சென்னை செப். 21– தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதுகலை மருத்துவம் படித்துள்ள மருத்துவர் களான நவநீதம், அஜிதா, ப்ரீத்தி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர தேர்வு செய்யப்பட்ட பலர் முதுகலைப்படிப்பில் சேரவில்லை. இதனால் தற்போது நாடு முழுவதும் 600 காலியிடங்கள் உருவாகி அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சிஎம்சி, ஸ்டான்லி, மதுரை என சிறந்த மருத்துவ கல்லூரிகளில் 40 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பாவிட்டால் அவை யாருக்கும் பயன்படாமல் போய்விடும். எனவே இந்த இடங்களுக்கும் மீண்டும் மூன்றாவது முறையாக கலந்தாய்வு நடத்தி அந்த இடங்களை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடும்போது இதுபோன்ற மருத்துவ படிப்புகள் வீணாகிவிடக்கூடாது என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. எனவே தகுதியான மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளில் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு 4 வார காலத்துக்குள் கலந்தாய்வு நடத்தி அந்த இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.