சென்னை,மே27- சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்தாண்டு செப்.12-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்.19 அன்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி தற்போது எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.