அண்ட பிண்ட சராசரம் அத்தனையும் உற்பத்தி செய்த அக்கடவுள் இருக்குமிடம் எங்கென்று பார்த்தால், அவர் முப்பாழுக்கும் அப்பாலாய் இருப்பவர் என்று கூறப்படுகிறது. “அப்பால்தான் என்னப்பா இருக்கிறது?” என்று கேட்டால், “அதுவும் பாழடா” என்று தான் என்று கூறப்படுகிறது. வெறும் சூனிய வெளிதான் கடவுள் அதாவது “முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்” இருக்கும் கூறப்படுகிறது. பாழான இந்தச் சூனிய வெளி ஏன் இப்படி நம்மைப் பாழாக்க வேண்டுமென்பதுதான் நமக்குப் புரியவில்லை!
நாசமாய் போகும் நம்பிக்கைக்கும்
ஒரு எல்லை இல்லையா?
இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை என்றால் 33 கோடி தேவர்கள் 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் என்று இன்னும் எத்தனை எத்தனை தெய்வங்களோ கூறப்படுகின்றன. இந்தத் தெய்வங்களுக்கே ஒரு தேசம் போதாது போல் இருக்கிறது.
இப்படியிருந்தும் இவர்கள் தொழும் தெய்வங்களின் உருவ லட்சணங்களைப் பாருங்கள். “பல்லோ ஒரு காதம், பல்லிடுக்கோ முக்காதம்” ஒரு பல்லின் அகலம் 10 மைல். ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையே யுள்ள வெளி 30 மைல். அப்படியானால் அவனுடைய வாயின் அகலம் மட்டும் 610 மைல். அதாவது 16 பல் இடம் 160 மைல் 15 இடைவெளியின் இடம் 450 மைல் ஆக 610 மைல் ஆகியது. அவன் வாய் மட்டும் இவ்வளவு அகலமானால் அவனுடைய கை எவ்வளவு? அவனுடைய கால் எவ்வளவு நீளம்? அவனுடைய உடல் எவ்வளவு பருமன் என்று சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய வாயில் மட்டும் எத்தனை நகரங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வளவும் எழுதியிருந்தால்கூட நமக்குக் கவலை இருக்காது. ஏதோ கதையென்று தள்ளி விடலாம். ஆனால். அதை நம்பித்தான் ஆகவேண்டும். அதை நம்பாவிட்டால் நரகம் என்றல்லவோ கூறிவிடுகிறார்கள் இந்த ஆஸ்திக கோடிகள். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்றால், கேட்டால் – இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும்?
சரி. இதுதான் போகட்டும் என்று தள்ளி விட்டு மலை எப்படியப்பா உண்டாயிற் றென்றால், மலையெல்லாம் ஒரு காலத்தில் இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தனவாம். அவை தேவேந்திரனை ரொம்பவும் துன்புறுத்தவே, அவன் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்ள அவர் அந்த இறக்கைகளை அறுத்துவிட்டாராம். இறக்கை அறுந்துபடவே அவை பூமியின் மீது விழுந்து மலைகளாயிருக்கின்றனவாம்.
சரி சமுத்திரம் எப்படியப்பா ஏற்பட்ட தென்றால், அவை எல்லாம் தோண்டப் பட்டனவாம். இவ்வளவு பெரிய சமுத் திரத்தைத் தோண்டியவர்கள் யாரோ, அவர்கள் எங்குதான் அந்த மண்ணை எல்லாம் போட்டார்களோ தெரியவில்லை. இப்படியெல்லாம் அண்டப் புளுகு, ஆகாயப் புளுகெல்லாம் எழுதிவைத்துவிட்டு, இப்படி சாஸ்திரம் கூறுகிறது; இதை நம்பித்தான் ஆக வேண்டுமென்று கூறினால், “நீ நாசமாகப் போக! இப்படிப்பட்ட சாஸ்திரங்களைக் கொளுத்தித் தொலை” என்றுதானே கூறத்தோன்றும். இப் படிக் கூறுவதா மதத்துவேஷம்? பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக் கொள்வானா இதை?
நான் ஓர் ஊரில் கடைத்தெருப்பக்கம் போயிருந்த போது கணபதி விலாஸ் சைக்கிள் ஷாப் என்ற போர்டைப் பார்த்தேன். அதன் கீழ் ‘வேகமாகப் போகும் புது சைக்கிள் இங்கு வாடகைக்குத் தரப்படும்’ என்று எழுதியிருந்தது. பேர் வைப்பதில் கொஞ்சமாவது அறிவை உபயோகப்படுத்த வேண்டாமா இவர்? கணபதி விலாஸ் சைக்கிள் என்றால் அது எதற்கு? நகரவா? டயர் தேயவா? டியூப் வெடிக்கவா? அல்லது பார் நொறுங்கவா? கணபதி விலாஸ் சைக்கிள் எங்காவது வேகமாய்ப் போகுமா? உன் சைக்கிள் வேகமாகப் போகும் என்றால், அதற்குப் பறக்கும் சைக்கிள் வண்டி என்று பேர் கொடேன்! கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா பெயருக்கு? இந்த 1947 இலா இப்படி ஒரு பெயர் வைப்பது?
எருமை மாட்டு வாகனக் கவர்ன்மெண்டுக்கு
எப்படித் தம்பி பிடிக்கும்?
புராணத்தில் கூறப்படும் உலகங்கள் எத்தனை தெரியுமா? ஈரேழு பதினாலு லோகங்கள். அதாவது மேலேழு, கீழேழு; அவற்றின் பெயர்களே அதல, விதல, சுதல, தராதல்.. பாதாள, கேதாள என்று போகும். எல்லாம் தலதளா தான். இந்த 14 லோகங்களிலுமுள்ள ஈ. எறும்பு, பொட்டு, புழு ஆகிய சகல ஜீவராசிகளுக்கும் எஜமானன் எமன் ஒருவன்தான். ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவனும் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால். தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம். பாசக்கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இதையெல்லாம் கேட்பது மதத்திற்கு விரோதமென்றால், அப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மதத்தைத் தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன். வீணாக எங்கள் மீது சுமத்தி ஏன் எங்கள் உயிரையும் வாங்குகிறாய் என்றுதான் கேட்கிறோம்.