பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத பெரியார், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார்!
காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்; அதற்காகவே இவ்வாட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, செப்.20 பெரியார், உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கின்றார். பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது. அதனுடைய விளைவுதான், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், பெரியார் படத்தைத் திறந்து வைத்திருக்கின்றார். பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத பெரியார், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார். இதற்கெல்லாம் காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அதற்காகவே இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்!
கடந்த 17.9.2025 அன்று மாலை சென்னை
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியாரால் பயன்படாதவர்களின் குடும்பம் ஒன்று உண்டா தமிழ்நாட்டில்?
தாய்மார்களே, நண்பர்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். எவ்வளவுதான் நம்மை எதிர்க்கின்றவராக இருந்தாலும், இந்தக் கருத்துக்கு மாறுபட்டவராக இருந்தாலும், பி.ஜே.பி.யைச் சேர்ந்தவரோ அல்லது வேறு இயக்கத்தவராக இருந்தாலும்கூட அவருக்கும் சேர்த்துத்தான் இந்தக் கேள்வி.
பெரியாரால் பயன்படாதவர்களின் குடும்பம் ஒன்று உண்டா தமிழ்நாட்டில்? தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் என்றும் சொல்லலாம். ஆனால், குறிப்பாகச் சொல்கிறேன், பெரியாரால், பெரியார் தொண்டால் பயன்படாதவர்கள் என்று யாராவது உண்டா?
வீம்புக்காகச் சொல்லலாம், ‘‘ஏங்க, நான் கோவிலுக்குப் போகிறவன், கடவுளை நம்புகிறவன், நான் எப்படி பெரியாரால் பயன்பட்டு இருக்கிறேன்?’’ என்று.
கதவு திறந்தது பெரியாரின் கைத்தடி!
ஆனால், கோவிலுக்குள் இருந்த நிலை அன்றைக்கு வேறு; இன்றைக்கு வேறு. அதேநேரத்தில், இவருடைய மகனோ, மகளோ வேலைக்குப் போகிறார்கள், நன்றாக சம்பாதிக்கிறார்கள். அந்த உத்தியோகத்திற்குக் கதவு திறந்தது பெரியாரின் கைத்தடியாகும்.
எனவே, இன்றைக்கு எல்லோரும் படித்திருக்கிறார்கள்; எல்லோரும் அரசு வேலைதான் வேண்டும் என்கிறார்கள். பெண்களுக்கென நிறைய கல்லூரிகள், இன்றைக்குப் பெண்கள் மிக அதிகமாகப் படித்திருக்கிறார்கள். இவை அத்தனையும் எப்படி வந்தது? கடவுள் அவதாரத்தினால் வந்ததா? என்றால், இல்லை.
நம் நாட்டில்தான் தனித்தனி கடவுள்கள். கல்விக்கென ஒரு கடவுள் சரசுவதி என்கிறார்கள். எங்களுக்கு என்ன கடவுள்மேல் கோபம்? கிடையவே கிடையாது.
ஜாதியைக் காப்பாற்றுவதற்காக கடவுளைப் பயன்படுத்துகிறார்கள்.
மனுதர்மம் என்ன சொல்கிறது?
மனுதர்மத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரி யுமா? ‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கக் கூடாது; படிப்பைக் கொடுக்கக்கூடாது’’ என்று.
அதை எதிர்த்துப் போராடிய ஒரே தலைவர், நமக்கெல்லாம் வழிகாட்டியவர் தந்தை பெரியார்.
பெரியார் பிறந்திருக்கவில்லை என்றால், நாமெல்லாம் படித்திருக்க முடியாது.
உயர்ஜாதிக்காரன், மேல்ஜாதிக்காரன், பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும். கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக் கூடாது. அடிமையாக இருக்கவேண்டும் என்பதுதான் மனுதர்மம்.
படித்ததற்காகத் தண்டனை கொடுத்த ஒரே ஒரு மதம் ஹிந்து மதம்!
அம்பேத்கர் அவர்கள் அழகாக ஒன்றைச் சொன்னார், ‘‘உலகத்தில், படித்ததற்காகத் தண்டனை கொடுத்த ஒரே ஒரு மதம் ஹிந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மதம்தான்’’ என்றார்.
அப்படியே மீறி சூத்திரன் படித்துவிட்டால், நாக்கை அறுக்கை வேண்டும்; காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று மனுதர்மம் சொல்கிறது.
இதையெல்லாம் எதிர்த்துப் போராடியவர்தான் பகுத்த றிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.
சுவாசக் காற்றினுடைய முக்கியத்துவம் ஒருவருக்கு எப்போது தெரியும்?
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம்
இயல்பாக, உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு என்ன அடையாளம்? தூங்கிக் கொண்டிருப்பவரின் மூக்கருகே கையை வைத்துப் பார்ப்பார்கள்; தூங்கிக் கொண்டிருக்கிறானா, அல்லது உயிர் இருக்கிறதா? என்று.
மூச்சுக் காற்று இல்லை என்றால், நம்மால் வாழ முடியாது. ஆனால், மூச்சுக் காற்றைப்பற்றி யோசிக்கின்றோமா? அதை கவனத்தில் கொள்கின்றோமா? மூச்சுத் திணறலின்போதுதான், மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவம் தெரியும்.
அதுபோன்று, நெருக்கடி என்று வரும்போதுதான், பெரியாருடைய முக்கியத்துவம் தெரியும்; பெரியாருடைய பயன் என்னவென்று தெரியும்.
அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு!
1929 ஆம் ஆண்டு, நம்மைப் போன்று பலர் பிறக்காத காலம் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் அய்யா அவர்கள் நிறைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்பதும் அதிலொன்றாகும்.
தாய்மார்கள், சகோதரிகள் நன்றாகக் கவனிக்கவேண்டும். வீட்டில் நீங்கள் சண்டை போடும்போதுகூட, எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள்? பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தீர்களா? என்றுதான் கேட்பார்கள்.
ஆனால், ‘‘எனக்குச் சொத்தில் பாகம் கொடுப்பீர்களா?’’ என்று கேட்பதில்லை.
பெண் குழந்தை பிறந்தால், அது வெறுக்கத்தக்கது! ஆண் பிள்ளை பிறந்தால், ‘‘எனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது’’ என்று சொல்லும்போதே முகத்தில் ஒரு மலர்ச்சி. ஆனால், பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லும்போது, ‘‘பொட்டை புள்ளை பிறந்திருக்கிறது’’ என்பான்.
இந்த நிலையை மாற்றிய இயக்கம் இருக்கிறது என்றால், அதுதான் தந்தை பெரியார் இயக்கமாகும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்!
சொத்துரிமை பெண்களுக்கு இருந்தால்தான், அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கும் என்றார் பெரியார்.
‘‘என்னிடம் எதிர்த்துப் பேசாதே, அப்படி பேசினால், உங்கப்பன் வீட்டிற்கு அனுப்பி விடுவேன்’’ என்று ஒரு கணவன், தன் மனை வியைப் பார்த்துச் சொல்வான்.
அந்தப் பிள்ளைக்கு எழுதப் படிக்கத் தெரி யாது. அதனால், தன் கணவனுக்குப் பயந்து, அடிமைகளாகத்தான் பெண்கள் வாழ்ந்தார்கள்.
அந்த நிலைமையை மாற்றவேண்டும் என்றால், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
அதனால்தான், செங்கற்பட்டு மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத பெரியார் செய்த சாதனைகள்!
ஆட்சிக்கே போகாமல், பெரியார் செய்த சாதனைகளைப்பற்றி இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள்.
அம்பேத்கரும் – பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர்.
அம்பேத்கர் அவர்கள், சட்ட அமைச்சராகிறார். ஹிந்து கோட் பில் என்று சொல்லி, அதில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறார்.
மனம் நொந்துபோய் பதவி விலகிய அண்ணல் அம்பேத்கர்!
ஸநாதனத்தைப்பற்றி பேசியவர்கள், காங்கிரஸ் ஆட்சி இருந்த அந்த நேரத்தில், அம்பேத்கர் கொண்டு வந்த மசோதாவை அனுமதிக்கவில்லை.
அதனால், மனம் நொந்து போய், அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
‘‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’’ என்று நம் நாட்டில் ஒரு பழமொழி இருந்தது. இப்படிச் சொன்னவர்களைச் சிந்திக்க வைத்தவர் பெரியார். இரண்டு பேருக்கும் ஆஸ்தியில் சம பங்கு வரவேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.
அம்பேத்கர் அவர்கள் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று மசோதாவைக் கொண்டு வந்த நேரத்தில், ஒரு நிகழ்வு நடந்தது.
‘‘ஹிந்து மதம் எங்கே போகிறது?’’
‘‘ஹிந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் எழுதியிருப்பதை ஆதாரத்தோடு சொல்கிறேன்.
‘‘டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்க ளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.
அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ – இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.
நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம்… காஞ்சி புரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிரா மத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றைப் பார்வையிட எசையனூருக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.
என்ன ஸ்வாமி? என்றேன் நான். அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய்… அழியப் போறது…’ என படபடப்பாகப் பேசினார்.
“இதப்பார்த்தீரா… ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா… அபாண்டமா அபச்சாரமா போயிடும்’’ – என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.
நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான் ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்.’
இந்தப் பதிலைக் கேட்டதும்… “அசட்டுத்தனமாகப் பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்திரீ தர்மமே பாழா யிடும். ஸ்தீரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்…’’ என்றெல்லாம் அவசர ஆணைகளைப் பிறப்பித்தார் மகாபெரியவர்.’’
சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம், அன்றைக்கு நிறைவேறவில்லை.
அம்பேத்கரால் செய்ய முடியாததை செய்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞருக்கு உண்டு!
ஆனால், அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்ததால், பெண்களுக்குச் சொத்து ரிமை சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, அன்றைக்கு அம்பேத்கரால் செய்ய முடியாததை செய்து, டில்லி ஆட்சியை ஏற்க வைத்த பெருமை கலைஞர் ஆட்சிக்கு உண்டு – தி.மு.க. ஆட்சிக்கு உண்டு. அதைச் செய்ய வைத்ததற்கு மூல காரணம் தந்தை பெரியார்.
ஆகவே, காரணம் – காரியம் இரண்டும் மிக முக்கியம்.
இன்றைக்கு நம்முடைய காவல்துறையில், நிறைய பெண்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள். டி.ஜி.பி. பதவி வரையில் சென்று, ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.
ஓர் அம்மையார்கூட, அவருடைய அனுபவத்தை பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதியிருக்கிறார்.
‘‘ராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்கள் சேர்க்கப்படவேண்டும்!’’
செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண முதல் மாநாட்டில், ‘‘ராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்கள் சேர்க்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்குக் காவல்துறையில் வேலை கொடுக்கலாமா? ராணுவத்திற்குச் சென்று, அவர்களால் கடுமையான பயிற்சிகளைச் செய்ய முடியுமா? அவர்களால் நீண்ட நேரம் நிற்க முடியுமா? ஓட முடியுமா? என்றெல்லாம் அன்றைக்குக் கேள்வி எழுப்பினார்கள்.
இன்றைக்கு ஒரு செய்தியைக் கேட்டு, நான் மகிழ்ந்த செய்தி அது. மேடையில் தலைமை அதிகாரியான பெண் நிற்கிறார்; அவருக்கு, ஆண்கள் எல்லாம் சல்யூட் அடிக்கிறார்கள்.
இதுதான் பெரியார் செய்தது.
ஒரு துளி ரத்தம் சிந்தாமல், ஒரு கலவரம் நடக்காமல் இது நடந்திருக்கிறது.
நம்முடைய நாட்டில், பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விடும் முறை இருந்தது. அதை ஒழிப்பதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரும், நீதிக்கட்சியும்தான்.
எந்த மதத்தில், பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விடுகிறார்கள்?
ஹிந்து மதத்தைக் குறை சொல்கிறார்கள் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறவர்களைப் பார்த்துக் கேட்கிறோம், ‘‘வேறு எந்த மதத்தில், பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விடுகிறார்கள்?’’ என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
நான் எங்கே பாதிக்கப்பட்டு இருக்கிறேனோ, அங்கே தானே எனக்குக் கோபம் வரும்.
நீ ஏன் அந்த இடத்தில் மருந்து போடவில்லை? என்று கேட்கலாம்.
எனக்குக் காதில் அறுவைச் சிகிச்சை செய்திருக்கி றார்கள். அந்தக் காதில்தான் மருந்துவிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடனே ஒருவர், ‘‘ஒரு காதில் மட்டும் மருந்து விடுகிறீர்களே, இன்னொரு காதில் ஏன் மருந்து விட்டுக் கொள்ளவில்லை?’’ என்று கேட்கிறார்.
எந்தக் காதில் கோளாறோ, அந்தக் காதில்தான் மருந்து விடவேண்டும் என்பதுதானே நடைமுறை.
ஆகவே, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், விதாண்டா வாதத்திற்காகவோ, வேண்டுமென்றோ அல்லது கூலிப் பட்டாள அடிமைகளாகப் பேசக்கூடியவர்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை.
பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது!
பெரியார், உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழு வதும் வளர்ந்து கொண்டிருக்கின்றார். பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது. அதனுடைய விளைவுதான், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், பெரியார் படத்தைத் திறந்து வைத்தி ருக்கின்றார்.
பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத ஒருவர், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார் என்றால், அது சாதாரண மானதா, என்பதை எண்ணிப் பாருங்கள்.
காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
இதற்கெல்லாம் காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அதற்காகவே இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்குச் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது. நாங்கள் தேர்தலில் நிற்பவர்கள் அல்ல; எங்களுக்காக ஓட்டுக் கேட்கமாட்டோம். ஆனால், அதேநேரத்தில், ஜனநாயகத்தில் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை மணி அடிப்பவர்கள் நாங்கள்தான்.
இன்றைக்கு நமக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டியது எங்கள் கடமையாகும்.
(தொடரும்)