பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள் என்றைக்கும் கல்வியால் போதிக்கப்படவேண்டும்; அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும்!
பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிக் காக்கின்றார் என்பதற்கு, படம் திறந்தது மட்டும் சான்றல்ல. தமிழ்நாட்டில் அவர் செய்துவருகின்ற சட்டங்களும் சான்றுதான்!
சென்னை, செப்.17 பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள் என்றைக்கும் கல்வியால் போதிக்கப்பட வேண்டும்; அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படை யில்தான், இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் பலவற்றை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்; இதை யாரும் மறுத்துவிடமுடியாது. பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிக் காக்கின்றார் என்பதற்கு, படம் திறந்தது மட்டும் சான்றல்ல. தமிழ்நாட்டில் அவர் செய்துவருகின்ற சட்டங்களும் சான்றுதான் என்றார் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான கோவி.செழியன் அவர்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம்!
கடந்த 11, 12.9.2025 ஆகிய இரு நாள்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் நடைபெற்றது. இரண்டாம் நாள் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான கோவி.செழியன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கல்லடியும், சொல்லடியும் தாங்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைத்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார்
இல்லையென்றால், இதே பல்கலைக் கழகத்தில் இன்றைக்கு உங்கள் முன்னால், பெரியாருடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு – ஆனால், அன்றைக்கு எப்பேர்ப்பட்ட போராட்டங்க ளைத் தாண்டி வளர்ந்த இயக்கம், இந்தத் திராவிட இயக்கம். பெரியாருடைய பணி. கல்லடியும், சொல்லடியும் தாங்கி, தாங்கித் தாங்கி, இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைத்த மாபெரும் தலை வர் தந்தை பெரியார் என்ற கொள்கைக் குன்று.
அடித்த நேரத்திலும் நின்று, அடுத்த அடி வாங்க லாம் என்று காத்திருப்பார் இந்த மக்களுக்காக. அண்மையில்கூட, நூலகத்திற்கு நான் சென்றபொழுது, விடுதலை இதழில் நான் கண்ட காட்சி, அட்டைப் படச் செய்தி, பெரியார் உட்கார்ந்து, ஏதோ படிக்கிறார் – கண்ணிலே கண்ணாடி, கையிலே ஒரு பூதக் கண்ணாடி. வயது 95.
94 வயதில், முடியாத தருணத்தில், மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு…
60 வயது கடந்துவிட்டால், கண்ணாடி போடுகிறோம்; வசதி இருந்தால் லென்ஸ் வைத்துக் கொள்கிறோம். 70 வயதில், கட்டாயம் கண்ணாடி தேவை. 80 வயதில் கண்ணாடி இருந்தும் பயனில்லை. 94 வயதில், முடியாத தருணத்தில், மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, அப்பா, அம்மா என்று முனகிய காலத்தில், கையில் புத்தகத்தை வைத்து, கண்ணில் கண்ணாடி போட்டு, அது மறைக்கின்ற காரணத்தினால், நான் அறிந்தவரையில், தெரிந்தவரையில், பூதக்கண்ணாடியை வைத்துப் படித்து, படித்து இந்த மக்களுக்குப் புத்தி சொன்ன பேராசான் தந்தை பெரியார்.
அந்த உழைப்பு, சாதாரண உழைப்பா?
அவருடைய பெரும் போராட்டம், சாதாரண போராட்டமா?
அவருக்கு நிகராக, உழைத்த, பாடுபட்ட இன்னொரு தலைவர்கள் யார்?
அவருடைய தம்பிமார்கள், அந்தப் படை வரிசையில் நிலைத்து நின்று காட்டியதால், இன்றைக்கு வென்று காட்டியிருக்கின்றோம், திராவிடக் கருத்துகளை, திராவிடச் சித்தாந்தங்களை.
நடிகவேள் எம்.ஆர்.இராதா
திராவிட இயக்கக் கருத்துகளை மேடையில் நடித்து, புகழ்பெற்ற மாமனிதர் நடிகவேள் எம்.ஆர்.இராதா.
இராமாயணம் என்ற நாடகத்தை நடத்துகிறார்; நாடகம் முடிந்ததும், அதற்காகக் கைது செய்யப்படுகிறார். மறுநாள் நாடகம் நடத்தப்படவில்லை. காவல்நிலையத்தில், ‘‘இனிமேல் இராமாயணம் நாடகம் நடத்தமாட்டேன்’’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறார்.
அன்று மாலை நாடகம், ‘கீமாயணம்’ என்ற தலைப்பில் நடைபெறும் என்று அறிவித்து, இராமாயணம் நாட கத்தில் என்னென்ன கருத்துகளைச் சொன்னாரோ, அதே கருத்துகள்தான். அதற்காக மீண்டும் கைது செய்யப்படுகிறார்.
எத்தனை பேருக்கு அந்தப் போராட்ட உணர்வு வரும்?
பெரியாரைப் போல் சிந்தித்து, சிந்தித்து இந்த மக்களுக்காக
உழைத்த தலைவர் யார்?
ஆக, எந்த வகையிலாவது அந்தக் கருத்துகளை மக்களிடத்தில் சொல்லவேண்டும் என்ற துணிச்சல். பெரியாரைப் போல் சிந்தித்து, சிந்தித்து இந்த மக்க ளுக்காக உழைத்த தலைவர் யார்?
ஆணாக பிறந்து, பெண்களுக்காக தனது ஆயுட்காலம் முழுவதும் உழைத்தவர் தந்தை பெரியார் என்ற மாமனிதர்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, ஏழை மக்களுக்காகப் பாடுபட்டவர் தந்தை பெரியார்.
பன்மொழி புலவர்கள் பலர் சொல்வார்கள்; வல்லுநர்கள் பலர் சொல்வார்கள்; இலக்கிய புலமை மிகுந்தவர்கள் பலர் சொல்வார்கள். என் மாணவச் செல்வங்களை வைத்துக் கொண்டு சொல்கிறேன், விடுதலை என்ற லையிலிருந்த கொம்பை முறித்து விட்டு, சுயமரியாதையுடைய லையைத் தந்த ஒரு பொருளடக்கம் உள்ள பெரும் புலவர் தந்தை பெரியார்.
முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை உருவாக்கித் தந்த ஆசான் பெரியார் என்ற மாமனிதர்!
எத்தனையோ பேரறிஞர்கள், அறிஞர்கள், வல்லாண்மை மிக்க தமிழ்ச் சான்றோர்கள், யார் பெயரையும் சொல்லி இந்த நேரத்தில் அவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் எல்லோரும் சான்றோர்கள்தான்; திருக்குறளுக்குப் பலர் பொருளுரை எழுதியவர்கள்தான். சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். மகாபாரதத்தை கண்டித்துப் பேசியவர்கள்தான். மேடைகளில் முழங்கியவர்கள்தான்.
ஆனால், எழுத்துச் சீர்திருத்தத்தை உலகத்தில் ஒரு மொழிக்கு முதன்முதலில் உருவாக்கித் தந்த ஆசான் பெரியார் என்ற மாமனிதர்.
ஏதோ, முட்டாள்தனமாக சொல்லுகின்ற காரணத்தி னால், நீ நம்பிவிடாதே! ‘தை’னாவை எப்படி எழுதுவாய்? ஒரு கொம்பு, த போட்டு எழுதுவேன் என்றனர். லையனாவுக்கு மட்டும் என்ன வம்பு? என்றார்.
ஆக, யாரும் சிந்திக்காததைச் சிந்தித்த முதல் தலைவர் தந்தை பெரியார் என்பதற்கு இது அடிப்படைச் சான்று.
நம்மில் பலர், முழுக்கைச் சட்டை தைத்து, அரைக் கையை மடக்கி வைத்திருப்போம்.
அய்யா அவர்கள், ‘‘அரைக்கை சட்டை தைத்து, அரைக் கையில் போடு. இல்லையென்றால், முழுக்கை சட்டை தைத்து, முழுக் கையாகப் போடு; துணியை அதிகமாக எடுத்து, தைத்து, முழுக்கை சட்டையைத் தைத்துவிட்டு, அதை அரைக் கையாக மடித்து போடுகிறாயே, இது விரயம் இல்லையா?’’ என்று கேட்பார்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்!
‘பிராக்டீகலாக’ வாழ்ந்த மனிதன் அவர்தான். வாழ்ந்ததோடு, இப்படித்தான் வாழவேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். சொல்லிவிட்டுப் போனவர் அல்ல; பேசிவிட்டுச் சென்றவர் அல்ல. அப்படியே செய்து காட்டியவர்.
இல்லையென்றால், தன் குடும்பத்தில் பிறந்த தமக்கைக்கு, மறுமணம் செய்து வைத்து வாழ்வியலைத் தந்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார் என்ற மனிதர்.
எழுத்துச் சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம், மொழி சீர்திருத்தம் ஆகியவற்றைச் செய்தவர் தந்தை பெரியார். இல்லையென்றால், இத்தனைப் பல்கலைக் கழகங்களுக்குப் பாடமாக தந்தை பெரியார் வந்திருப்பாரா?
அவர் நடத்திய பத்திரிகையின் பெயர் ‘விடுதலை’ – எப்பேர்பட்ட உரிமையையும் தருவது ‘குடிஅரசு.’
அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும்!
எனவே, பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள் என்றைக்கும் கல்வியால் போதிக்கப்படவேண்டும்; அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான், இது போன்ற ஆய்வுக்கூட்டங்கள் பலவற்றை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்; இதை யாரும் மறுத்து விட முடியாது.
நூற்றாண்டு விழா கண்ட தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டம் வைக்கம் போராட்டம். அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் போராடி, போராடி சலித்துப் போனதற்குப் பிறகு, நீங்கள் வந்து போராடுங்கள் என்று அழைத்தனர்.
நாமாக இருந்தால், அண்டை மாநிலத்திற்குச் சென்று போராட்டமா? சிறையா? சித்திரவதையா? வேண்டாம் என்று நினைத்திருப்போம்.
‘‘சென்றார், கண்டார், வென்றார்’’
‘‘சென்றார், கண்டார், வென்றார்’’ என்ற வரலாறு வைக்கம் போராட்ட வீரர் பெரியாருக்கு உண்டு.
வைக்கம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பகுதியில் வாழுகின்ற மக்கள் எல்லாம், கருப்புச் சட்டை அணிந்துகொண்டு சென்ற தியாகிகளைப் பார்த்து, கையெடுத்து வணங்கி நன்றி சொன்னது, போட்டிருக்கின்ற கருப்புச் சட்டை தொண்டனுக்கு அல்ல – அந்தத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக இருக்கின்ற தந்தை பெரியாருக்கு என்பதை, கேரள மாநிலத்தில் நானும் உணர்ந்தேன்.
அந்த அளவிற்குப் போராட்டக் களத்தில் நின்று வென்றவர். சொல்லியபடியே செய்தவர்.
கைது செய்யப்பட்டு, உங்களை விடுதலைச் செய்கிறேன், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
‘‘மன்னிப்பு என்பது என் வாழ்நாளில் காணாதது. என்னை முன் ஜாமீனில் வெளியே விட்டாலும், வெளியில் சென்று மீண்டும் இதே காரியத்தை நான் செய்வேன்’’ என்று, ஜாமீன் தருகின்ற நீதிபதியிடம் வாக்குமூலம் தந்த முதல் மனிதரும் தந்தை பெரியார் என்ற அற்புதத் தலைவர்தான்.
எத்தனை பேர் இதுபோன்று சொல்ல முடியும்?
எனவே, அவருக்கு நிகராக, சிந்தித்து செயல்பட்டு உழைத்த தலைவர்கள் பலர் இருக்கின்ற காரணத்தி னால்தான், அறிஞர் அண்ணா போன்றவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், எந்தக் கொள்கைகளுக்காகத் தந்தை பெரியார் பாடுபட்டு உழைத்தாரோ, அந்தக் கொள்கைகளை சட்டமாக்கிவிடவேண்டும் என்ப தற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் சுயமரியாதைத் திருமணச் சட்ட உரிமை.
தந்தை பெரியார் என்ற ஆசானுக்கு, அண்ணா கொடுத்த அன்புப் பரிசு!
அதிலும் தான் பொறுப்பேற்ற காலத்திலிருந்து மட்டுமல்ல. தந்தை பெரியார் என்ற ஆசானுக்கு, அண்ணா கொடுத்த அன்புப் பரிசு, தந்தை பெரியார் அவர்கள் இதுவரை நடத்திய திருமணங்கள் அத்தனையும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அந்த சட்ட உரிமையைத் தந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – அறிஞர் அண்ணா அவர்கள்.
மூடப் பழக்கவழக்கங்களுடைய கல்வி, இனி தமிழ்நாட்டில் இருக்காது!
இவற்றை, அடுத்த சமூகத்தினருக்குக் கல்வி அறிவோடு, பொது அறிவோடு, மூடப் பழக்கவழக்கங்கள் அற்ற நிலையில், ஒரு விஞ்ஞான அறிவோடு எடுத்துச் சொல்லவேண்டும் என்கின்ற பெரும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான், அண்மையில் நடக்கின்ற மாணவர்கள் மற்றும் மாணவர்களைச் சார்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லுகின்ற வார்த்தை, மூடப் பழக்கவழக்கங்களுடைய கல்வி, இனி தமிழ்நாட்டில் இருக்காது; அறிவியல் சார்ந்த கல்விதான் தமிழ்நாட்டில் போதிக்கப்படவேண்டும் என்பதுதான். சமூக சிந்தனையோடு கல்வி கற்றுத் தரப்படவேண்டும்.
பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிக் காக்கின்றார்!
அது சமூகநீதியாக இருக்கவேண்டும்; அறிவியல் கல்வியாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை உடைய ஒரு பெரும் முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர், பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிக் காக்கின்றார் என்பதற்கு, படம் திறந்தது மட்டும் சான்றல்ல. தமிழ்நாட்டில் அவர் செய்துவருகின்ற சட்டங்களும் சான்றுதான்.
இல்லையென்றால், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவித்திருப்பாரா, ‘‘இனிமேல், காலனி என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது’’ என்று.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் இதுபோன்று சொல்ல முடியுமா?
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் சொன்னேன், ஒரு சில தலைவர்களின் பெயரைச் சொல்லி, அவர்களுடைய பெயரைச் சொல்வது கொச்சைப்படுத்துவதற்காக அல்ல; அடையாளப்படுத்து வதற்கு.
சந்திரபாபு நாயுடு, ராஜசேகர் ரெட்டி, கேரளாவில்கூட அச்சுதமேனன், நரேந்திர மோடி.
தமிழ்நாட்டில் யாராவது ஒருவர், தன் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைப் போட்டுக் கொள்கிறானா?
ஆனால், ஆனால், ஆனால், தமிழ்நாட்டில் யாராவது ஒருவர், தன் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைப் போட்டுக் கொள்கிறானா?
(தொடரும்)