தந்தை பெரியாரின் மனிதநேயச் சிந்தனைகளில் பெண்ணியம்!

11 Min Read

திராவிடர் கழகம்

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச் செயலாளர்,  திராவிடர் கழகம்

 

தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு அவர் ஒரு விருப்பு-வெறுப்பற்ற ‘பவுதிகத் தராசு’ என்பதை எடுத்துச் சொல்கிறது.

இத்தனைப் பேரின்
மொத்தச் சரக்கும் அவரே!

வழக்காடும் வன்மையில் தமிழ்நாட்டு வால்டேர்,

முழக்குச் சிந்தனையில் முதியவர் சாக்ரட்டீஸ்

போதனைத் துறையில் புரட்சிசேர் புத்தன்

பொருளியல் நீதி வகுப்பதில் புலமைசேர் மார்க்ஸ்

கருத்து வண்ணத்தில் உருக்கு கன்பூசியஸ்

மறுத்துரை கூறலில் மதிப்புறு இங்கர்சால்

பழைமையைச் சாடலில் அறிஞர் பெர்னாட்ஷா

புதுமைகள் சேர்த்தலில் புயலெனும் ரூசோ

இத்தனைப் பேரின் மொத்தச் சரக்கவர்.

வைதீகர்க்கெல்லாம் ஒற்றைத் தலைவலி மெய்யறி வாளர்க்கோ மிதந்த பூங்காற்று விருப்பு வெறுப்பற்ற பவுதிகத் தராசு.

மானுட சமத்துவம் என்ற விருப்பே தந்தை பெரியாரை சாதனைத் தலைவராய் செதுக்கியது. காலத்தின் நெருக்கடி பிரசவித்த பெம்மான் பெரியார் மட்டும் பிறவாது போயிருந்தால் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றம் கானல் நீரே. பல்வேறு நூற்றாண்டுகளை-அந்த நூற்றாண்டுகளில் தோன்றிய சிந்தனையாளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கியவர் பெரியார் என்பது பேரறிஞர் அண்ணாவின் கணிப்பு. ‘‘பெரியார் தனிமனிதரல்லர்- அவர் ஒரு வரலாறு.ஒரு காலகட்டம் திருப்பம்’’ என்றும் புகழ்ந்தார் அண்ணா.

உலக அனுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்என்று பெரியாரை போற்றினார் கல்கி. `பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைப் பெற்றனர்

பாராட்டை எதிர்பார்க்காத ஈரோட்டுப் பாதையின் ஏந்தலான தன்மானத் தந்தை பெரியார். அனைத்துவித ஒடுக்குமுறைகளிலிருந்தும் மக்களை மீட்டெடுக்கும் பெரும் போரில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தின் வெற்றி பெருமிதமான வாழ்க்கையை நம் மக்களுக்குத் தந்தது. அறிவில் திருவுண்டானது; ஆற்றலில் புதுவேகம் பிறந்தது; அடிமைத் தளை அகன்றது; எட்டா நிலையிலிருந்த வேலை வாய்ப்புப் பெற்றனர் மக்கள். காரணம் கிட்டா கனியாயிருந்த கல்வி கிடைத்ததால்! சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந் நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே! ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்க கதவுகள்! பெரியாரின் எண்ணம் ஈடேறியது-ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையால்!

ஒடுக்குமுறைகளிலேயே கீழான-மோசமான ஒடுக்குமுறை பெண்கள் மீதான ஒடுக்குமுறையே! ஜாதீய ஒடுக்குமுறைமைக்கும் கொடுமையானது பெண்ணிய ஒடுக்குமுறை. அதனால் தான் நாட்டின் விடுதலை என்பது கூட பெண் விடுதலைக்குப் பிறகே என்பதற்கொப்ப புரட்சிக்கவிஞர் ‘‘பெண்ணடிமை தீருமட்டும்-பேசுந் திரு நாட்டு மண்ணடிமை தீருவது முயற் கொம்பே’’ என்றார்.

‘‘பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக, நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும், கொடுமையாகவும் நடத்துகிறார்கள்’’ என்று ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண்ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.

‘‘சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா?’’ என்றார் பெரியார்.

‘‘பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத்தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங்களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்’’ என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தியவர் பெரியார்.

ஆண்மை-தாய்மை

‘‘பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே மூலகாரணமாக இருக்கின்றது…. பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்….

`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும்’’ என்றதோடு,

‘‘ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது’’ என்றும் பிள்ளைப் பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாகப் பகன்றவர் பெரியார்.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்ற பெரியார் ‘‘பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும்’’ என்றார். ‘‘உலகப் பெண் கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழு வாழ்க்கை வாழுகின் றவர்களாகவும் மாறவேண்டும்’’

‘‘பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும்.’’ என்றதுடன்,இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். என்றார்.

அதிசயம் அவர்!

ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான, காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரி யாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக் கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரே.

தொலைநோக்கு

புத்துலக தீர்க்கதரிசி அவர். பெண்களுக்கான புதுயுகம் காணப் போராடியவர். அதனால் பெண்ணடிமைச் சாடலில் அவரிடம் சுட்டெரிக்கும் சொற்களை காண்கிறோம். தார்மீக கோபம் நிரம்பி வழிந்தது அவரின் வார்த்தைகளில்.

பெண் விடுதலைக்கான தொலைநோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.

எவரும் கற்பனை செய்துகூட பார்க்காத காலத்திலேயே ஆண்-பெண் சேர்க்கையின்றி பிள்ளை பெறும் காலம் வரும் என்று சோதனைக் குழாய் குழந்தை சிந்தனையை வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அவரின் அன்றைய முன்னறிவிப்பு இன்று நிரூபணமாகி உள்ளதை-வெற்றி பெற்றுள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதிகளும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும், ஆரவார சுகபோகிகளும் பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப்படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண்களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

ஜாதிபேத சமுதாய அமைப்பு கெட்டிப் படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தில் ஆண்கள் எஜமானர்கள். பெண்களோ எல்லாவிதமான ஆதிக்கச் சமூக அமைப்புக்கும், அடிபணிந்து போன ஆண் அடிமைகளுக்கும் அடிமையாகித் தவித்தார்கள். ஆண்களின் ஆழ்மனதில் பெண்கள் தீனியாகவே திணிக்கப்பட்டார்கள் நமது சமுதாய அமைப்பில்!

மொழிகளையும், நாடுகளையும் கடந்து விரிந்து நின்ற பெண்ணடிமைத் தனம் மானுட உலகின் அவமானச் சின்னமன்றோ! ஆணாதிக்கத்தால் வாழ்வின் இனிமைகள் எல்லாம் மன உணர்ச்சிகள் எல்லாம் மறுக் கப்பட்ட கொடுமை-கொடுமையிலும் கொடு மையன்றோ!

‘‘உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்துவம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம்’’ என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே! பெண்களுக்கான விடுதலைத் தீர்வாய்-தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில்-பெண்ணுரிமை கோரலில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு மாத்திரமல்ல; அவருக்குப் பின்பு கூட இதுவரையில் யாரும் தோன்றவில்லை… எதிர்காலத்திலும்… கேள்விக்குறியே! பெண்ணுரிமைக்கான தளத்தில் உலகின் தன்னிகரில்லா சுயசிந்தனையாளராக உயர்ந்து நிற்பவர் பெரியார் மட்டுமே!

வேறுபாடு ஏன்?

அங்க அமைப்பின்றி அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை, என்ற பெரியார் ஆணுக்குத் தனிச் சொத்து என்ற முறை ஏற்பட்ட காலத்தில்தான் அவனது மனைவி அச்சொத்துக்கும் பாதுகாப்பாக மட்டுமல்லாது, அவனது தனிச்சொத்தாகவும் அமைந்து போனதை உறுதிசெய்து கொண்டார்.

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.

நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சிதான் என்றார். புருஷன்-மனைவி சம்பந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! என்றார்.

‘ஓர் அரசனுடைய மகளாயினும் ஒரு பெண் ஒரு வேலைக்காரனுக்கு வாழ்க்கைப்பட நேரிட்டால் அவனுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டியதுதான். தந்தை ஒரு நாட்டுக்கு அரசனாயிருக்கிறான் என்ற அளவுக்குத்தான் பெருமை அடையலாமே யன்றி, மனைவி என்ற முறையில் மற்ற பெண்களைப் போலவே அவளும் தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் தான்’’ என்றார் பெரியார்.

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந் திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண்ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண்ணுரிமை என்றும் கூறினார்.

கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். ‘‘கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலை மீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண் மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது’’ என்றார்.

புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத் தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடைபகர்ந்தார் எவரும் இல்லை.

‘‘விதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல’’ என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக் கையையும் எடுத்துக்கூறி விதவை மறு மணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச் சாரம் என்பதற்குப் பொருள் என்னவென் றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக் கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.

இளமை மணம்

`பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டதை பெரியார் எதிர்த்தார். ‘‘பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல்யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?’’ என்றார்.

‘‘பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள் ளவும் முடியும்.’’ என்றதுடன், ‘‘இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத் தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்து தான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.

சொத்துரிமை

பெண்விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், ‘‘பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்கு சுயமாகச் சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம்’’ என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலை களிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக் கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்திரவிடுவேன் என்றார்.

பெண் கல்வி

`வெறும் ஆண்களை மாத்திரம் படிக்கவைத்துவிட்டு, பெண்களை படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.

‘‘பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என் பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத் துரிமை இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும்’’ என்றார் பெரியார்.

பொதுவாக மக்களின் அடிமைத்தனம் அகல-அடிமைத்தொழில் அகல பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பது அய்யாவின் கருத்து. ‘‘பெண்களை அடிமை களாக ஆக்கியதன் பயனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திலும் அடிமைகளானார்கள். எனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டு மானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!! முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண் டும்!!!- இப்படி பெண்ணடிமை ஒழிவதே அனைத்து அடிமைத்தனங்களும் அகல வாய்ப்பாகும்’’ என்று பெரியார் கருதிய காரணத்தால்தான் பெண்ணுரிமைக்காகப் பாடுபடலானார்- போராடலானார்- பரப்புரை யில் ஈடுபடலானார். அம்முயற்சியில் பெரியார் பெரு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மகளிர் சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி அனைத்துக்கும் காரணம்-அடிப்படை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனையே!

தமிழ்நாட்டில், இந்திய துணைக் கண்டத்தில், ஏன்? உலக அளவில் `பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது தந்தை பெரி யாரின் அரிய தொண்டினால் தான். பெண் விடுதலைக்காகப் பெரியார் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட புதுயுகம் இது. பெண்களின் ஆளுமையும், ஆற்றலும் வெளிப் படுத்தப்பட்டது அவராலே.

‘‘உங்களுக்குப் பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதர்களுக்குத் தொண்டு புரிவதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள்’’ என்ற பெரியார்,

‘‘மனித வாழ்க்கை என்பது தொண்டு செய்வதுதான். தொண்டு செய்யாத வாழ்க்கை மிருக வாழ்க்கைக்குச் சமம்’’ என்றும் மனிதத் தொண்டுக்கு மகிமை ஏற்படுத்தியவரும் பெரியாரே!

அனைத்து தடைகளுக்கும் விடுதலை அவரே!

ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை…

கல்வி-வேலைவாய்ப்பு எனும் வாழ் வுரிமைக்கான வாய்ப்பு…

மொழி உரிமை….

இன மேம்பாடு-விடுதலை…

வழிபாட்டுரிமை….

அனைத்துவிதமான ஒடுக்குமுறையிலி ருந்தும்

விடுதலை….

இப்படி பல்வேறு தடங்களில் முத்திரை பதித்த பெரியாரின் தொண்டு `பெண் விடுதலை’ எனும் தடத்திலும் புதுப்பாதை சமைத்தது! பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் `பெரியார்’ எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் தந்தைக்கு! பெரியார் போற்றிய பெண்ணுரிமை காப்போம்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *