தந்தை பெரியார் இந்தப் புவியில்
தன்மானப் பாதை கொண்டே – பல
விந்தைகள் செய்தே வெற்றிச் சிகரம்
எட்டிப் பிடித்தார் அதனைப் பாடுகுயிலே!
‘எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்’ எனும்ஓர்
எழுச்சி பிறந்ததே! மாற்றார் உழைப்பைப்
பொல்லார் சுரண்டல் ஒழித்துப் புரட்சி
வகுத்தா ரதைப் பாடு குயிலே!
மூடத்தனங்கள் முழுப்பொய் இனங்கள்
முற்றிலும் ஒதுக்கி இன்று, தமிழர்
கேடகன் றின்பம் கிளர்ந்து நின்றே
கேள்வியர் ஆனார் பாடு குயிலே!
நாடும் மொழியும் நலிந்திடத் தீய
நடப்புகள் புரிந்தாரை வென்று – உலகு
தேடும் தொல்புகழ் நிலைக்க வைத்தார்
நேரிய திறத்தால், பாடு குயிலே!
யாரும் சரிநிகர் யாவர்க்கும் எல்லாம்
யாவரும் வாழ்வோம் ரென்று – அவர்
போரே இல்லாப் பொன்னுல கத்தைப்
புதிதாய்க் கண்டதும் பாடு குயிலே!
கள்ளத் தனங்களை காலடி போட்டே
கசக்கிப் பிழிந்தா ரென்று – பொல்லாக்
குள்ள நரிகளின் சூழ்ச்சி வலைகளைக்
குத்திக் கிழித்தா ரென்று பாடு குயிலே!
வெற்றுப் பழமைகள் வீசி எறிந்தே
வெற்றிகள் கோடி கண்டு – அவர்
பற்பல கொள்கைகள் படைத்தளித் தார்தம்
பகுத்தறி வால்என்று பாடு குயிலே!