காசாவில் அப்பட்டமான இனப்படுகொலை – அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய அறிக்கை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை
காசாவில் அப்பட்டமான இனப்படுகொலையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது கண்டன அறிக்கை வருமாறு:
‘காசாவில் இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல; மனித இனப்படுகொலை’
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவில் காசா மீது இஸ்ரேல் அரசு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. போரில் ஏற்பட்டு வரும் மனித உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்து செய்திகள் வெளிவராத ஊடகங்களே இல்லை எனக் கூறும் நிலையில், இஸ்ரேலின் அடாத என்ற முழக்கத்துடனான தொடர் நடவடிக்கைகளை கண்டித்துப் பேசிவரும் நாடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. மானுடம் போற்றப்பட வேண்டும்; பேணிக் காக்கப்படவேண்டும் என்ற செய்தியை வெளியிடாத நாடுகளே இல்லை. ஆனால் காசாவில் இஸ்ரேல் தொடுத்து வரும் போர் நின்றபாடில்லை. அமைதியை விரும்பும் பல்வேறு நாடுகளின் அழுத்தம் நிறைந்த வற்புறுத்தலால் அய்க்கிய நாடுகளின் சபை – மனித உரிமை ஆணையம் – காசாவில் நடைபெறும் போர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘காசாவில் இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல; மனித இனப்படுகொலை’ என உண்மையினை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டு உலகப்போர்களின் விளைவால் மானுடம் முன்னேற்றம் காணுவதில் நீண்டதொரு தேக்கம் ஏற்பட்டது. நாஜி கருத்தினை நடைமுறைப்படுத்திய ஹிட்லரின் யூதப் படுகொலை உலகக் கண்டனத்திற்கு ஆளானது. ஹிட்லரின் கொடுங்கோன்மை குழி தோண்டி புதைக்கப்பட்டது. பழிவாங்கப்பட்ட யூத இனம், தங்களுக்கென நாடு தேடி அலைந்ததால் அமையப்பெற்றது இஸ்ரேல் நாடு. முன்னர் தங்களது மூதாதைகள் அல்லல்பட்டதைப் பாலஸ்தீனத்தில் அரங்கேற்றம் செய்யும் நடவடிக்கைதான் இன்று காசாவில் இஸ்ரேல் தொடுத்துவரும் போர் என்கிறார்கள்.
‘இனப்படுகொலை’ என அய்.நா.
மனித உரிமை ஆணையம் கூறுகிறது
மனித உரிமை ஆணையம் கூறுகிறது
இரண்டு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவையே! ஆனால் காசாவில் நடந்து வருவது ‘இனப்படுகொலை’ என அய்.நா. மனித உரிமை ஆணையம் கூறுகிறது. கடந்த காலங்களில் இனப்படுகொலை செய்து முடித்த நாடுகள் இன்றைக்கு நிலை குலைந்த அரசியலால் தள்ளாடி வருகின்றன. இனப்படுகொலை ஏற்படுவது மனித உயிர் இழப்பு மட்டுமல்ல; மானுடம் மடிவதன் தொடக்க நிலையும்கூட. போர் நடவடிக்கையால் தாக்குதலுக்கு ஆளாகி காசாவில் செத்து மடிவோர் ஏராளம். வெளிநாட்டிலிருந்து காசாவிற்கு வரவேண்டிய உணவுப் பொருட்கள் தடைப்படுத்தப்படுகின்றன. உணவுத் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, தேவையான மருந்துப் பொருள்கள் இல்லாதது காரணமாக குழந்தைகளும், முதியோர்களும் இறந்து வருகிறார்கள். போரில் ஈடுபடாத மக்களைக் கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் செயலானது, உலகில் அரசியல் சார்ந்த அணிகளைத் தாண்டி கண்டனம் பெற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவிடும் நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசும், இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்காவிற்கு அழுத்தம் தர வேண்டும். இஸ்ரேல் நாட்டுடனான அயல்நாட்டுத் தொடர்பினை ஒவ்வொரு நாடும் துண்டித்துக் கொள்ள வேண்டும். அய்.நா. ஆணையத்தில் கடந்த காலத்தில் வெளிவந்த ‘இனப்படுகொலை’ மற்றும் பன்னாட்டுப் போர் நெறிமுறைகளுக்குப் புறம்பான ராணுவ நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது போல ‘காசா இனப்படுகொலை’ அறிக்கை ஆகிவிடக் கூடாது.
சென்னையில்,
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் கண்டனப் பேரணி!
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் கண்டனப் பேரணி!
உலகநாடுகளின் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனக்குரலும், போரை நிறுத்திட வலியுறுத்திடும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உச்சத்தைத் தொடவேண்டும். காசாவில் அமைதி திரும்பவேண்டும். விலைமதிக்க இயலாத மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இன்று (19.09.2025) சென்னையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திடும் ‘இஸ்ரேலே! காசா போரை நிறுத்திடு’ கண்டனப் பேரணி உரிய விளைவு ஏற்படுத்தட்டும்!
சென்னை தலைவர்,
19.9.2025 திராவிடர் கழகம்