பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள்
சென்னை, செப். 17- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2025) தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (17.9.2025) உலக முழுவதும் பகுத்தறிவாளர்களால் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சமூக சேவைகள், உடற்கொடை, குறுதிக்கொடையுடன் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை பெரியார் திடலில் இன்று காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்கப்பட்டது.
தந்தை பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி நாளாக” கடைப்பிடிக்கப்படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று சமூக நீதி நாள் உறுதி மொழியை ஏற்க வேண்டும் என சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6.9.2021 அன்று சட்டப் பேரவையில் அறிவித்ததற்கிணங்க, ‘சமூக நீதி நாள்’ உறுதி மொழி பின்வருமாறு ஏற்கப்பட்டது.
சமூக நீதி நாள் உறுதிமொழி
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத்திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று கழகத் தலைவர் கூற அங்கு திரண்டிருந்த தோழர்கள் அதனைப் பின்பற்றிச் சொல்லி உறுதிமொழியை ஏற்றனர்.
கழக அமைப்புகள் சார்பில் மரியாதை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கும் – நினைவிடத்திலும் திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட தொழிலாளரணி, தமிழக மூதறிஞர் குழு, பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), திராவிடன் நிதி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் மு.ரா.மாணிக்கம், வை.கலையரசன், முபவானி, அயன்புரம் துரைராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், சட்டத்துறை தலைவர் த.வீரசேகரன், பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மற்றும் வழக்குரைஞர் ஆம்பூர் துரை,
திருமதி மோகனா வீரமணி, சி.வெற்றிச்செல்வி, ச.இன்பக்கனி, பெரியார்செல்வி, டாக்டர் மீனாம்பாள், பெரியார் களம் இறைவி, பசும்பொன், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆஸ்திரேலியா அண்ணா.மகிழ்நன்,
மூதறிஞர் குழு நிர்வாகிகள், ஓய்வு பெற்ற நீதிபதி இரா.பரஞ்சோதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், முனைவர் தேவதாஸ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், முனைவர் அதிரடி அன்பழகன், எமரால்டு ஒளிவண்ணன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, மாணவர் நகலகம் சவுரிராஜன், நெய்வேலி ஞானசேகரன், எழுத்தாளர் முத்து வாவாசி, முனைவர் ஜெயகுமார், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், ஆடிட்டர் இராமச்சந்திரன், சி.காமராஜ், சி.சித்தார்த்தன்,
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு ஆகியோர் உள்பட மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளாகத் தோழர்கள் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், டாக்டர் இரவீந்திரநாத், தென்சென்னை மாவட்டத் தலைவர் சம்பத், எஸ்.கே.சிவா, மற்றும் அம்பேத்கர் இயக்கதைச் சேர்ந்த திண்டிவனம் சிறீராமுலு ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்து தலைமையில் அதன் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அருந்ததி கட்சி
அருந்ததி கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பி.புருசோத்தமன், பொதுச் செயலாளர் பீ.தேவேந்திர ராவ், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.