வட இந்தியாவில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், முற்போக்குக் கொள்கைகள் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பான விவாதங்கள் தமிழ்ச்சூழலில் அவ்வப்போது எழுகின்றன. வட இந்தியாவின் பல நகரங்களுக்குப் பெரியார் நேரடியாகப் பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தலித் அமைப்பினர், தலைவர்கள் பெரியாரைச் சமூக விடுதலைப் போராளியாகவே கருதியது வரலாறு.
அம்பேத்கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கர், ராவ் பகதூர் ந.சிவராஜ் உள்ளிட்டோர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி, பல முறை பெரியாரை அழைத்து மும்பையில் கூட்டம் நடத்தியிருக்கிறது. “பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான தலைவர்” என்று வட இந்திய தலித் தலைவர்கள் போற்றியிருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கான்ஷிராம் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்புக் காட்டினர். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்ட கான்ஷிராம், வட மாநிலங்களில் – குறிப்பாகக் கிராமங்களில் அவற்றைப் பரப்பினார். பின்னாளில் மாயாவதிக்கு இருந்த அரசியல் அழுத்தங்கள் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலிருந்து பின்வாங்கியது. இந்தப் பின்னணியில், ஒரு தனிமனித ராகப் பெரியாரின் முற்போக்குக் கருத்துகளை வட இந்தியாவில் முன்னெடுத்துச் சென்றவர் ‘பெரியார்’ லலய் சிங்.
ஜாதிப் பின்னொட்டைக் கைவிட்டவர்
வசதியான பின்புலத்தைச் சேர்ந்தவர் லலய் சிங். 1911 செப்டம்பர் 1இல் கான்பூர் மாவட்டத்தின் கட்டாரா கிராமத்தில் ஒரு ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். தனது சொந்த ஊரில் தலித் சமூகத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட ஜாதியக் கொடுமைகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர். காவல் துறையிலும் ராணுவத்திலும் பணிபுரிந்தவர். ‘அசோக் புஸ்தகாலய்’ எனும் பெயரில் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்திய அவர், ‘சஸ்தா பிரஸ்’ (மலிவு விலைப் பதிப்பு) என்கிற பெயரில் அச்சகத்தையும் நடத்தினார். சமூக விடுதலைக் கருத்துகளைக் கொண்ட கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். பெரியார் தொடர்பான ஆங்கில நூல்கள் அவரது கவனத்தை ஈர்த்தன.
வட மாநிலங்களின் பல கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்ட லலய் சிங், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை, இளைஞர்களை அணிதிரட்டி அரசியல், சமூக விழிப்புணர்வு ஊட்டினார். பெரியார், அம்பேத்கர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். பலரின் கல்வி வளர்ச்சிக்கு உதவினார். தலித் சமூகத்தினர் அவரை மாபெரும் தலைவராக ஏற்றுக் கொண்டனர். அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டனர். ஆனால், அவர் சார்ந்த யாதவ் சமூகத்தினர் அவரைக் கடுமையாக வெறுத்தனர். ஒருகட்டத்தில் பவுத்த மதத்தைத் தழுவிய லலய் சிங், ‘யாதவ்’ என்கிற ஜாதிப் பின்னொட்டைத் தன் பெயரிலிருந்து ஒழித்துக் கட்டினார். ‘பெரியார் லலய் சிங்’ என்கிற பெயரிலேயே இயங்கினார்.
கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி
ராமாயணம் குறித்த பெரியாரின் கருத்துகள் அடங்கிய ‘தி ராமாயணா: எ ட்ரூ ரீடிங்’ என்னும் ஆங்கில நூலை ஹிந்தியில் ‘சச்சீ ராமாயண்’ எனும் தலைப்பில் லலய் சிங் மொழிபெயர்த்தார். அந்தப் புத்தகத்தை முன்வைத்துப் பெரும் பிரளயங்களையும் எதிர்கொண்டார். 1968இல் வெளியான அந்தப் புத்தகம், அடுத்த ஆண்டே உத்தரப்பிரதேச அரசால் தடைசெய்யப்பட்டது. அந்நூலின் பிரதிகளை அம்மாநில அரசு பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார் லலய் சிங். அவரது வழக்குரைஞர் பன்வாரி லால் யாதவ் எடுத்துவைத்த வலுவான வாதங்கள், இந்த வழக்கில் லலய் சிங்குக்கு வெற்றி தேடிக் கொடுத்தன. தடையை நீக்கி உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கீர்த்தி, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் திரும்பத் தருமாறு அரசுக்கு உத்தர விட்டதுடன், வழக்குச் செலவுக்காக ரூ.300 தொகையை லலய் சிங்குக்கு வழங்கவும் ஆணையிட்டார்.
அதிர்ந்துபோன உத்தரப் பிரதேச அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, சையது முர்தஜா ஃபஜல் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு, உத்தரப் பிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. உத்தரப் பிரதேச வரலாற்றில் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வழக்கில், இறுதி வெற்றி லலய் சிங்குக்குத்தான் கிடைத்தது.
கொலை முயற்சி
உண்மையில், அம்பேத்கருடன் இணைந்தேபவுத்த மதம் தழுவ லலய் சிங் திட்டமிட்டிருந்தார். ஆனால், காசநோயால் பாதிக்கப்பட்டு, ரத்த வாந்தி எடுக்கும் நிலையில் இருந்த அவரால் அந்நிகழ்ச்சி நடைபெற்ற நாக்பூருக்குச் செல்ல முடியவில்லை. அந்த வருத்தம் அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெரியாரின் கொள்கைகளை வட இந்தியாவில் பரப்புவதில் அர்ப்பணிப்புடன் உழைத்த அவர், அதற்காகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்டார்.
ஒருமுறை பீகாருக்குச் சென்றிருந்தபோது லலய் சிங் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். அந்தச் சம்பவம் அவரை மன தளவில் பெரிதும் பாதித்தது. உயிருக்கு அச்சுறுத்தல் என்பதையெல்லாம் தாண்டி, ‘சமூக விடுதலைக்காக இவ்வளவு உழைத்த பின்னரும் இப்படியெல்லாம் ஜாதி வெறியர்கள் துணிச்சலாகச் செயல்படுகிறார்களே’ என்கிற எண்ணம் அவரை வதைத்தது. ஜாதி அடக்கு முறைகளுக்கு எதிரான பெரியாரின் கொள்கைகளை வட இந்தியாவில் பரப் பியதால், அவருக்கு எதிராக ஜாதி ஆதிக்கவாதிகள் மத்தியில் வளர்ந்திருந்த வன்மத்தின் அடையாளம் அந்தச் சம்பவம்.
பெரியாரின் மறைவையொட்டி நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் லலய் சிங் கலந்து கொண்டபோது நிகழ்ச்சியில் பேசியவர்கள், “தென்னிந்தியாவில் வாழ்ந்த பெரியார் மறைந்துவிட்டார். இனி இந்த லலய் சிங்தான் நமக்குப் பெரியார்” என்று குறிப்பிட்டது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 1993 பிப்ரவரி 7இல் லலய் சிங் காலமானார்.
இன்றும் பேசப்படும் புத்தகம்
இன்றும் விற்பனையில் இருக்கும் ‘சச்சீ ராமாயண்’ நூல், இந்துத்துவ ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கும் ஆத்திரத்துக்கும் பல முறை உள்ளாகியிருக்கிறது. 2007இல், மாயாவதி உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்ற வளாகத்தின் முன்பு பாஜகவினர் ‘சச்சீ ராமாயண்’ புத்தகத்தை எரித்துப் போராட்டம் நடத்தினர். இந்நூல் விற்பனையைத் தடுக்குமாறு பாஜக தொண்டர்களிடம் முன்னணித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ‘சச்சீ ராமாயண்’ ஹிந்தியிலிருந்து மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வ.கீதா எழுதிய முன்னுரையுடன் ‘பெரியார் தர்ஷன் சிந்தன் அவுர் சச்சீ ராமாயண்’ எனும் புத்தகம் வெளியாகியிருக்கிறது.
பெரியார் சிந்தனைகள் குறித்து கி.வீரமணி ஆங்கிலத்தில் தொகுத்த புத்தகங்கள், நளினி ராஜன் எழுதிய Periyar: A Man Little Understood, பால ஜெயராமன் எழுதிய Periyar: A Political Biography of E.V. Ramasamy உள்ளிட்ட பல புத்தகங்கள் இன்றைக்குப் பெரியார் குறித்த தேடலில் இருக்கும் வட இந்தியர்களுக்குத் துலக்கமான சித்திரத்தை வழங்குகின்றன.
இன்றைக்கும் மாநிலங்களவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்குமார் ஜா, ‘சச்சீ ராமாயண்’ புத்தகத்தை விரித்து வாசித்தபடி, அதிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுகிறார். அந்தப் புத்தகம் குறித்த விவாதங்கள், பதிவுகள் இன்றைக்கும் சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டிய தலைவர் பெரியார் லலய் சிங்!
நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 17.9.2025