ஈரோடு, மே 27 மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ – அந்த மனித உரிமைகளைக் காப்பாற்றவேண்டும் என்ற உணர்வோடு யார், எங்கு போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பெரியார் இருக் கிறார்; பெரியாரின் சுயமரியாதை இருக்கிறது; திராவிடம் இருக்கிறது என்பதுதான் அதனுடைய தத்துவம். எனவே, எண்ணிக்கையில் நாம் எவ்வளவு பேர் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல; இந்தக் கொள்கையினுடைய மதிப்பு, மரியாதை என்பது சாதாரணமானதல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு
கடந்த 13.5.2023 காலை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நண்பர்களே!
இத்தகைய இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது?
இந்தக் கொள்கையினால்தான்.
நம் இயக்கத்தைப்பற்றி
தந்தை பெரியாரின் விளக்கம்!
அய்யா சொன்னார், ‘‘இது என்னுடைய இயக்கம் – இதில் யார் இருக்கிறார்கள்? யார் போகிறார்கள்? யார் வருகிறார்கள்? என்பதைப்பற்றி எனக்குக் கவலை யில்லை. எல்லா ஊர்களிலும் கிளைக் கழகங்கள் இருக் கிறதா? என்றால், அதைப்பற்றியும் நான் கவலைப்படு வதில்லை. இருக்கின்ற ஊரில், நான் விளக்கம் சொல்வேன். ஆனால், இயக்கம் வளர்ந்து வரும். இந்தக் கொள்கையை அப்புறப்படுத்த முடியாது” என்றார்.
நமது இயக்கம் எப்படிப்பட்டது என்பதற்கு ஓர் அற்புதமான விளக்கத்தை – உவமையைச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
பனைமரத்தின் பயனை அனுபவிக்காதவர்கள் யாரும் கிடையாது!
‘‘என்னுடைய இயக்கம் பனை மரம் போன்றது” என்றார்.
பனை மரத்திற்குத் தண்ணீர் ஊற்றவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. பனங்கொட்டை எங்கே விழுந்து, எங்கே முளைக்கிறது என்பதும் அவசியமில்லை. ஆனால், பனையினுடைய பயனை அனுபவிக்காத வர்கள் யாரும் கிடையாது.
இன்றைக்கு நம்முடைய மொழி செம்மொழியாக, மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தப்பட்டு, உலகளாவிய அளவிற்கு இருக்கிறது என்று சொல்லுகிறோம்.
செம்மொழி, செம்மொழி என்று சொல்கிறோம்; இலக்கியங்களைப்பற்றியெல்லாம் பேசுகின்றோம் சரி; ஆனால், அந்த செம்மொழி இலக்கியம் உள்பட எல்லாவற்றையும் எதன்மூலமாக நாம் காப்பாற்றி இருக்கின்றோம் தெரியுமா?
பனை ஓலையின்மூலமாகத்தான்.
பனை ஓலையும், எழுத்தாணியும்தான் இம்மொழி யைக் காப்பாற்றின; இலக்கியத்தைக் காப்பாற்றின.
எனவே, கோடாரி கொண்டு பிளந்தாலும் – ஏனென் றால், கோடாரிகள் நம்மிடையேகூட உண்டு. இந்த இயக்கத்தை கோடாரிகள் கொண்டு பிளந்தாலும், அவை பாறைகளாக நின்று கட்டடத்திற்குப் பயன்படுமே தவிர, வீணாவதில்லை.
பெருமைப்படுங்கள்; மார்தட்டுங்கள்;
கைகளை உயர்த்துங்கள்!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான கொள்கையைக் கட்டி இருக்கின்ற இயக்கம் நம்முடைய இயக்கம். அதற்காக நீங்கள் பெருமைப்படுங்கள்; மார்தட்டுங்கள்; கைகளை உயர்த்துங்கள்; புஜத்தை நீங்கள் அகலப் படுத்திக் காட்டுங்கள்.
நமக்கொன்றும் 56 இஞ்ச் மார்பு கிடையாது; அதைப்பற்றி நாம் சொல்லப்போவதில்லை. ஆனால், அதேநேரத்தில், நமக்கு நெஞ்சுரம் உண்டு.
அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, எதிர்க்க, எதிர்க்க நம்மால் உயர்த்திக் காட்ட முடியும் என்கின்ற துணிச்சல் நமக்கிருக்கவேண்டும்.
அந்தத் துணிச்சல், இந்தியாவினுடைய மக்கள் தொகை 130 கோடி. இதற்கு அடுத்து மிஞ்சப் போகின்றது சீனாவை. ஆனால், இந்த இந்திய நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது – 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டினை, 130 கோடி இராணுவத்தினரா காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
இல்லையே!
ஒரு சில கோடி இராணுவத்தினர்தானே – அதிகபட்சம் போனால், 3 கோடி இராணுவத்தினர் இருப்பார்களா?
அவர்கள்தானே இந்தியாவில் உள்ள அவ்வளவு மக்களையும், நாட்டையும், எல்லையையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இளைஞர்கள் கைகளில் இந்த இயக்கத்தைக் கொடுக்கவேண்டும்!
அந்த இராணுவத்தையும் மிஞ்சக்கூடியதுதான் கருஞ்சட்டை இராணுவம் – பெரியாரின் இராணுவம் என்பதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இயக்கம் இந்த இயக்கம்; எனவே, இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.
இளைஞர்கள் கைகளில் இந்த இயக்கத்தைக் கொடுக்கவேண்டும்; அதுவேதான் இந்தக் கமிட்டியின் நோக்கம்.
இளைஞர்கள் கைகளில் என்றால், ‘‘நாங்கள் எல்லாம் இளைஞர்களா?” என்று நீங்கள் கேட்கலாம்.
இது வளமையான இயக்கம் அல்ல;
இளமையான இயக்கம் – கொள்கைகளில்!
‘‘உங்களுக்கு 90 வயதாகிறது; கவிஞருக்கு 80 வயதிற்குமேல் ஆகிறது; எனக்குப் பக்கத்தில் இருப்பவர் தடியை ஊன்றிக் கொண்டு நிற்கிறார்; நான் அவர் கையைப் பிடிக்கவேண்டி இருக்கிறது; அவர் என் கைகளைப் பிடிக்கவேண்டியதாக இருக்கிறது” என்கிற எண்ணம் உங்களிடையே எழலாம்.
இருந்தாலும், இந்த இயக்கம் இளமையான இயக்கமா என்றால், இது வளமையான இயக்கம் அல்ல; இளமையான இயக்கம் – கொள்கைகளில்.
எங்களுக்குத்தான் வயதாகியிருக்கிறதே தவிர, நம்முடைய கொள்கைக்கு ஒருபோதும் வயதாகாது.
இந்தக் கொள்கை என்பது சாகா மருந்து. ஏனென்றால், இக்கொள்கைகள் மனிதநேயத்திற் காகப் பாடுபடுவது – அதனை மேம்படுத்துவது.
வைக்கம் நூற்றாண்டைப்பற்றி பேசும்பொழுது, உலகளாவிய நிலை என்று சொன்னோம். உலகளாவிய நிலை என்பது எப்படி? வைக்கத்தில் போராட்டம் நடந்ததால், வைக்கம் என்பது பல ஆயிரம் ஊர்களில் ஓர் ஊர்தானே என்று மட்டும் அளவிட முடியுமா?
ஒரு போராட்டத்தினுடைய
மிகப்பெரிய நெருப்பு!
பேராசிரியர் இராமசாமி அவர்கள் அழகாக ஒரு கட்டுரை எழுதி யிருந்தார் – அதில் வைக்கம் என்பது ஓர் ஊரின் பெய ரல்ல; அது ஒரு போராட்டத்தினுடைய மிகப்பெரிய நெருப்பு வீச்சு. அந்த நெருப்புக்குப் பெயர்தான் வைக்கம்.
அந்த வைக்கம் போராட்டம்தான், அம்பேத்கர் அவர்களை மகத் குளப் போராட்டத்திற்கு வித்திட்டது. இங்கே தோன்றியது – அதுவே வடக்கே தோன்றியது.
இங்கே தோன்றிய அதே சத்தியாகிரகம் – அமெரிக் காவில், பேருந்துகளில் கருப்பினைத்தைச் சேர்ந்த மார்ட் டின் லூதர்கிங்கை கீழே இறக்கிவிட்டார்கள். அதனை எதிர்த்துத் தோன்றிய கிளர்ச்சிகளுக்கும் அடிப்படை வகுத்தது.
திராவிடம் இருக்கிறது என்பதுதான்
அதனுடைய தத்துவம்!
மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படு கின்றனவோ – அந்த மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு யார், எங்கு போராடு கிறார்களே, அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார்; பெரியாரின் சுயமரியாதை இருக்கிறது; திராவிடம் இருக்கிறது என்பதுதான் அதனுடைய தத்துவம்.
எனவே, எண்ணிக்கையில் நாம் எவ்வளவு பேர் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல; இந்தக் கொள்கை யினுடைய மதிப்பு, மரியாதை என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.
நீதிக்கட்சிக்குத் திடீரென்று தலைவராகிறார் தந்தை பெரியார் அவர்கள். அப்பொழுது அவர் ஓர் உரையாற்றுகிறார்.
1938 இல் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றபொழுது தந்தை பெரியார் ஆற்றிய உரை
அதில்,
‘‘திடீரென்று ஜஸ்டிஸ் கட்சி எனக்குச் சுமத்தப்பட்டது; ஆனால், அதற்குமுன் இப்படி நான் நினைக்கவில்லை. முதன்முதலில் இந்தச் செய்தி காதில் விழுந்தபொழுது மிகப்பெரிய அளவிற்கு நான் ஆச்சரியப்பட்டேன். பின்னாள் கனவு நனவாகியது.
என்னுடைய பெருமையையும், லட்சியத்தையும் தங்களுடைய பெருமையாகக் கருதும் என் தோழர்கள் எனக்கு உற்சாகமளித்தார்கள்.
சிறையிலிருந்து விடுதலையடைந்ததும், கிளர்ச் சியைக் கண்டேனே தவிர, கட்டுப்பாட்டைக் காண முடியவில்லை. இந்த நிலையில், மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தேன். அதிலிருந்தே உத்தியோகம், பதவியை எதிர்பார்க்காத வர்கள்; உண்மை ஒத்துழைப்பை இழந்துவிட்டேன். மற்றும் ஆரம்பத்தில் கட்சியால் நன்மை அடைந்தவர் களின் உற்சாகம் நாளாக நாளாகக் குறைந்துவிட்டது. கட்சிப் பிரமுகர்கள் சிலர், சர்க்காரிலும், மக்களிடத்திலும் தனித்தனி செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள முயன்று விட்டார்கள்; கட்சியைப்பற்றி கவலை கொள்ளவில்லை. கட்சியைப் பலப்படுத்த நான் (பெரியார்) முயற்சி எடுத்தும், இனி சீர்படுமா என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது.
தலைவனாகிய நானே சந்தேகம் கொண்டேன்.”
இயக்கத்தினுடைய எதிர்காலத்தை
எப்படி விரிவாக்குவது?
இது இயக்கத் தோழர்களுக்கு பாடம். இதுதான் மிகவும் முக்கியம். இந்தக் கமிட்டியில், கொள்கைப் பெருமைகளைப்பற்றி விளக்கிப் பேசவேண்டாம்; இயக்கத்தினுடைய எதிர்காலத்தை எப்படி விரி வாக்குவது? எப்படி இன்னும் மேலும் பிரகாச மாக்குவது? எப்படி திட்டங்களை ஒளிமயம் நிறைந்தவைகளாக ஆக்குவது? செயல்படக் கூடியதாக ஆக்குவது? அதற்கு நம்மிடம் பதவிகள் கிடையாது.
இன்றைக்கு குணசேகரனையும், அதேபோன்று ஜெயக்குமாரையும் முக்கிய ஒருங்கிணைப்பாளர் கள் என்று மாற்றி நான் நியமித்திருக்கிறேன். அத னால், ஒரு சங்கடமும் இல்லையே! இன்னுங்கேட் டால், நான் அவர்களின் அனுபவத்தைப் பார்த் தேன். இரண்டு, மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துப் பார்த்தேன். அந்த வாய்ப்புகளில், நான் எதிர்பார்த்ததற்கு மேலே சாதித்துக் காட்டக்கூடிய திறன் இரண்டு பேருக் கும் உண்டு என்று வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
வாரந்தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வரவேண்டும்
நேரிடையாக நானே அவர்களைப் பயன்படுத்தி இன்னும் பல வேலைகளை உருவாக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆகவே, எல்லோரும் அதுபோன்று வரவேண்டும். பொதுச்செயலாளர்கள் என்பவர்கள் தலைமைக் கழகத்தோடு நெருக்கமாக இருக்கவேண்டும். வாரந்தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வரவேண்டும். சொல்லியிருக்கின்ற பணிகளைச் செய்யவேண்டும்.
