ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அன்றாடம் தூங்குவதற்கு பயன்படுத்தும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகளால் தோல் நோய்கள் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாரத்திற்கு ஒரு முறை துவைக்கப்படாத தலையணை மற்றும் படுக்கை விரிப்பில் சுமார் 30 லட்சம் கிருமிகள் குடியேறி இருக்கும் என்றும், இது கழிவறையில் உள்ளதைவிட அதிகம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவை தலையணை மட்டுமல்லாமல், படுக்கை விரிப்புகளில் பல்வேறு வகையான பூஞ்சைகள், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள், இறந்த மனித தோல் செல்கள், அவற்றை உண்டு வாழும் ‘டஸ்ட் மைட்’ என்னும் தூசிப்பூச்சிகள், வியர்வை கழிவு, செல்லப்பிராணி முடிகள், அழுக்கு துகள்கள், பாக்டீரியா, வைரஸ் ஆகியவை இதில் அடங்கும்.
மனித உடலில் இருந்து ஒவ்வொரு நாளும் தோல் செல்கள் உதிர்ந்து விழுகின்றன. வியர்வையுடன் கலந்து வெளியேறும் இந்த செல்கள்தான் தூசிப்பூச்சிகளின் உணவாக இருக்கின்றன. இந்த கிருமிகள் மனித தோலில் புகுந்து பல்வேறு தோல் நோய்களை பரப்புவதோடு நுரையீரல் பாதிப்புகளையும் உருவாக்குகின்றன. மேலும், உடல் பலவீனம், சோர்வு, எரிச்சல் உள்பட பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவிக்கின்றன.
எனவே, தலையணை உறைகள் சில நாட்களுக்குள் மாற்றப்பட வேண்டும் என்றும், படுக்கை விரிப்புகள் வாரத்திற்கு ஒருமுறை துவைக்கப்பட்டு வெயிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தோல் தொடர்பான பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளனர்.