தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

பதவிக்கு வருகிறவர்கள், பதவியில் நீடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், கட்சித் தொடங்கியவுடன் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்கிறவர்கள் – ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தாலும்-
ஒரு மய்யப்புள்ளி அவர்களையெல்லாம்
ஈர்க்கிறது என்றால், அது தந்தை பெரியார்தான்!
பெரியார் எல்லாருக்கும் உரியார்; யாருக்கு அவர் உரியார் அல்ல என்றால், நரியாருக்கு!

 

Contents

சென்னை,  செப்.19 பதவிக்கு வருகிறவர்கள், பதவியில் நீடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், கட்சித் தொடங்கியவுடன் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்கிறவர்கள் – ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தாலும், ஒரு மய்யப்புள்ளி அவர்களை ஈர்க்கிறது என்றால், அது தந்தை பெரியார்தான். பெரியார் எல்லாருக்கும் உரியார். யாருக்கு அவர் உரியார் அல்ல என்றால், நரியாருக்கு  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்!

கடந்த 17.9.2025  அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தந்தை பெரியார், இறுதியில் நமக்கெல்லாம் வற்புறுத்தியது என்ன?

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பாக, நம்மு டைய பேராசான் தந்தை பெரியாருடைய பிறந்த நாள் பெருவிழா என்ற இந்த விழாவின் அடிப்படையில், தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டினையும், தந்தை பெரியார், இறுதியில் நமக்கெல்லாம் எதை வற்புறுத்தினார் என்பதையும் நினைவூட்டுகின்ற, உங்களுக்கெல்லாம் விளக்கிச் சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

64 ஆண்டுகளாகத் தொடர்ந்து
பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர்…

நம்முடைய பேராசான், அனைவருடைய அறிவாசானாக  இருக்கக்கூடிய அய்யா அவர்கள் பெயரால், 64 ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அய்யா அவர்கள் வாழ்ந்தபோதும், அவர்கள் உடலால் மறைந்த பிறகு, உணர்வால் நிறைந்த நிலையில், சிறப்பாக பெரியார் பிறந்த நாள் மலர் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அப்படிப்பட்ட மலரின் கருத்தின் மணம் எப்படிப் பட்டது என்பதை, அதனுடைய சிறப்பைப்பற்றி சிறிது நேரம் மலரைப் புரட்டிப் பார்த்ததுமே இங்கே அதுகுறித்து சொன்னார் சுப.வீ. அவர்கள். அதனால்தான் அவர் பேராசிரியர்.

52 ஆண்டுகளுக்கு முன்னால், அய்யா அவர்கள் ஆற்றிய கடைசி உரை தியாகராயர் நகர் பகுதியில்தான். அவருடைய அந்த உரை ‘‘அய்யாவின் இறுதிப் பேருரை’’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

எனக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஓய்வெடுக்கவேண்டும்; வெளியூர்ப்  பயணங்கள்  மேற்கொள்ளக் கூடாது என்று.

மக்களைச் சந்திப்பதுதான்
எனக்கு மாமருந்து!

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் செய்த சிகிச்சைக்கு மருந்து கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு மருந்து ஒரு பாகம் – உங்களுடையது. இரண்டு பாகம் மக்கள்தான். அவர்களைச் சந்திப்பதுதான் எனக்கு மாமருந்து’’ என்றேன்.

அய்யா அவர்களின் இறுதிப் பேருரை, ஒலி நாடாவாக வும் பதிவாகியிருக்கிறது.

தாங்க முடியாத உடல் உபாதைகளோடு அய்யா அவர்கள் தன்னுடைய இறுதி உரையை
நிகழ்த்தினார்.

90 வயதிற்குமேல் அய்யா அவர்களுக்கு இயற்கை வழியிலே சிறுநீர் பிரிவதற்கு வாய்ப்பில்லாமல், வேலூரில் உள்ள மருத்துவமனையில், பிரபல மருத்துவர்கள் அய்யா அவர்களுக்குச் அறுவைச் சிகிச்சை செய்தனர்.

அய்யாவினுடைய உடல் ஒத்துழைக்குமா? என்று  பயந்தனர்

முதலில் எல்லோரும் பயந்தனர். 90 வயதிற்குமேல் ஆகின்றது. மயக்க மருந்து கொடுத்துத்தான், அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். அய்யாவினுடைய உடல் ஒத்துழைக்குமா? என்பதற்காகத்தான் பயந்தனர்.

அய்யாவிடம் இதைச் சொன்னவுடன், ‘‘இந்த வலியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, என்ன ஆனாலும் பரவாயில்லை, அறுவைச் சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளுங்கள்’’ என்று மருத்துவர்களிடம் சொன்னார்.

உடலின் வலது பக்கம் ஒரு ஓட்டையைப் போட்டு, அதனுள் ஒரு குழாயைப் பொருத்தினர். அந்த குழாயின் வழியே சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கும். அந்தக் குழாயை ஒரு பாட்டிலினுள் போட்டிருப்பார்கள். அந்தப் பாட்டிலை ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்துக்கொள்வார்.

எங்களைப் போன்றவர்களுக்கு
கண்கள் கலங்கும்!

இதுபோன்ற நிலை நம்மில் யாருக்காவது இருந்தால் என்ன நினைப்போம்? இதோடு அவ்வளவுதான் என்று நினைத்திருப்போம்.

ஆனால், அய்யா அவர்கள், அப்படியே தனது பிரச்சாரக் கூட்டங்களை மேற்கொண்டார். அவருடைய கூட்டங்களில், அய்யா அவர்களின் உரையைக் குறிப்பெ டுத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு கண்கள் கலங்கும்.

இந்த சமுதாயத்திற்கு நான் திருப்பிச் செய்யவேண்டாமா? இந்த மக்களை நான் உயர்த்தவேண்டாமா?

அய்யா உரையாற்றும்போது சொல்வார், ‘‘உங்க ளுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கு ஆறு கால்கள். இந்தப் பக்கம் ஒருவரின் தோளின்மேலும், அந்தப் பக்கம் ஒருவரின் தோளின் மேலும் நான் கைகளைப் போட்டுக்கொண்டு நடந்து வருகிறேன்.  ஆக மொத்தம் எனக்கு ஆறு கால்கள். ஒரு நாளைக்கு 50 ரூபாய் அளவிற்கு எனக்கு உணவுக்குச் செலவாகிறது. அதை சாப்பிட்டுவிட்டு, சும்மா இருந்தால், அது சமுதாயக் குற்றம் அல்லவா! இந்த சமுதாயத்திற்கு நான் திருப்பிச் செய்யவேண்டாமா? இந்த மக்களை நான் உயர்த்தவேண்டாமா?

உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்பதுதான் என்னுடைய கவலை!

எனக்கு என்ன கவலை என்றால், நான் சாகப் போகின்றவன்தான்; நான் நீண்ட நாள்களுக்கு இருக்கப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.  ஆனால், அதே நேரத்தில், நான் நினைத்ததில், நாம் நிறையவற்றைச் சாதித்துவிட்டோம். வெற்றி பெற்றுவிட்டோம். அதனால் நிம்மதிதான். ஆனால், உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்பதுதான் என்னுடைய கவலை’’ என்றார்.

காரணம், இன்னமும் கோவிலுக்குள் செல்லும்போது, வெளியே நில் என்று சொல்கிறார்கள். கர்ப்பக்கிரகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு கட்டமாக வந்தபோது, தந்தை பெரியார் சொன்னார், பிறவியில் மனிதனுக்குப் பேதம் இருக்கக்கூடாது என்றார்.

நாய், பன்றி, கழுதை போகும் தெருவில், மனிதன் நடக்கக் கூடாதா?

வைக்கத்தில் கோவில் இருக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்தத் தெருவில், நாய், பன்றி, கழுதை போகலாம், ஆனால், மனிதன் நடக்கக்கூடாதா? என்று கேட்டு போராட்டத்தினை சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்குவதற்கு முன்பாக நடத்தினார்.

வைக்கம் போராட்டத்திற்காக இரண்டு முறை சிறை சென்றார். அவருடைய துணைவியார் அம்மா நாகம்மையார், அவருடைய தங்கை கண்ணம்மாள் உள்பட குடும்பமே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் வைக்கத்தில், அந்தத் தெருக்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறந்து விடுகின்ற வரையில், தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை.

தந்தை பெரியாருடைய மானிடப் பற்று அதுதான்.

ஆகவே, ‘‘சூத்திரனாக உங்களை விட்டுவிட்டு சாகி றேனே என்ற கவலைதான் எனக்கு. ஆகவே, அதற்காக நான் போராட்டக் களத்தில் இறங்கி, இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று இருக்கிறேன், நீங்கள் எல்லோரும் தயாராகுங்கள்’’ என்றார்.

பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லாத கட்சிகள், ஒன்று அல்லது இரண்டுதான்!

தொலைக்காட்சியை நீங்கள் எல்லாம் பார்த்தி ருப்பீர்கள். பெரியார் பிறந்த நாளில், வாழ்த்துச் சொல்லாத கட்சிகள், ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கலாம். அந்தக் கட்சிகளால் கொள்கை ரீதியாக வாழ்த்துச் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் வாழ்த்துச் சொல்லாததே நமக்கு மகிழ்ச்சிதான்.

அம்பேத்கரைக்கூட கொஞ்சம் நெருங்கி, அசைத்துப் பார்த்துத் தன்வயப்படுத்தலாம் என்று முயற்சித்தார்கள். ஆனால், பெரியாரிடம் கிட்டே நெருங்க முடியவில்லை.

அந்த அளவிற்கு அய்யாவினுடைய கொள்கைகள் இன்றைக்கு இருக்கிறது.

அனைவரையும் ஒரு மய்யப்புள்ளி ஈர்க்கிறது என்றால், அது தந்தை பெரியார்தான்!

பதவிக்கு வருகிறவர்கள், பதவியில் நீடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், கட்சித் தொடங்கியவுடன் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்கிறவர்கள் – ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தாலும், ஒரு மய்யப்புள்ளி அவர்களை ஈர்க்கிறது என்றால், அது தந்தை பெரியார்தான்.

பெரியார் எல்லாருக்கும் உரியார்.

யாருக்கு அவர் உரியார் அல்ல என்றால், நரியாருக்கு உரியார்.

பெரியார் என்ன செய்தார் என்று

சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!

தமிழ்நாடு பெரியார் மண் என்றெல்லாம் சொல்கி றீர்களே, பெரியார் என்ன செய்தார் என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.

என்னுடைய பாராட்டு, நன்றி!

இங்கே நிறைய தாய்மார்கள் வந்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. பொதுவாக, நம்முடைய கூட்டங்களுக்கு அதிகமான தாய்மார்கள் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும், இந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கமாட்டார்கள்.

ஆகவே, இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களுக்கு என்னுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘திராவிட மாடல்’ ஆட்சி வந்தவுடன், நாளை காலையில் காலைச் சிற்றுண்டியைத் தயார் செய்து, பிள்ளைகளைப் பள்ளிக் கூடம் அனுப்பவேண்டுமே என்கின்ற கவலையில்லாமல், நிம்மதியாக இருக்கிறார்கள். அந்த வேலையை நம்முடைய முதலமைச்சர் எடுத்துக்கொண்டு, பள்ளிப் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைத் கொண்டுவந்திருக்கின்றார்.

இதைத்தான் பெரியார் செய்தார்!

பெரியாருடைய சாதனை!

அதைவிட, பெரியார் என்ன செய்தார்? என்று கேட்கி றார்கள் பாருங்கள், அதுதான் பெரியாருடைய சாதனை.

கேள்வி கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

அதுவரையில், இவர்கள் எல்லாம் மண்ணாகத்தான் இருந்தார்கள்.

பெரியார் சொன்னதால்தான், கேள்வி கேட்கின்ற மனப்பான்மையே அவர்களுக்கு வந்திருக்கிறது.

ஒரே ஒரு செய்தி, மற்றவர்கள் கேட்ட கேள்வி களுக்கெல்லாம், பெரியார் பதில் சொல்லிவிட்டார்.

கூட்டங்களில் பெரியார் உரையாற்றும்போது, கூட்டத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கான பதிலை பெரியார் சொல்வார்.

‘கேள்வி கேள்’ என்று நமக்குக் கற்றுக் கொடுத்தவரே தந்தை பெரியார்தான்!

அதுபோல ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, கூட்டத்திலிருந்த ஓர் அய்யர், ஒரு பேப்பரில் கேள்விகளை எழுதி, எழுதிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதற்கு ரிய பதில்களை பெரியார் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அந்த அய்யர் எழுதிய, பென்சிலின் முனை முறிந்துவிட்டது. அதைப் பார்த்த அய்யா அவர்கள், தன்னுடைய பேனாவை அவரிடம் அளிக்கச் சொல்லி, இதில் எழுதி கேள்வி கேளுங்கள் என்றார். ‘கேள்வி கேள்’ என்று நமக்குக் கற்றுக் கொடுத்தவரே தந்தை பெரியார்தான்.

ஒருவன் கேள்வி கேட்டால், அவன் சிந்திக்கின் றான் என்று அர்த்தம்.

பிறவி பேதம் ஒழியவேண்டும் என்று சொன்னவர் பெரியார்!

சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், வெறும் ஜாதி ஒழிப்பை மட்டும் சொல்லவில்லை. பிறவி பேதம் ஒழியவேண்டும் என்று சொன்னார்.

பிறவி பேதம் என்றால், ஒரு பக்கம் ஜாதி; இன்னொரு பக்கம் ஆண் உயர்ந்தவர்; பெண் அடிமை என்பதுதான்.

பெண் அடிமை என்பதை மாற்றவேண்டும் என்ப தற்காக ஏறத்தாழ 97 ஆண்டுகளுக்கு முன்பாக செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார்.

பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்குச் சம வாய்ப்பு வேண்டும். பதவியில், உத்தியோகத்தில் 50 விழுக்காடு கொடுக்கவேண்டும் என்றார்.

‘திராவிட மாடல்’  ஆட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு!

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ‘திராவிட மாடல்’ ஆட்சியில், நகராட்சி உள்பட பல இடங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பெரியார் வழியில் நாங்கள் செல்கிறோம் என்பதுதான்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *