தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல; சமூக மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம்!

அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியில், எத்தனை எழுத்துகள் இருக்கின்றனவோ, அதற்கும் மேலாக அக்கட்சியில் பிளவுகள் உள்ளன!
தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல; சமூக மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம்!
மக்களுக்காக இருக்கின்ற இயக்கங்கள்தான் திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம்!
எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை,  செப்.22 அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியில், எத்தனை எழுத்துகள் இருக்கின்றனவோ, அதற்கும் மேலாக அக்கட்சியில் பிளவுகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல. சமூக மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம். அந்த இயக்கத்தினுடைய வெற்றிக்கு உறுதுணையாக  நீங்கள் இருக்க வேண்டும். மக்களுக்காக இருக்கின்ற இயக்கங்கள்தான் திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்!

கடந்த 17.9.2025  அன்று மாலை சென்னை
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கடந்த அய்ந்தாண்டுகளில்
உலகம் பாராட்டக் கூடிய ஆட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி!

‘திராவிட மாடல்’ ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் முடிந்து அய்ந்தாம் ஆண்டு நடை பெறுகின்றது. இந்த அய்ந்தாண்டு காலத்தில், ‘திராவிட மாடல்’ ஆட்சியை உலகம் பாராட்டக் கூடிய ஆட்சியாக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கியிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் மறைந்தவுடன் என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்றனர்.

அண்ணா அவர்கள் மறைந்தபொழுது என்ன சொன்னது ஆரியம்? ‘‘இத்தோடு தி.மு.க. அவ்வளவுதான்’’ என்றனர். அப்படியே நீடித்தாலும்,  ‘‘அவருக்குப் பதவி வேண்டும்; இவருக்குப் பதவி வேண்டும் என்று தி.மு.க.விற்குள்ளே கலவரம் ஏற்படும்’’ என்றார்கள்.

தந்தை பெரியார்தான் முதன்முதலில் கருத்து வெளியிட்டார்

ஆனால், ‘‘கலைஞர் அவர்கள்தான் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும்’’ என்று தந்தை பெரியார்தான் முதன்முதலில் கருத்து வெளியிட்டார்.

இந்தத் தகவலை கலைஞரிடம் சொன்னவன், நான்தான்.

விளைவு, தமிழ்நாட்டையே மாற்றிக் காட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!

அண்ணா அவர்கள் குறுகிய காலம்தான் ஆட்சியில் இருந்ததால், அந்தக் குறுகிய காலத்திலேயே அவர் செய்த முப்பெரும் சாதனைகளுக்கு இணையானது வேறு கிடையாது.

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம்.

ஹிந்தி மொழிக்கு இங்கே இடமில்லை; இரு மொழிக் கொள்கைதான்  (தமிழ், ஆங்கிலம்) தமிழ்நாட்டில் என்பதுதான் அந்த முப்பெரும் சாதனைகள்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது, ஜாதிப் பாம்பு கோவில் கருவறைக்குள் பதுங்கிக் கொண்டிருந்த நிலை.

‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்’’

கோவில் கருவறைக்குள் இருந்த அந்த ஜாதிப் பாம்பை, அடிப்பதற்காகச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்’’ கொண்டு வந்தார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக உயர்ஜாதியினர் பிடித்திருந்த பிடி அகன்று, இன்றைக்குப் பக்தர்களுக்கும் சேர்த்து உரிமையை வாங்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

எனவே, இன்றைக்குக் கோவிலின் கருவறையி லிருந்து வெளிவருபவரைப் பார்த்தால், கருப்பு நிறத்துடன் ஒருவர் வருகிறார். ஓ, இவர் கருப்பு அய்யரா? என்று நினைத்தால், இல்லை, இல்லை நம்மாட்கள்தான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தால் பணி நியமனம் செய்யப்பட்டவர் அவர்.

பெரியார் பேசுகிறார் கேளுங்கள்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்தைக் கையிலெடுத்த பெரியார் பேசுகிறார், ‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால், ஒழித்துவிட்டுப் போ! எனக்கொன்றும் கவலையில்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக, மறைவாகப் பேசுகிறவர்கள், நாளைக்கு வெளிப்படையாகப் பேசி, அவனுக்குப் பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான். அவனுக்கு விளம்பரம் கொடுப்பான். எனவே, தோழர்களே, நம்மு டைய நிலைமை உலகத்திலேயே மானக்கேடான நிலைமை’’ என்றார்.

இன்னொரு கருத்தையும் பெரியாரின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் பெரியார் சொல்கிறார், ‘‘அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடைய ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையையும், உற்சா கத்தையும் அடைந்தேன். (தனக்கு இருக்கின்ற உடல்நலக் குறைவுகளையெல்லாம் சொல்லிவிட்டு) இப்படிப்பட்ட நிலையிலும், சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்கிறேன் என்றால், அது நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.

ஏதாவது பொல்லாத வாய்ப்பால், இப்போதைய தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், அது வேறு எந்த ஆட்சியிலும், அதன் பலன் என்னவாகும் என்பதைச் சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்’’ என்றார்.

பெரியார் அவர்களுக்கு எவ்வளவு பொதுக்கவலை என்பதைப் பாருங்கள்.

தமிழ்நாட்டில்  தி.மு.க. கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக சிறப்பாக இருக்கின்றது!

ஆகவேதான், இதை ஏன் நாம் சொல்கிறோம் என்றால், வெறும் அரசியலுக்காக அல்ல. கூட்டணியில் எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கேட்பவர்களா? தமிழ்நாட்டில்  தி.மு.க. கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக சிறப்பாக இருக்கின்றது. இன்னொரு அணி இருக்கிறதா? என்றால், அதை அணி என்றுகூட சொல்ல முடியாது; பிணியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்று, மூன்று தேர்தல்களிலும் மிகப்பெரும் அளவிற்கு வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றார்.

‘ரோட் ஷோ’, ‘காட் ஷோ’ நடத்தினார் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடி அவர்கள், தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜாரில் ‘‘ரோட் ஷோ’’ நடத்தினார். அதற்குப் பிறகு, சிறீரங்கம் சென்றார். இராமேசுவரம் சென்று ‘காட் ஷோ’  நடத்தினார். எல்லா கடவுள்களையும் தரிசித்தார். ஆனால், அவர்கள் சிறீரங்கத்திலும் வெற்றி பெறவில்லை; இராமேசுவரத்திலும் வெற்றி பெறவில்லை.

முன்பு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எங்களிடம்தான் தெரிவித்தார். அது சில காரணங்களால் தள்ளிப் போனது.

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சி யாகவும் திராவிட கட்சிகள்தான் இருந்தன. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் தலைவர் தந்தை பெரியார்தான்.

இன்றைக்கு என்னாயிற்று? என்பதை நினைத்துப் பாருங்கள்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க.தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்.

‘‘மோடியா? லேடியா?’’ என்று கேட்ட ‘அம்மா வழியை’ மறந்துவிட்டு – அமித்ஷா வழிக்குப் போய்விட்டனர்!

ஏனென்றால், அ.தி.மு.க.வை அடமானம் வைத்து விட்டார்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், இங்கே அ.தி.மு.க. தோழர்கள், சகோதரர்கள் இருப்பீர்கள்; என்னுடைய உரையைக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். அல்லது பத்திரிகை, செய்தி ஊடகங்களின்மூலமாகவும் என்னுரையைக் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். ஜெயலலிதா அம்மையார், தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘‘மோடியா? லேடியா?’’ என்று கேட்டார். அதை மறந்துவிட்டீர்களா? ‘‘அம்மா வழி, அம்மா வழி’’ என்று சொன்னீர்கள். ஏற்கெனவே அண்ணா வழியை, பெரியார் வழியை விட்டுவிட்டீர்கள். ஆனால், இப்போது அம்மா வழியையும் விட்டுவிட்டு, எல்லோரும் அமித்ஷா வழிக்குப் போய்விட்டீர்களே என்பதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு வேதனை யாக இருக்கிறது.

அந்த அம்மையாருக்கும், எங்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள், சமூகநீதிக்கு குரல் கொடுத்தபோது, அதை அவர் ஏற்று, சட்டம் செய்ய வைத்தோம். அதனுடைய பலன், இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடுச் சட்டம்.

டில்லிதான் ஜெயலலிதா அம்மையார் வீட்டிற்கு வரும்; டில்லிக்கு அந்த அம்மா போகமாட்டார்!

அந்த அம்மையார் இருக்கும்போது, டில்லிதான், அவருடைய வீட்டிற்கு வருமே தவிர,  டில்லிக்கு அந்த அம்மா போகமாட்டார்.

பிரதமரிடம் மனு அளிக்கும்போதுகூட, வீட்டிற்குப் பிரதமரை வரவழைத்து, பல வகை கறிகாய் சாப்பாடு போட்டு, அங்கேயே மனுவைக் கொடுத்தார்.

பிரதமர் மோடி அவர்கள், இங்கே ஓடி வந்து அந்த அம்மையாரிடம் மனுவை வாங்கிக் கொண்டு சென்றார்.

தங்களைக் காப்பற்றிக் கொள்ள
அ.தி.மு.க.வை. அடமானம் வைத்துவிட்டார்கள்!

இதை அ.தி.மு.க. தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  தலைவர்கள், யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான், தங்களை, அ.தி.மு.க.வை. அடமானம் வைத்தார்கள்.

அதனுடைய விளைவு என்னவென்றால், தமிழ்நாட்டில் எதிரணி இல்லை என்பதால், தி.மு.க.வினுடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இருந்தபோதுகூட, தி.மு.க. கூட்டணி மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

திராவிடத்தினுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்து, ‘‘நான், திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கப் போகிறேன்’’ என்று சொன்னார்.

அவர் முயற்சி செய்து பார்க்கட்டும்; பரவாயில்லை. ஆனால்,  திராவிடத்தினுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வேரைத் தேடி, நீங்கள் மண்ணைத் தோண்ட தோண்ட அந்த மண் உங்கள்மேல்தான் விழும்.

இங்கே கவிஞர் அவர்கள் உரையாற்றும்போது சொன்னாரே, பா.ஜ.க.விற்குத் தலைவரை நிய மிக்கவேண்டும் என்றால், ஒரு பார்ப்பனரைப் போட வில்லையே! ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களாகத் தேடிப் பிடிக்கிறார்கள். எஸ்.சி., ஓ.பி.சி., எம்.பி.சி., சமுதாயத்தினரையே தலைவராகப் போடுகிறார்கள் அதற்கு என்ன காரணம்? என்று சொன்னார்.

அவர் சொல்லியதில் ஒரு திருத்தம், ‘‘பார்ப்பனரைப் போடவில்லையே’’ என்று சொன்னார். ‘‘போட முடிய வில்லையே’’ என்பதுதான் அது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அன்றைக்கு இருந்த சூழ்நிலையில், கருநாடகத்தைச் சேர்ந்த தேவராஜ்அர்ஸ், அவர்கள் அமைச்சராக இருந்தார். இந்திரா காந்திக்கு அரசியலில் மறுவாழ்வு கொடுத்தவர் அவர்தான்.

இந்திரா காந்தியிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் குழுச் சண்டை இருக்கிறதே, பொதுவான ஒரு தலைவரை போடலாமே?’’ என்றார்.

‘‘யாரைத் தலைவராகப் போடலாம்?’’ என்று இந்திரா காந்தி கேட்டார்.

‘‘ஆர்.வெங்கட்ராமன் இருக்கிறாரே, அவரை தலைவராகப் போடலாமே?’’ என்றார் தேவராஜ் அர்ஸ்.

உடனே இந்திரா, ‘‘என்ன? உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாதா?’’ என்று கேட்டார்.

இதற்கு என்ன அர்த்தம்?

பெரியார் மண் தமிழ்நாடு என்பதுதான் இதற்கு அர்த்தம்.

இந்தத் தகவல்கள் எல்லாம் ‘துக்ளக்’ பத்திரிகையில் சோ எழுதி தகவல்கள்தான்.

கட்சியின் பெயரில் எத்தனை எழுத்துகளோ, அதைவிட அதிக பிளவுகள் உள்ளன!

அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியில், எத்தனை எழுத்துகள் இருக்கிறதோ, அதற்கும் மேலாக அக்கட்சியில் பிளவுகள் உள்ளன.

இவர்களுடைய கட்சிக்கான தீர்வைக் காண, அமித்ஷாவை நாடுகிறார்கள்.

நான் வருத்தத்தோடு சொல்கிறேன், எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், ‘‘கட்சிக்குத் துரோகம் செய்த வர்கள் நடுத்தெருவில்தான் நிற்பீர்கள்’’ என்றார்.

உடனே இன்னொருவர் சொல்கிறார், ‘‘நாங்கள் நிற்க மாட்டோம், எடப்பாடி பழனிசாமிதான் நடுத்தெருவில் நிற்பார்’’ என்று.

நடுத்தெரு யாருக்குச் சொந்தம் என்றுதான் போட்டி போடுகிறார்கள்!

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பிரதான எதிர்க்கட்சியினர், நடுத்தெரு யாருக்குச் சொந்தம் என்றுதான் போட்டி போடுகிறார்களே தவிர, தேர்தலில் வெற்றி யாருக்குச் சொந்தம் என்று சொல்வதற்கில்லை.

தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும். வி.சி.க. தலைவர் வெளியே வந்துவிடுவார் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், நடந்தது என்ன?

முதலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார், அந்தக் கூட்டணியிலிருந்து இரண்டு பேர் வெளியேறி விட்டார்கள்.

பிறகு, அமித்ஷா  தமிழ்நாட்டிற்கு வந்தார், இன்னொ ருவர் அந்தக் கூட்டணியிலிருந்து வந்துவிட்டார்.

இன்றைக்கு எல்லோரும் டில்லிக்கு ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்முடைய ஊடகங்களுக்கு நாள்தோறும் அற்புத மான நல்ல தீனி கிடைக்கிறது.

ஆகவேதான், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், அதன் ஒப்பற்றத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், 2026 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறப் போவது உறுதி!

அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு -அதுதான் நமக்குப் பாதுகாப்பு!

எனவேதான், தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல. சமூக, மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம். அந்த இயக்கத்தினுடைய வெற்றிக்கு உறுதுணையாக  நீங்கள் இருக்கவேண்டும்.

யார், வந்து உங்களைக் குழப்பினாலும், குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.

மக்களுக்காக இருக்கின்ற இயக்கங்கள்தான் திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம்.

அடுத்த தேர்தல் முக்கியமல்ல;
அடுத்தத் தலைமுறைதான்
மிக முக்கியம்

எனவேதான், நம்முடைய பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். தாய்மார்களே, சகோ தரிகளே, பெரியோர்களே நீங்கள் கட்சி அரசியலைத் தாண்டி, சமுதாயத்தை எண்ணிப் பாருங்கள். அடுத்த தேர்தல் முக்கியமல்ல; அடுத்தத் தலை முறைதான் மிக முக்கியம் நண்பர்களே!

அதற்கென உரியன செய்வது இந்த இயக்கம்தான், பெரியார்தான்!

இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்க ளுக்கு, குறிப்பாக கரு.அண்ணாமலை, அவரது நண்பர்க ளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *