இன்று தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பெரியார் பன்னாட்டு அமைப்பு உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
வருகிற நவம்பர் முதல் வாரத்தில்கூட ஆஸ்திரேலியாவின் மெல்போனில் மாநாடு நடைபெற உள்ளது.
பன்னாட்டுப் பகுத்தறிவாளர்களும், அறிவியல் அறிஞர்களும், பேராசிரியர்களும் பல்துறைப் பெருமக்களும் அந்த இரு நாள் மாநாட்டில் தந்தை பெரியாரின் தத்துவம் குறித்து உரை நிகழ்த்த இருக்கிறார்கள்; கட்டுரைகளை அளிக்க இருக்கிறார்கள்.
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்து, அவர்தம் பன்முகச் சிந்தனைகளைச் சிற்பியாக வடித்து, இது எனக்குக் கிடைத்த பெரும் பேறு என்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பூரிப்பு அடைந்திருக்கிறார். உற்சாகம் பெற்றுள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று, சமூகநீதி நாளாக, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
அரசியலில் நுழைந்து பதவி நாற்காலியில் அமர விரும்பாத ஒரு தலைவருக்கு, சமூகப் புரட்சியாளருக்கு இப்படி அரசு ரீதியாக மதிப்பளித்துச் சிறப்பு செய்வது என்றால் சாதாரணமானதல்ல.
இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று அறிஞர் அண்ணா சொன்னார் என்றால் பெரியார் தான் தி.மு.க. அரசு, திமுக அரசுதான் பெரியார் அரசு என்று சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
தந்தை பெரியார்தம் படைப்புகளை 21 மொழிகளில் அதிகாரப் பூர்வமாக உலகின் பன்மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டாடிய பெருமை – இன்றைய திராவிட மாடல் அரசின் ஆக்கப் பூர்வமான செயல்பாடாகும்.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியார்பற்றி தொலைநோக்கோடு வரைந்ததை இன்று நேரடியாகக் கண்டு கொண்டு இருக்கிறோம்.
தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஓடிய பிறகும், அவர் அன்றாடம் பேசு பொருளாக இருக்கிறார் என்றால், அதன் காரணம் அவரின் ஆழ்ந்த சிந்தனை என்பது உலக மக்களின் வாழ்வியல் தத்துவமாக மலர்ந்த மணம் வீசுவதால்தான்.
தந்தை பெரியார் அரசியல் – தேர்தலில் ஈடுபடாதவராக இருக்கலாம்; ஒரு நாட்டின் அரசியலும் ஆட்சியும் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதைப் பாதை வகுத்து வழி நடத்தும் இடத்தில் இருந்திருக்கிறார். இன்றுகூட ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் – ‘அன்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி எங்களை வழி நடத்துவது பெரியார் திடல்தான்’ என்று சொல்லுவது எதைக் காட்டுகிறது.
எந்த காங்கிரசை விட்டு சமூகநீதிக்காக தந்தை பெரியார் வெளியேறினாரோ, அந்தக் காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சமூக நீதியைப் பற்றி உரக்கப் பேசுகிறார்; செய்தியாளர்கள் சந்திப்பில்கூட, ‘உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. என்று வினாவைத் தொடுக்கிறார் ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூவர் மட்டுமே ஒபிசி என்ற விவரத்தை வெளியிடுகிறார்.
சென்னையில் ஒரு மாநாட்டில் உரையாற்றிய பிரியங்கா காந்தி தந்தை பெரியாரின் ‘பெரியார் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலைப் படித்திருக்கிறார்களா?’ என்று கேட்கிறார்.
இன்னும் சொல்லப் போனால் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகை யறாக்களைத் தவிர தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்பவர்கள், வாரி அணைத்துக் கொள்பவர்கள் என்பதுதான் நிதர்சனமான நிலைப்பாடு.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்தனைப் பேரும் ‘தந்தை பெரியார் வாழ்க’ என்று முழக்கமிட்டது. இன்னும் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன்றைக்கு ஜனநாயகத்துக்கு விரோதமான பாசிசப் பார்ப்பனீய – பா.ஜ.க. – (ஆர்.எஸ்.எஸ். போட்ட குட்டி) சக்திகளிடம் ஒன்றிய அரசும், பல மாநிலங்களின் அரசுகளும் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மை, சோசலிசம், சமூகநீதி என்ற அடிப்படை நோக்கத்தின் ஆணி வேரையை வெட்டி வீழ்த்தும் விபரீதமான போக்கு நாட்டில் தலைவிரி கோலமாகக் காட்சி அளிக்கிறது. ‘ஹிந்து ராஷ்டிரம் என்பவர்கள் அதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றால், அதற்கு எதிரான மாற்றுத் தத்துவத்தின் – சித்தாந்தத்தின் சின்னமாக தந்தை பெரியார் ஒளி வீசிக் கொண்டுள்ளார்.
‘நீட்’ எதிர்ப்பானராலும் தேசிய கல்விக் கொள்கையானாலும் குடியுரிமை சட்டமானாலும் – ஒன்றிய அரசின் இத்தகைய திட்டங்களை தீர்க்கத்தோடு எதிர்க்கும் முதன்மை மாநிலமாக, அரசாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதற்கான விழுமிய காரணம் தந்தை பெரியாரின் தத்துவ நீரோட்டமேயாகும்.
இந்த நீரோட்டம் வட மாநிலங்களிலும் பரவ வேண்டிய அவசியம் என்பது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் ஜனநாயகம் செழிக்க வேண்டும், ஜாதி, மத அரசியல் புதையுண்டு போக வேண்டும்; இதற்குத் தந்தை பெரியார்
என்ற மாமருந்து தேவைப்படுகிறது.
உலகப் பந்தில் எங்கே பாசிச இருள் கவ்வியிருந்தாலும் அதனை விரட்டியடிக்கத் தேவைப்படும் மாபெரும் ஒளிவீசும் கோள்தான் சிறுகனூரில் நாம் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் ‘பெரியார் உலகம்!’
அதை விரைவில் செய்து முடிக்க தந்தை பெரியாரின் உழைப்பால் வாழ்வு பெற்ற ஒவ்வொருவரும் நன்றியின் அடையாளமாக நன்கொடையைப் போட்டிப் போட்டுக் கொண்டு வழங்குவோம்!
நன்றியுடையவனே மனிதன் என்பதை நாம் நிரூபிக்க வேண்டாமா?
தந்தை பெரியார் பிறந்த நாளில் இந்தவுணர்வு ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டட்டும்.
வாழ்க பெரியார்!
வரும் காண விரும்பும் உலகம்!!