துக்ளக்குக்குப் பதிலடி குறளில் ‘வீடு’ பற்றிக் கூறப்பட்டுள்ளதாம்!

(24.9.2025 நாளிட்ட ‘துக்ளக்’கின்
பதிலுக்குப் பதிலடிகள்)

பதிலடிப் பக்கம்

கேள்வி 1: மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, இந்திய நாட்டின் மதிப்பும், முக்கியத்துவமும் வெளிநாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது பெருமிதம் அளிக்கிறதே?

பதில்: உலக அரங்கில் மோடி சேர்த்த மதிப்பால் நாடு எவ்வளவு பெருமைப்படுகிறதோ, அவ்வளவு மோடியின் எதிரிகள் அவரை வெறுகிறார்கள். நாட்டுக்கு லாபம், மோடிக்குப் பிரச்சினை.

பதிலடி: பெருமையாம் – இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதிப்பிலிருந்தே மோடியின் பெருமை ஓகோ என்று தெரிகிறதே!

மோடி ஆட்சியின் வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றி  அதைவிடப் பிரமாதம்! இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் இந்தியா மீது பகைமைக் கக்க வைத்தது தான்.

– – – – –

கேள்வி 2: ‘ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெறுப்பானதா, வரவேற்பானதா?

பதில்: ஆசிரியர்களுக்கு வெறுப்பானது. பெற்றோர் களுக்கு வரவேற்பானது.

பதிலடி: ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து, தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு தேர்வா?

அப்படியென்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு ஒரு தேர்வு வைத்து – அவர்கள் எந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார்களோ, அந்தத் துறை சம்பந்தமான அறிவு அவர்களுக்கு இருக்கிறதா என்பதற்கான தேர்வை நடத்தலாமா? இன்னும் சொல்லப்போனால் இத்தகைய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளேகூட அரசமைப்புச் சட்டத்தில் எந்த அளவுக்குக் கற்றுத் துறை போனவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான தேர்வு நடத்தலாமா?

– – – – –

கேள்வி 3: அமைதிக்கும், ஆத்ம திருப்திக்கும் அரசியல் ரீதியான உதாரணம் கூறுங்களேன்?

பதில்: அஹிம்சைக்குப் போராடிய காந்தி, அமைதிக்கு உதாரணம். நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் படேல், ஆத்ம திருப்திக்கு உதாரணம்.

பதிலடி: காந்தியார்அகிம்சைக்குப் போராடியவர் தான். அத்தகைய பெருமகனாரைப் படுகொலை செய்த கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் ‘துக்ளக்’குக்கு இப்படிப் பதில் எழுத வெட்கமாக இல்லையா?

நாட்டை ஒருங்கிணைத்த பட்டேலைப் பாராட்டுவதற்கும், காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் பட்டேலுக்கு 597 அடி உயரம் கொண்ட சிலை நிறுவியதற்கும் காரணமே பட்டேல் இந்துத்துவா சாயல் கொண்ட வலது சாரி என்பதால் தானே!

– – – – –

கேள்வி 4: விஜய் ஒரு கிறிஸ்தவர். அது எல்லோருக்கும் தெரிந்தும், அவர் ஏன் குங்குமம் இட்டுக் கொள்கிறார்?

பதில்: மைனாரிட்டிகள் நலனுக்காகப் பாடுபட, ஹிந்துக்களின் வாக்குகளை (ஏமாற்றி) பெற குங்குமம் அவசியம்.

பதிலடி: குங்குமம் பிறந்த கதை தெரியுமா? இதோ ஆதாரம்-

மலட்டு நிலத்தை மாதவிலக்கான பெண்களைக் கொண்டு உழச்செய்யின் விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கை யும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளை ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமதுகருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ் வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

– திரு. செ. கணேசலிங்கன் எழுதிய “பெண்ணடிமை தீர” என்ற நூலிலிருந்து

– – – – –

கேள்வி 5: இந்தியாவின் அரசியல், ஆரோக்கியமான பாதையை நோக்கிச் செல்கிறது என்று கூற முடியுமா?

பதில்: அமெரிக்கா, அய்ரோப்பிய ஜனநாயக நாடுகளின் அரசியலைப் பார்த்தால், நம் நாட்டு அரசியல் அவ்வளவு தவறான பாதையில் செல்லவில்லை என்று தோன்றுகிறது.

பதிலடி: தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகளைத் தன் வயப்படுத்துவது, மதச்சார்பின்மை, சோசலிசம் என்பதை எதிர்ப்பது, மற்ற மதக்காரர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, வாக்குச் சீட்டுத் திருட்டு, சமூகநீதியின் வேர்களைக் கொல்லைப்புறமாக வெட்டுவது இன்னோரன்ன அரசியல் ஆரோக்கியம் (?) இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் காண முடியும்?

அவ்வளவு தவறான பாதையில் இந்தியா செல்லவில்லை என்றால், பொருள் அளவில் தான் வித்தியாசம்! – இந்தியா தவறு செய்கிறது என்பதைத் ‘துக்ளக்’ ஒப்புக் கொண்டு விட்டதே!

– – – – –

கேள்வி 6: செங்கோட்டையன்  உங்கள் ஆலோசனைப்படியே தான் தைரியமாக எடப்பாடி பழனிசாமிக்கே கெடு விதித்து உள்ளார் என்பது ஓரளவு உண்மை அல்லவா?

பதில்: சில சமயம் நான் செய்யாததை, செய்தது போல செய்திகள் பரவி புகழ்ச்சியும், இகழ்ச்சியும், நற்பெயரும், அவப்பெயரும் வருவது என் ஜாதக விசேஷம். என் ஆலோசனைப்படி செய்தார் செங் கோட்டையன் என்பதும் அதுபோலத்தான்.

பதிலடி: துக்ளக் குருமூர்த்தியின் குருநாதர் சோவே தன்னை ஒரு அரசியல் புரோக்கர் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட பிறகு – அவர் சீடர் குருமூர்த்தியார் பற்றிச் சொல்ல வேண்டுமா?

– – – – –

கேள்வி 7: ‘ரஷ்யாவின் கச்சா எண்ணெயைக் காசாக்கி, இந்திய பிராமணர்கள் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிகாரி கூறியுள்ளாரே?

பதில்: தசாப்தங்களாக திராவிட இனவாதம் கக்கிய பிராமண துவேஷம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

பதிலடி: தீண்டாமை ஷேமகரமானது என்றும், பெண்களுக்குச் சொத்துரிமை வந்தால் கண்ட வாளோடு ஓடிடுவாள் என்றும், பூஜை வேளையில் பெரியவாள் நீஷப் பாதையை (தமிழை) பேசமாட்டார் என்று கூறும் மனிதகுல விரோதியை மகான் என்றும், ஜெகத்குரு என்றும் கூறும் துவேஷத்தை விடவா இது பெரியது?

‘பிராமணன்’ என்று துக்ளக் சொல்லுவதே மற்றவர்களைச் சூத்திரர்கள் என்று அவமானப்படுத்தும் தோஷம் தானே!

– – – – –

கேள்வி 8: இந்தியனாகக் கேட்கிறேன். பா.ஜ.க. ஆட்சி ஹிந்துக்களுக்கா, இந்தியர்களுக்காக?

பதில்: நம் நாட்டின் செல்வத்தில் ஹிந்து அல்லாதவர்களுக்கு மட்டுமே முதல் உரிமை என்று கூறாத ஆட்சி பா.ஜ.க. ஆட்சி. இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க. ஆட்சி யாருக்கென்று?

பதிலடி: பா.ஜ.க. ஆட்சி அதானிக்கும், அம்பானிக் கும் தான் – அவர்கள் மறைமுக சேவகங்களை செய்வது ஹிந்துக்களுக்குத்தானே!

அதானியையும், ஸ்டேட் பாங்க் அதிகாரியையும் தான் பயணம் செய்த விமானத்திலேயே ஆஸ்தி ரேலியாவுக்கு நரேந்திர மோடி அழைத்துச் செல்ல வில்லையா? அங்கு நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக பாரத ஸ்டேட் பாங்க் 27,000 கோடி ரூபாய்க்குக் கடன் வழங்கிடவில்லையா?

ஒரு தனியார் நிறுவனத்திற்குப் பிரதமர் இடைத் தரகராக இருந்தது எந்த வகையில் சிறந்தது? ஹிந்து ராஜ்ஜியம் என்று பிஜேபி சொல்லுவது எதைச் சார்ந்ததாம்? இந்தியா ஹிந்துக்களுக்குத்தான் என்பது புரிகிறதா?

– – – – –

கேள்வி 9: திருக்குறளில் ஏன் இதைப் பற்றி சொல்லப்படவில்லை என்று, உங்களுக்குத் தோன்றும் விஷயம் எது?

பதில்: வேதம் கூறும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பால்களையும் அடக்கியது திருக்குறள் என்கிறார் மணக்குடவர். அனைத்தும் அடங்கிய நாற்பால் திருக்குறள் என்று இதைக் கூறவில்லை என்றால், வேறு எதைக் கூறமுடியும்?

பதிலடி: திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. வீடு – அதாவது மோட்சம் பற்றி அவர் எழுதவில்லை; காரணம் மோட்சம் என்பது இல்லாத ஒன்று என்பது அவரின் கருத்தாக இருந்தது.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? திருவள்ளுவர் பார்ப்பனீயக் கூறான மோட்சத்தைப் பற்றியும் கூறினார் என்பதற்காக மணக் குடவரை இழுத்துக் காயும் பார்ப்பனப் புத்தியை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருக்குறளே மனுதர்மத்தின் சாரம், கீதையின் சாரம் என்று கூறும் கூட்டம் அல்லவா இது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *