சென்னை, செப்.21– சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து, அப்பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலர் ஏ.சரவணவேல்ராஜ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அந்த அரசாணையில், சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், சமணர், பார்சிகள் ஆகியோரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்த அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை இந்த சிறப்புக் குழு ஆய்வு செய்யும். மேலும், திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்.
இந்த சிறப்புக் குழுவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் அ.சுபேர் கான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் நியமனம் குறித்து நல ஆணையர் ஆசியா மரியம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு;
பூம்புகார் கடல்பகுதியில்
ஆய்வு பணிகள் தொடக்கம்
ஆய்வு பணிகள் தொடக்கம்
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மயிலாடுதுறை, செப்.21: பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர, ஆய்வு பணிகள் தொடங்கியது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப் பணியினைஇ பேராசிரியர் கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது. பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.