தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு…! மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு? நமது வன்மையான கண்டனத்திற்குரியது!

5 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு, நமது வன்மையான கண்டனத்திற்குரியது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய ஒன்றிய அரசு, இந்தியா முழுவதும் உள்ள மரபார்ந்த ஓலைச்சுவடிகளைப் பேணிப் பாதுகாப்ப தற்கும், பரப்புவதற்கும்  தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கும் ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன் பெயர் க்யான் பாரதம் (Gyan Bharatam). இத்திட்டத்திற்கு ரூ.482.85 கோடி (2024-2031) ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறையின் சார்பில் பன்னாட்டுக்  கருத்தரங்கம்!

இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை செப்டம்பர் 11 முதல் 13 வரை – ஓலைச்சுவடி பாரம்பரியத்தின்மூலம் ‘‘இந்திய அறிவு மரபை மீளுரிமைக் கோருதல்’’ (Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage) என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக்  கருத்தரங்கை புதுடில்லியில் ஒருங்கி ணைத்து நடத்தியுள்ளது.

இதன் தலைமைப் புரவலராக ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத், புரவலராக ஒன்றிய பண்பாட்டுத் துறை செயலாளர் விவேக் அகர்வால் இடம்பெற்றுள்ளனர்.

இத்துடன் ஒருங்கிணைப்புக் குழு, ஆலோசகர் குழு என இரண்டு குழுக்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் திருமிகு. அமிதா பிரசாத் சார்பாய், கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மய்யத்தின் உறுப்பினர் செயலாளர் முனைவர் சச்சிதானந்த் ஜோஷி, அதன் நிர்வாகத் தலைவர் பேரா.ரமேஷ் சி.கர், இந்தியத் தொல்லியல் கழகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பேரா. அலோக் திரிபாதி, ஒன்றிய பண்பாட்டுத் துறையின் இணை செயலாளர் திரு. சமர் நந்தா, ஞான பாரதம் திட்ட இயக்குநர் பேரா. அநிர்பன் டாஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஓலைச்சுவடி பாரம்பரியத்தின்மூலம் ‘‘இந்திய அறிவு மரபை  மீளுரிமைக் கோருதல்’’ (Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage) என்பதன் ஒரு பகுதியாக பணிக்குழு அறிக்கைகள் (Working Group Reports) வெளியிடப்படுகின்றன. அதில் ஒன்று ‘‘Decipherment of Ancient scripts: Indus, Gilgit and Sankha’’ என்ற தலைப்பில் ஓர்  அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிந்துவெளியின் பன்மைத்துவத்தை அறியாதவர்கள்!

இந்த அறிக்கை ஒருங்கிணைப்பில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் பேரா. அலோக் திரிபாதி, திருமிகு. பிரியங்கா சந்திரா, டி.ஜெ. அலோனி, திரு. ஹேமசகார் ஏ. நாயக், முனைவர் புவன் விக்ராமா, முனைவர் கவுதமி பட்டாசார்யா, முனைவர் அப்ரஜிதா ஷர்மா, முனைவர் தீப்தி அக்னிஹோத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் யாருமே சிந்துவெளியின் பன்மைத்து வத்தைப் பற்றியோ, அதற்கும் திராவிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ ஆய்வை மேற்கொண்டவர்கள் அல்லர். சிந்துவெளிப் பண்பாடு உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே அது திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையது என்று ஜான் மார்ஷல் தொடங்கி, சுனிதி குமார் சட்டர்ஜி, அருட்தந்தை ஹென்றி ஹீராஸ், அய்ராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியத் தொல்லியல் கழகம் தனி உலகத்தில் உள்ளது. அது ஆட்சியாளர்களின் அரசியல் நோக்கத்திற்காகவும், ஒற்றைவாத அரசியல் செயல்பாட்டிற்காகவும் செயல்படுகிறது.

ஒற்றைவாதத்தைத்
தூக்கிப்பிடிப்போரே உள்ளனர்!

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றின் பண்பாட்டின் தோற்றத்திற்கு அடிப்படையாக உள்ள சிந்துவெளி குறித்து அரசு மேற்கொள்ளும் ஆலோசகர் குழுவில், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் பேரா. சாமு கிருஷ்ண சாஸ்திரி, சிம்லா மேம்பட்ட ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனத்தின் தலைவர் பேரா. ஷாஷி பிரபா குமார், ஒன்றிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரா. சிறீனிவாச வரகேடி, அய்அய்டி கரப்பூர் பேரா. ஜோய் சென், ஜெஎன்யு பேரா. கிரிஷ் நாத் ஜா, அய்அய்டி ஜோத்துபூர் மேனாள் இயக்குநர் பேரா. ஷாந்தனு சவுதரி, சென்னை திட்ட ஆய்வுகளுக்கான மய்யத் தலைவர் எம்.டி. சிறீனிவாஸ், அகமாதாபாத் எல்.டி. இந்தியவியல் நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் ஜிதேந்திர பி. ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தெரிகிறது இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் எவரும் இதில் இல்லை என்பது. இத்துடன் ஒற்றைவாதத்தைத் தூக்கிப்பிடிப்போரே இதில் உள்ளனர் என்பது வெளிப்படை.

தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது இது ஒன்றும் புதிது இல்லை!

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் பானைக்கீற லில் தொடங்கி, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், அச்சு நூல்கள் எனப் பரந்த அளவில் தரவுகளைக் கொண்ட தமிழ் மொழியின் பின்னணியில் இருந்து யாரும் இதில் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சி. ஆனால், வியப்பேதும் இல்லை. தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது இது ஒன்றும் புதிது இல்லை. இவர்கள் இடம் அளித்திருந்தால்தான் வியப்பு.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆய்வாளர்களுக்கும் தெரியும் தென்னிந்தியாவில்தான் ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும் அதிகம். ஆனால், இங்கிருப்ப வர்களைத் தவிர்த்து, எத்தகைய முறையில் இந்திய அறிவு மரபை மீள்கட்டமைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஓர் ஆய்வில் – இந்தியாவின் அடித்தளமாக உள்ள பன்மைத்தன்மை இடம்பெற வேண்டும். ஆனால் அந்த அறிக்கை அவ்வாறு இல்லை.

அய்ராவதம் மகாதேவன்

இந்த அறிக்கையில் அறிஞர் அய்ராவதம் மகாதேவ னின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவரின் வழிகாட்டுதலில் 2007 ஆம் ஆண்டு உரு வான சிந்துவெளி ஆய்வு மய்யம் குறித்து எந்தத் தகவ லும் இல்லை. அய்ராவதம் மகாதேவன் தனது இறுதி கட்டுரையில், ‘சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிட அடித்தளம்’ என்ற சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பால கிருஷ்ணன் எழுதிய கட்டுரையை அடிகோடிட்டுக் காட்டி எழுதினார். அவரே ஆர். பாலகிருஷ்ணன் அவர்களை மதிப்புறு ஆலோசகராக சிந்துவெளி ஆய்வு மய்யத்தை வழிநடத்தும்படி கூறினார்.

சிந்துவெளி ஆய்வு மய்யத்தின்மூலம் ஆர். பால கிருஷ்ணன் ஒருபுறம் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ என்ற நூலை எழுதி, சிந்துவெளிக்கும், தொல் தமிழ் நிலத்திற்குமான உறவை அறிவியல்ரீதியாக வெளிக்கொண்டு வந்தும், மறுபுறம் சிந்துவெளி குறித்து தமிழ்நாட்டில் பரவலாக அனைவரும் அறியும்படி பல வேலைகளைச் செய்தும் வருகிறார். அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

க்யான் பாரதம் (Gyan Bharatam) என்பதன் நோக்கமும் சரி, அதன்வழி முன்னெடுக்கப்படும் வேலைகளும் சரி – இந்தியத் துணைக்கண்ட வரலாற்றின் பன்மைத்துவத்திற்கு குந்தகம் விளை வித்து, ஒற்றைவாதப் போக்கை மய்யப்படுத்தும் செயல்பாட்டிற்குத் துணை போவதாக அமைந்துள்ளதே தவிர வேறில்லை.

அவசர, அவசியமாகும்!

இதுபற்றி நமது தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும் உடனடியாக தனது எதிர்ப்பைத் தெரிவித்து, புதிய தென்னாட்டு தமிழ்நாட்டு (ஓலைச் சுவடி) வல்லுநர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு இடம் அளிக்கும் உரிமையை வற்புறுத்திட வேண்டியது அவசர, அவசியமாகும்.

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20.9.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *