ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத் தெரிந்து கொண்ட பிறகே அவர் தூங்கக் கிளம்புவார். பெரியாரிடம் நான் கற்றுக் கொண்டது எவ்வளவோ! அவற்றில் பின்பற்றுவதும் எவ்வளவோ! அதிலே ஒன்றுதான் தந்தை பெரியார் எவ்வாறு இரவில் எங்களையெல்லாம் அழைத்து அன்றாட அரசியல் நிலைகளைப் பற்றி கலந்துரையாடுவாரோ, அதுபோலவே தான் நானும் இன்றளவும், இரவு நேரங்களில் கழக முன்னணியினரோடு வீட்டிலோ, அறிவாலயத்திலோ உரையாடுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த இரவு நேர கலந்துரையாடல்கள் எந்த அளவிற்கு அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கவும், ஆக்க ரீதியான பணிகளை ஆற்றிடவும் உதவியிருக்கின்றன என்பதை தமிழகம் நன்கறியும்.
– முத்தமிழறிஞர் கலைஞர்
நூல்: பெரியார் களஞ்சியம்
‘குடிஅரசு’ அணிந்துரை