“பெரியாரின் ஜெயில் பித்து’’

6 Min Read

(இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று 29.10.1933 ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கத்திற்காக தந்தை பெரியார் மீதும், வெளியீட்டாளர் தந்தை பெரியாரின் தங்கையார் கண்ணம்மாள் அவர்கள் மீதும் தொடுக்கப்பட்ட ராஜத்துவேஷ குற்றச்சாட்டின் போது நீதிமன்றத்தில், தந்தை பெரியாரின் தலைவணங்காத் தன்மையையும் சிறைக்குச் செல்வதில் அவர் காட்டிய அடங்காத் துடிப்பையும் நகரதூதன் இதழிலே ‘பேனா நர்த்தனம்’ என்ற பெயரில் அதன் ஆசிரியர் மணவை ரெ.திருமலைசாமி அவர்கள் தீட்டிய வருணனைக் காவியம்தான் இது – ஆர்)

தோழர் ராமசாமி இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? கோயமுத்தூரில், உயரமான சுற்றாலைச் சுவர்களுடன் கூடிய நல்ல கெட்டிக் கட்டடத்தில், இரும்புக் கம்பிக் கதவுகள் போட்ட அறைக்குள் இருக்கிறார். அவர் சாப்பிடுகிற சாப்பாடு சர்க்கார் சாப்பாடு. இந்த மகத்துவம் யாருக்குக் கிடைக்கும்.

ஆனால், அவர் முன்போல பிரசங்கம் பண்ண முடியாது. பேப்பருக்குத் தலையங்கம் எழுத இயலாது. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு; மற்ற நேரங்களில் வேலை; மாலை5 அடித்ததும் அறைக்குள்; அதற்கப்பால் அசந்து தூங்க வேண்டியதுதான். மோட்டார் வண்டிகளின் ‘பூம் பூம்’ சங்கு நாதமோ ஜட்கா வண்டிகளின் ‘கடபுட’ சத்தமோ ஜனங்களின் இரைச்சலோ துளிகூட கேட்காது. அலுப்பாறத் தூங்கலாம்.

ஆனால், மூட்டுப் பூச்சிகளின் இஞ்செக்ஷன் சிகிச்சையும் கொசுக்களின் ரீங்கார கானமும் மட்டும் உண்டு. இவை எனக்குப் பழக்கமில்லை. அநுபவித்தவர்கள் மூலம் சொல்லக் கேள்வி. அந்த இடத்திற்குப் பேர்தான் ஜெயில்.

தோழர் இராமசாமி ஜெயிலுக்குள்ளிருப்பது இது நாலாவது1 தடவை. இவர் தன் மட்டிலும் ஜெயிலுக்குள் போகவில்லை. தன்னோடு உடன்பிறந்த தங்கை தோழியர் கண்ணமாளையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்.

அண்ணனுக்கு ஆறு மாதம்; தங்கைக்கு மூணு மாதம். இதோடு போகாமல் தலைக்கு முன்னூறு ரூபாய் அபராதம். இது செலுத்தப்படாவிடில் இன்னும் ஒவ்வொரு மாதம் அதிகமான ஜெயில் வாழ்வு. இத்தனை உபத்திரவமும் எதனால் தெரியுமா? சென்ற 29.10.1933இல் ‘குடிஅரசு’ பத்திரிகையில் “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்த தலையங்கந்தான்.

‘குடிஅரசு’க்கும் மேற்படி அண்ணன் – தங்கைக்கும் உள்ள சம்பந்தத்தைத்தான் நீங்கள் அறிவீர்களே. குடிஅரசு பத்திரிகையாசிரியர் அண்ணன் ஈ.வெ.ரா; அதன் பதிப்பாசிரியர் தங்கை கண்ணம்மாள். இதனால் இரண்டு பேருக்குமே தண்டனையும் அபராதமும்.

எப்படி ஏற்றுக் கொண்டார்?

தோழர் நாயக்கர் (‘தமிழ்நாடு’வின் அனுமதியை எதிர்பார்த்து ‘நாயக்கர்’ வார்த்தையை உபயோகிக்கிறேன்) தோழியர் கண்ணம்மாள் இருவரும் ஜெயிலுக்குப் போனதுபற்றி நான் இங்கு வாழ்த்துக்கூறி வரவில்லை; அவர்கள் செய்த செய்கையை மகாவீரச் செயல் என்று எழுதவும் முற்படவில்லை; அவர்கள் ஜெயிலுக்குள் போய்விட்டதால் பிரமாதமான காரியங்கள் நடந்துவிடும் என்றும் கூற வரவில்லை? அவர்கள் பொது வேலையில் இறங்கியது முதல், நாளது வரை செய்து சேவைகளை – செய்த தியாகங்களை டைரி எழுதி கண், காது, மூக்கு வைத்து சித்திரம் வரையவும் முற்படவில்லை; ஜில்லா மாஜிஸ்திரேட் செய்த தீர்ப்பை சரி என்றோ, தப்பு என்றோ அப்பீல் ஜட்ஜ்மெண்ட் கூறவும் முன்வரவில்லை. தோழர் ராமசாமி தீர்ப்பை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை எடுத்துக்காட்டவே இந்தப் பாடுபடுகிறேன்.

ஆனால், என் உள்ளத்தில் உதயமாகும் எண்ணங்களைப் படம்பிடித்துக் காட்ட எனக்கு சக்தி இல்லை. அந்தச் சக்தி இருந்தால் இந்த ‘குடிஅரசு’ வழக்கையும் அதில் ஏற்பட்ட தீர்ப்பையும்

ஈ.வெ.ரா. எப்படி ரசித்தார் என்பதை இந்தப் பேனா நர்த்தனத்தில் சித்திரம் தீட்டி விடுவேன்; சிலையாகக்கூட சிற்பம் சித்தரித்து விடுவேன். அந்த அளவு சக்திதான் எனக்கு ஏற்படவில்லை.

வசன நடைச் சித்திரத்தில் இல்லாமல் போனாலும் கவிநடைச் சித்திரத்தில் ஒருவர் படம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ஓவிய நிபுணர் – சிற்ப சாஸ்திரி – யார் தெரியுமா? அவர்தான் பாரதிதாசன். அவர் தீட்டி வரும் சித்திரம் முடிவடைந்ததும் அதை ‘நகரதூதன்’ வாசகர்களும் கண்டு களிக்கலாம்.

சீர்திருத்தக்காரனுக்கு இளைப்பாறும் மண்டபம் கிடையாது

தோழர் ராமசாமி ஒரு பொல்லாத கிழவர்; மகாப்பிடிவாதக்காரர். எதில் தலையிட்டாலும் பிறர் பின்தொடர முடியாத ஒரே ஓட்டந்தான். பொது சேவையில்தான் இப்படி என்று நினைக்கிறீர்களா? அவர் செய்த மிளகாய் வியாபாரத்திலும் அதே ஓட்டந்தான் மதுவிலக்குப் போராட்டத்தில் முதல் மெடல் பெற்றவர் இந்தத் தாத்தாதான்.

ஒத்துழையாமைக் காலத்திலும் அவரால் நடத்தப்பட்ட ஈரோடு டீம் தான் ஜெயித்தது தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் நடந்த பந்தயத்திலும் ஈ.வெ.ராவுக்குத்தான் கெலிப்பு, இன்னுஞ் சொல்லவேண்டுமா?

ஒரு பானை சோத்துக்கு இரண்டொரு பருக்கை மட்டும் பதம் பார்த்தால் போதும் சுயமரியாதை இயக்கம் – அதன் தத்துவம் – இப்போது எப்படி ஓடிக்கொண்டிருக்கிறதென்பதை நீங்கள் தான் பார்க்கிறீர்களே.

“சீர்திருத்தத் தொண்டனுக்கு ஓய்வு நேரமோ இளைப்பாறும் மண்டபமோ கிடையாது” என்று ஒரு பெரியார் சொல்லி இருக்கிறார். அதை நிதர்சனமாகக் காணவேண்டுமானால் தமிழ் நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. சரித்திரத்தில்தான் காணமுடியும். இரண்டொரு பேனாக்காரர்கள் இந்த இடத்தில் என்னை மிரட்டப் பார்க்கிறார்கள்.

சிறைவாசம் ஓர் இளைப்பாறும் மண்டபம் என்று எண்ணி என்னை ஜெயிக்கப் பார்க்கிறீர்களா? சீர்திருத்தக்காரன் ஜெயிலுக்குள் இளைப்பாறுவதேது? உள்ளே இருக்குங்காலத்தில் அவன் மனம் என்ன பாடுபடும் தெரியுமா? உண்மையான சீர்திருத்தக்காரனுக்கு அப்போதுதான் நிஜமான ஆவேசம் ஏற்படும். சிறைவாசத்தில்தான் அவன் செய்யப்போகிற யுத்தத்திற்கு படையை எப்படி அணிவகுத்து நிறுத்துவதென்பதற்குப் ‘பிளான்’ போடுவான்.

சந்தோஷமும் வருத்தமும்!

தோழர் ராமசாமிக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததுபற்றி வெகு சந்தோஷம். ஆனால், தண்டனைப்பற்றி மட்டும் அவருக்குக் கொஞ்சம் வருத்தம். யாருக்குத்தானிருக்காது? சும்மா, காட்டில் மரத்துக்கு மரம் பறந்து – கிளைக்குக் கிளை தாவி- நினைத்த நேரங்களில் பாடித் திரிந்த பறவையைப் பிடித்து கூட்டுக்குள் போட்டு அடைப்பதுபோல் அறைக்குள்ளிட்டு அடைத்தால் எந்த மனிதன் தான் வருத்தப்படமாட்டான்?

தோழர் ராமசாமிக்கு அந்த முறையிலா வருத்தம்? அல்லவே அல்ல. ‘பொசுக்கென்று’ ஆறுமாதம் கிடைத்தது. அதிகமாகக் கிடைக்கமென்று நம்பி இருந்தார். ஆனால், அது ஏமாற்றத்தில் முடித்தது. அதனால்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கலாம். நான் மட்டிலுமல்ல, மற்ற எத்தனையோ தோழர்கள் ரெண்டுவருஷம் வரை ராமசாமியை வெளியில் பார்க்க முடியாதென்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், ஆறுமாதம் என்றதும் எல்லோருக்கும் வியப்பு.

ஒன்பத்திரண்டுபடி தாண்டிவிட்டது!

கைது செய்யப்பட்டது தோழர் ராமசாமிக்கு ரெட்டை சந்தோஷம். இந்த ‘சாக்கில்’ உள்ளே போய்விட்டுவந்தால் ஊக்கம் ரொம்ப ஏற்படுமென்பது அவரது ஆசை. அந்த ஆசையை அனுபவிப்பதற்காகவே அவர் எதிர் வழக்காடவில்லை என்று
நினைக்கிறேன்.

எத்தனையோ பேர்கள் எடுத்துச் சொல்லியும் எவ்வளவோ தொண்டர்கள் கெஞ்சிக் கேட்டுங்கூட இந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரே பிடிவாதமாய் சாதித்து விட்டாராம். அப்பப்பா! இருந்தாலும் இந்தப் பழுத்த வயதில் இவ்வளவு முரட்டுதனமென்றால் வாக்கு மூலமாவது வகையோடு கொஞ்சம் ஈனஸ்வரத்தில் கொடுத்திருக்கக்கூடாதா? ‘குடிஅரசு’த் தலையங்கம் ஒரு படியைத் தாண்டியிருந்ததென்றால் இவரது வாக்குமூலம் ஒன்பத்திரண்டு படியையும் தாண்டிவிட்டது.

கடைசியாக பப்ளிக் பிராசிக்கியூட்டர் தனது ஆர்குமெண்டை பேசும்போது பார்க்கவேண்டுமே இவரது குறும்புத்தனத்தை! அவர் பேசும்போது பத்திரிகை வாசகங்களைப் படித்துக்காட்டி இந்த இந்த இடத்தில் ராஜத்துவேஷம் இருக்கிறது, இந்த இந்த இடத்தில் பொதுவுடைமைப் பிரச்சாரம் இருக்கிறது என்று எடுத்துக் காட்டும்போது தோழர் ராமசாமி ஸ்பிரிங் பொம்மையைப் போல தலையை அசைத்து அசைத்து ஆட்டிக்கொண்டு, அதற்குத் துணையாக ஆள்காட்டி விரலையும் பலகையில் அடித்துக்கொண்டு பப்ளிக் பிராசிக்கியூட்டர் சொல்லுவதெல்லாம் வாஸ்தவம் எனச் சொல்லுவது போல தலையாட்டிவந்தார்.

தீர்ப்புக் கூறியதும் அவரது முகப்பொலிவு படம் பிடிக்கக் கூடியதாகவிருந்தது. தீர்ப்பில் தோழர் ராமசாமியைக் குற்றவாளி அல்ல என்று விடுதலை செய்திருக்கும் பட்சத்தில் அவர் ரொம்பத் துக்கப்பட்டிருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

வாஸ்தவத்தில் ஜில்லா மாஜிஸ்திரேட் அவ்வாறு செய்திருந்தால் தோழர் ராமசாமியே உடனே எழுந்து, “இல்லை நான் குற்றவாளியே, என்னை ஜெயிலுக்குள் தள்ளுங்கள்” என்று நிச்சயமாகச் சொல்லியிருப்பார். இவருக்கு ஏன் இந்த ஜெயில் பித்தோ தெரியவில்லை.

– ‘நகரதூதன்’, 04.02.1934

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *