கரூரில் முதலமைச்சர் எழுப்பிய வினாக்கள்

தி.மு.க. சார்பில் கரூரில் கடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் முப்பெரும் விழா எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. கொட்டும் மழையிலும், கொள்கையாளர்கள் கூடிய திரள் ஆதலால், நாற்காலியை தலைக்கு மேல் கவிழ்த்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஏதோ கூட்டப்பட்ட கூட்டம் என்றால், வேறு மாதிரியாகத் தான் முடிந்திருக்கும். கூடியது கூட்டமல்ல – கொள்கை சால் பெருந்திரளே!

முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக்கியமான கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

அதிலும் எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாக நடந்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. பற்றி அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அறிவார்ந்தவை!

‘கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியதே பிஜேபிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ‘ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி’ – என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இது காலங்கடந்த ஞானோதயமா? பிஜேபியை ஆதரிப்பதற்கு எதையாவது சமாதானம் சொல்ல வேண்டும் என்கிற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளாரா? என்பது முக்கியமான ஒரு கேள்வி.

இல்லை, உண்மையைத் தான் கூறியிருக்கிறார் என்றால் இடையில், ‘இனி பிஜேபியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வந்ததேன்? ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது ஏன்?’ என்ற கேள்விக்கு நாணயமாகப் பதில் சொல்ல வேண்டும்.

நெருக்கடி நிலை காலத்தில் ‘அகில இந்திய’ என்ற சொற்களைக் கட்சியின் பெயரில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், அதிமுக ஒரு மாநிலக் கட்சிதான்.

‘‘மாநில உரிமைக் காப்பாற்றிட இராணுவத்தையும் சந்திப்பேன்’’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். என்பதை மறக்க முடியுமா? மறுக்கத்தான் முடியுமா?

மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அம்மையார் ‘‘மோடியா? லேடியா?’’ என்று வினா எழுப்பியதுண்டே!

இந்த நிலையில் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு டில்லிக்குச் சென்று திராவிட இயக்கத்திற்குச் சித்தாந்த ரீதியாக நேர் எதிரியான பிஜேபியிடம் சரணடைவது எந்த வகையில் சரியானது?

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தொடர்போ, திராணியோ இல்லாமல் ‘அடிமைச் சாசனம்’ எழுதிக் கொடுத்து விட்டார். எதிர்க்கட்சித் தலைவர் என்று முதலமைச்சர் வைத்துள்ள குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

‘‘திராவிடக் கட்சிகளை ஒழித்தே தீருவோம்’’ என்று பிஜேபி கூறியதெல்லாம் மறந்து போய் விட்டதா?

‘திராவிடம்’ என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு, ‘‘அதைப்பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதையும் கரூர் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் அம்பலப்படுத்தி விட்டரே!

அடிப்படைக் கொள்கை என்ன என்பது குறித்து அறவே தெரியாத ஒருவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவைதான்!

ஜெயலலிதா அம்மையார் மறைந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. என்பது சின்னா பின்னப்படுத்தப்பட்டுள்ளதானது – மக்கள் மத்தியில் முகம் சுளிக்கச் செய்து விட்டதே!

சிதறுண்டு போன கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முயற்சியை சிலர் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு  எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காததற்குக் காரணமே, கட்சியில் தனக்குப் போட்டியாக யாரும் வந்து விடக் கூடாது என்ற சுயநலமே தவிர, வேறு கொள்கை ரீதியான காரணம் அறவே கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ.) ஜி.எஸ்.டி.,   உதய்மின் திட்டம் முதலியவற்றிற்கு பிஜேபிக்கு ஆதரவாகவே அதிமுக வாக்களித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கு கொள்ள லாம் என்று தமிழ்நாட்டுக்கு விரோதமான ஓர் ஆணையைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.

இந்த அபாயத்திலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட திராவிட மாடல் அரசு நடத்தும் திமுக அரசு ஒரு நிபந்தனையைக் கொண்டு வந்தது. ‘தமிழ்த்தாள்’ ஒன்றைக் கொண்டு வந்து, அதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற நிபந்தனை தான் அது.

தி.மு.க. அரசுக்கும் – அதிமுக அரசுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை சீர்தூக்கிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யும் பாதுகாப்பான அரசு எது என்பதை எளிதாகவே தெரிந்துகொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால் திமுக ஆட்சியானது திராவிட இயக்க கொள்கை வழி நாட்டு நலன் கருதி நடைபோடும் நல்லாட்சியாகும்.

அதிமுகவைப் பொறுத்த வரையில், ‘திராவிட’ என்பதையும் ‘அண்ணா’ என்பதையும் தம் கட்சியிலும், கொடியிலும் பொறித்திருந்தாலும் – இவற்றுக்கு நேர் எதிரான சந்தர்ப்பவாத அமைப்பே என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.

ஒரு நான்கு ஆண்டு தி.மு.க. ஆட்சி யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சாதனைகளை நாளும் நாளும் சாதித்துக் கொண்டிருக்கும் மக்கள் நல (Welfare State) அரசே!

2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலிலும் இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத அளவுக்கு மகத்தான சாதனையைப் படைக்கும் என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *