ஒருசமயம் விருதுநகரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன்.
பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியாரைக் குத்திவிட ஓடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலீசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான் இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.
– அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை
கே.வி.அழகிரிசாமி
நூல்: இதோ பெரியாரில் பெரியார்