நெல்லை, செப்.21- கோவிலுக்குள் ஏறி குதித்து உள்ளே புகுந்த 3 கரடிகள், அங்கி ருந்த பொருள்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்த காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரடி நடமாட்டம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான அனவன் குடியிருப்பு, கோட்டைவிளைபட்டி, பசுக்கிடைவிளை உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது இரவு நேரங்களில் கரடிகள் சுற்றித்திரிவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக, பசுக்கிடைவிளை வடக்கு பகுதியிலுள்ள இலுப்பையடியார் சிவ சுடலை ஈஸ்வரர் கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாகவே கரடியின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
எனவே, கோவில் வளாகத்தில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி வழக்கம் போல் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி நடையை அடைத்துவிட்டுச் சென்றார்.
அப்போது திடீரென கோவில் அருகே சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வந்து பார்த்தபோது, 3 கரடிகள் கோவிலின் கதவுகள் வழியே ஏறிகுதித்து உள்ளே புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்தக் கரடிகள் கோவிலுக்குள் ஏதாவது உண்பதற்கு இருக்கிறதா? என அங்குமிங்கும் நீண்ட நேரமாக உலாவிக் கொண்டிருந்தன. ஆனால், உண்பதற்கு எதுவும் இல்லாத நிலை யில் ‘சாமி’ சிலை அருகேயுள்ள விளக்குகளில் இருந்த எண்ணெய்யை குடித்தன.கோவிலில் இருந்த பிளாஸ்டிக் குழாய்கள், எண்ணெய் இருந்த பாத்திரங்களையும் தட்டிவிட்டுச் சேதப்படுத்தின. பின்னர் 3 கரடிகளும் அங்கி ருந்து தப்பிச் சென்றன.