எல்லோரிடமும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, பொதுவாகக் கேட்டால், ‘‘அவர் பொறுப்பு அது; இவர் பொறுப்பு இது” என்று சொல்வார்கள்.
செயல் என்பது
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்!
ஆகவே, இன்னின்னாருக்கு இன்னின்ன வேலை; உடனே அந்தப் பணிகளை அவர் செய்யவேண்டும். செய்வதற்குத் தடையாக இருப்பது எது, என்ன காரணம்? அந்தத் தடையை அகற்றுவதற்கு என்ன வழி? அத் தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும். ஆனால், செயல் என்பது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
நம் இயக்கக் கொள்கை
வெற்றி பெறும்!
நாளைக்கு எங்களைப் போன்ற வயதானவர்கள் இருக்கின்றோமா, இல்லையா என்பது முக்கியமல்ல; இந்தக் கொள்கை இருக்கும்; இருக்கவேண்டும்; இந்தக் கொள்கை வெற்றி பெறும்.
இந்தப் பாடத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அய்யா மேலும் சொல்கிறார்:
‘‘பாமர மக்கள் உணர்ச்சிக்குக் குறைவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் பிறர் நலனுக்கு உழைப்பவன் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். கட்சியில் சொந்தப் பலன் பெறும் நிலையில் நான் இல்லை. என்னைப் போல் கட்சியில் சுயநலம் எதிர் பார்க்காத தோழர்களுக்குள் அன்பர்கள் எத்தனையோ பேர் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள மனமார பாடுபடுகிறார்கள் என்கிறபொழுதிலும், நம் கட்டுப்பாடு முன்னோக்கிச் செல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நெடுநாள் யோசித்தேன்; அப்பொழுதுதான் நானும், என்னுடைய தோழர்களும் சிந்தித்ததின் பயனாக, நம்முடையது ஒரு ஸ்தாபனம் – நாம் ஒரு லட்சியம் கொண்டவர்கள் என்று கூறுவதற்கு நம்மி டையே பொதுவான குறிப்பு உணர்ச்சிகள் கொடுக்கக் கூடிய பெயர்கூட இல்லை. அந்தப் பெயர்க் குறிப்புதான் மிக முக்கியம். இவற்றையெல்லாம் யோசித்துத்தான் நான் ‘திராவிடர்’ என்று பெயர் மாற்றினேன்” என்று சொன்னார்.
‘திராவிட மாடல்’ என்றால், தேள் கொட்டியதுபோல் துடிக்கிறார்கள்!
பார்ப்பனரல்லாதார் என்றால் நெகட்டிவ்; ‘திராவிட மாடல்’ என்றால், அவன் தேள் கொட்டியதுபோல் துடிக் கிறான் பாருங்கள்.
திராவிட என்ற வார்த்தையைக் கேட்டால், ஏதோ மின்சாரத்தில் கை வைத்ததுபோன்று துடிக்கிறான் பாருங்கள்.
தமிழன் என்று சொல்லிவிட்டால், அதில் அவனும் சேர்ந்துகொண்டு ‘அரோகரோ’ பாடுவான். ஆனால், ‘திராவிடன்’ என்று சொல்லும்பொழுது, நம்முடைய நாவெலாம் இனிக்கிறது. அந்த சக்தி எதற்கு இருக்கிறது?
அறிவாசானிடம்
நாங்கள் பயிற்சி பெற்றவர்கள்!
பெரியார் எதைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்; எதைச் சொன்னால், எதிரி ஒரே சொல்லில் ஓடுவானோ, அதைக் கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றல், எங்கள் அறிவாசானுக்கு உண்டு. அந்த அறிவாசானிடம் நாங்கள் பயிற்சி பெற்றவர்கள். எங்களை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்த்துவிட முடியாது.
இந்த இயக்கத்தை யாராலும், எதுவும் செய்துவிட முடியாது. அடக்குமுறை ஆயிரம் சந்திப்போம்; நாளைக்கும் சந்திப்போம்.
கடைசியாக பெரியார் என்ன சொன்னார் தெரியுமா, 1944 ஆம் ஆண்டு!
(தொடரும்)