95 வயதிலும் ஓயாதுழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான் அவர் கற்றுக் கொடுத்ததைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா? நன்றி! நன்றி!!

என் உடல் வலித்தது – தோழர்களின் உற்சாகப் பணியால் வலி மறைந்தது!

தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை!

* தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாட்டம்!

* வரலாற்றில் நிலைத்து நின்று தந்தை பெரியாரின் சீலத்தைப் பறைசாற்றும் பெரியார் உலகம்!

* பெரியார் நாடான உரத்தநாடு – கொங்கு மண்டலத்தின் மேற்கு மாவட்டங்களில் நிதி குவித்த பொறுப்பாளர்களுக்கு, தோழர்களுக்குப் பாராட்டு!

இவ்வாண்டு தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் உலகெங்கும் சிறப்புடன் நடந்தேறியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், பெரியார் உலகத்திற்கு ஓயா உழைப்பில் மூழ்கி, நன்கொடை திரட்டித் தந்த தோழர்களைப் பாராட்டியும், தோழர்களின் உற்சாகப் பணிதான் என் உடல் வலிக்கான மாத்திரை என்றும், 95 வயதிலும் உடல்நலிவையும் பொருட்படுத்தாது உழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான், அதைப் பின்பற்ற வேண்டாமா? என்றும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இவ்வாண்டு நம் அறிவுப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களது 147 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மாட்சி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்குக் குதூகலத்தைத் தந்த ஒன்று!

ஆரியம் அலறும் வண்ணம் கொள்கைக் கோமகன் தந்தை பெரியாரின் கொள்கை உலகெங்கும்!

ஆரியம் அலறும் வண்ணம், கொள்கைக் கோமகனின் தொண்டறம் உலகளாவிய அளவிற்குச் சென்றிருக்கிறது என்பது மட்டுமல்ல; வென்றும் வருகிறது என்பதற்குப் பன்னாட்டிலும் அவரது ‘‘மண்டைச் சுரப்பே”, படரும் ஜாதி நோய்க்கு மருந்தாகி, பயன்பட்டு வருகிறது!

‘‘பெரியார் உலக மயம் –

உலகம் பெரியார் மயம்!’’

‘‘21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!’’

சிறுகனூரில் ‘‘பெரியார் உலகம்!’’

சமூக விஞ்ஞானம் என்றும் சரித்திரத்தில் தோற்கவே தோற்காது என்பதற்கு, விழா நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, திருச்சி சிறுகனூரில் அமைந்துவரும் பெரியார் உலகப் பணிகள் நாளும் வளர்ந்தே வருகின்றன என்பதும் ஒரு நற்சான்று!

வையகத்தினை வியக்கச் செய்யும் அந்த வித்தகம் – மானிடப் பற்றையே மய்யமாகக் கொண்டு புது உலகம் காண வைக்கும் மகத்தான சிந்தனையாளர் – அச்சிந்தனைகளைச் செயலாக்கம் செய்து, பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் வென்று காட்டியது எப்படி என்ற வரலாறு அங்கே விரிய இருக்கிறது!

ரத்தம் சிந்தா சமூகப் புரட்சி – ஆயுதம் ஏந்தாமல் சமூகத்தையே மாற்றிய அறிவுப் புரட்சி எப்படி நிகழ்ந்தது என்று அகிலம் அறிந்து கொள்ளும் ஒரு வரலாற்று மய்யமாகி, கம்பீரமாக எழுந்து நிற்கும்!

உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அதன் தொடக்க விழா தென்னாட்டவர்களையும், வடநாட்டவர்களையும், பன்னாட்டவர்களையும் அழைத்து நடத்தப்படும் அளவுக்கு அது உற்சாகத்துடன் நடைபெற, நிதியளிப்புக்கு நமது அன்பான வேண்டுகோளை ஏற்று, உடனடியாக  நாம், நமது முதல் கட்ட ஒதுக்கீடு தொகையான 2 கோடி ரூபாய் இலக்கினை இம்மாத இறுதிக்குள் அடைவோம் என்ற அளவிற்குப் பற்பலரும் உதவுவது இப்பணியின் தேவையை நன்கு உலகுக்கு உணர்த்துகிறது!

நமது கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களின்
ஓயா உழைப்பால் நிதிகள் குவிகின்றன!

அத்துடன் கட்டுப்பாட்டின் சின்னமாக என்றும் இருக்கும் நமது கழகக் களப்பணி பொறுப்பாளர்களின் கடமை உணர்வுக்கும், நன்கொடை நல்கிவரும் நன்மக்களுக்கும் நாம் எப்படி நன்றி சொல்வது, பாராட்டுவது?

எனது உடல்நிலைக்கு, ‘‘நமது மக்களின் பேரன்பும், அளவற்ற பாசமும், நம்மை மேலும் மேலும் தொண்டறத்தின் அடிமையாக்கி, பணி செய்து கொண்டே இரு; பிணி தானே தீரும்’’ என்று பாடம் சொல்லித் தருகிறது.

கழகத்தவர்களிடம், மக்கள் காட்டும் அன்பிற்கும், பாசத்திற்கும் எல்லை அளவே இல்லை!

பெரியார் என்ற அந்த மூச்சுக் காற்றினால் தானே நாம் வாழ்கிறோம்!

மானமும், அறிவும் பெற்ற மனிதர்கள் ஆனோம்; அந்தத் தொண்டறத்தின் முழுத் தோற்றம்தான் பெரியார் உலகம் இன்று செதுக்கப்படும் வரலாறு!

அள்ளித் தருகிறார்கள் மகிழ்ச்சியோடு! அத்தகையவர்களை அடையாளம் கண்டு, ஜாதி, மத, கட்சி பேதமின்றி அனைவரிடமும் சென்று, கிராமம் கிராமமாகப் போய்த் திரட்டிய 17 லட்சம் ரூபாயினை, ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம், அதன் முக்கிய நன்கொடை திரட்டுக் குழுவினர்களான மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், கு.அய்யாத்துரை, தோழர் த.ஜெகந்நாதன், கபடி நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழகச் செயலாளர்), மாநல்.பரமசிவம், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், புலவர் இரா.மோகன்தாஸ் உள்ளிட்ட ஏராளமான செயல்வீரர்கள், தொண்டராம்பட்டில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில், அய்யாவின் தொண்டறச் சின்னத்திற்காக ரூ.17 லட்சம் நிதியளித்தனர்.

‘பெரியார் நாடு’ என்று அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் தெற்கு ஒன்றியம்,  ஒரு பகுதிதான்; மற்றொரு பகுதியான வடக்கு ஒன்றிய நகரக் ‘கோட்டா பணியை’ விரைவில் தொடங்கவிருக்கிறோம் என்று மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களும், அங்குள்ள பொறுப்பாளர்களும் செய்யவிருக்கின்றனர் என்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

தஞ்சை நகரமும், மாவட்டப் பகுதிகளும் நிச்சயம் பின்தங்காது!

மதுரை மாவட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் மற்றும் கூட்டுப் பொறுப்புத் தோழர்கள் முதல் தவணையாக தனித்தனியே வழங்கிய ரூ.10 லட்சத்தை எட்டினாலும் அது முதல் தவணைதான் என்றும் உறுதி கூறியுள்ளனர்.

பெரியார் நாடான உரத்தநாடும் – கொங்கு மண்டலத்தின் மேற்கு மாவட்டங்களிலும் நிதிகள் குவிய காரணமாக இருந்த தோழர்களுக்குப் பாராட்டு!

கொங்கு மண்டலத்தின் மேற்கு மாவட்டங்களில் நமது கழகத் தேனீ மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் அவர்களது கடும் முயற்சியும், மாவட்ட ப.க. ் தலைவர் அரூர் ராஜேந்திரன், கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி மாரி கருணாநிதி அவர்களும், அவரது தோழர்களும், சேலம் மாவட்டத்தில் வீரமணி ராசு, அவர்களது சீரிய செயலாக்கமும், கிருட்டிணகிரி மாவட்டத்தில் கோ.திராவிடமணி, கெ.பொன்முடி, வெங்கடேசன், அண்ணா.சரவணன், தர்மபுரி மாவட்டத்தில் கு.சரவணன், தமிழப்பிரபாகரன், மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் தோழர் கே.சி.எழிலரசன், மாவட்டச் செயலாளர் கலைவாணன் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பான முறையில், பெரியார் உலக நிதி திரட்டலுக்கு அச்சாரம் தந்து, பணி தொடங்கி, இரண்டு நாள்கள் (செப்.13, 14), 750 கிலோ மீட்டர் பயணத்தில் வேலூர், ஆம்பூர் (மாராபட்டு), கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அவர்கள் காட்டிய அன்பும், கிருஷ்ணகிரியில் தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் பாசமிகு மதியழகன் அவர்களது குடும்பத்தினரும், அதுபோல பல குடும்பத்துப் பாச மழையில் நனைந்து, 31 லட்சம் ரூபாய் நிதியைப் பெற்று வந்தோம்.

உடல் வலித்தது; ஆனால் உள்ளம் மகிழ்ந்தது!

என் வலிக்கு “மாத்திரை”களும் கிடைத்தன!

தந்தை பெரியார் கற்றுத் தந்த பாடம்

‘இது ஒரு சாதனையா?’ என்று செய்தியாக்கி உள்ளனர் – தனது 95 ஆம் ஆண்டிலும் சிறுநீர்  இயற்கை வழியில் பிரியாததால், ரப்பர் குழாய் மூலம் சிறுநீர் வடிய, அந்தக் குழாயை ஒரு பாட்டிலில் விட்டு, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்துச் சுமந்து பிரச்சாரம், போராட்டம் என்று இயங்கிய தொண்டறத்தின் இமயமான தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாயிற்றே நான், அவர் கற்றுத் தந்த பாடத்தைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா?

ஆகவேதான் வலியிலிருந்தாலும் வலிமையோடு சுற்றுகிறேன்.

அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

 

சென்னை     தலைவர்,

19.9.2025     திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *