பெரியாரது மனம், இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத் துறையிலீடுபட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10,000க்கும் அதிகப்பட்ட மக்கட்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழியை யான் கேட்டேன். சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்ததானது, இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும்.நல்ல காலத்திலேயே இவர் இங்குச் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். செல்வாக்குடையவர்கள் இவரைப் பின்பற்று கின்றனரென்பதை, யான் பார்க்கின்றேன்.
இந்நாட்டிலே களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற்றமடையச் சமயமும், வசதியுமளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாக விருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். முன்னரே அவ்வியக்கம் பரவி, இம்மாகாணத்தின் பல பாகங்களில் வேரூன்றி விட்டது. இப்போதிருக்கும் பொதுஜன இயக்கமெதையும்விட, இவ்வியக்கம் நன்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மக்களைப் பிளவுபடுத்தும் தடைகளையொழித்துச் சித்தி பெறுமென்பதும், மக்களை அய்க்கியப்படுத்துமென்பதும் திண்ணம்.
இயக்கத்தைச் சித்தியான முடிவுக்குக் கொணரப் பணியாற்றவும், ஒற்றுமைப்பட்ட இந்திய மக்களின் உன்னத நிலையைக் கண்டு களிக்கவும், திரு. இராமசாமியார் நீண்ட காலம் உடல் நலத்துடனும், வன்மையுடனும் வாழ்வாராக!
முன்னாள் உயர்மன்ற நீதிபதி
மலையாளம் எம்.கோவிந்தன்,
பி.ஏ.,பி.எல்., (1929)