தூண்டல் அறுவை சிகிச்சை, சதை இறுக்கத்தையும், நடுக்கத்தையும் குறைக்க மிகவும் உதவும்.
காக்கும் வழிமுறைகள்:
நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்தை நேரப்படி கொடுக்க வேண்டும். இந்நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளினால் பக்க விளைவுகள் வர வாய்ப்பு இருப்பதால் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.
நடக்கும்பொழுது உதவியாளர் துணையுடன் நடக்க உதவ வேண்டும். அல்லது கைத்தடி, வாக்கர் உதவியுடன் நடக்கச் சொல்ல வேண்டும்.
தடுப்புக் கம்பி படுக்கை
கட்டிலின் இருபுறமும் தடுப்புக்கம்பிகள் போட்ட படுக்கையில் படுக்க வைத்துக் கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகளையும் பானங்களையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அவர்கள் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும் உற்சாகப்படுத்தி உதவ வேண்டும்.
உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும். தினசரி வேலைகளைத் தாங்களே செய்ய முடியாமல் சிரமப்படும் பொழுது, உறவினர்கள் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். படுக்கையிலே படுத்திராமல் சிறு, சிறு வேலைகளை செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.