“பரந்து விரிந்த இந்திய நாட்டில் எவரும் செய்யாத அரும்பணிகளைச் செய்து முடித்துள்ள தந்தை பெரியாரின் தொண்டிற்குப் பேச்சுக் கலைதான் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அறுபதாண்டுகள் பேசிப்பேசியே அவர் இந்தச் சமுதாயத்தின் இழிவை ஒழித்தார். பேச்சிற் சுற்றி வளைப்பது என்பதெல்லாம் அவரிடம் அணுவுமில்லை. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்பதைப்போல் கருத்துகளைத் தயக்கமின்றித் தருவார். ‘கேட்டாற்கேளுங்கள்; கேட்கப் பிடிக்கவில்லை என்றால் எழுந்து போய்விடுங்கள்’ எனத் துணிந்து சொல்லும் அவையஞ்சாமை அவரிடம் அதிகமாகவே இருந்தது. கூட்ட இறுதியில் “நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதில்லை; சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் தள்ளிவிடுங்கள்; ஏற்றுக் கொள்வதற்கும், தள்ளுவதற்கும் உங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அவ்வளவு உரிமை கருத்துகளை எடுத்துச் சொல்ல எனக்கும் உண்டு” என்று சொல்லிச் சிந்தனையைத் தூண்டி விடுவதோடு, உண்மைச் சனநாயகத்தையும் உணர்த்தி அஞ்சாமற் கருத்துகளை எடுத்துவைத்தார்.
பெரியாரின் பேச்சைக் கேட்க மக்கள் பெருமளவிற் கூடினர் காங்கிரசை, காமராசர் ஆட்சியை ஆதரித்துப் பேசிவந்த காலங்களிற் கூட்டத் தொடக்கத்திலேயே பெரியார் பேசிவிட்டால் மக்கள் கலைந்து விடுவார்கள் என்று அஞ்சி “அனைவரும் பேசி முடித்தபிறகு, நாயக்கர் திரும்பவும் பேசுவார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்” என்று கூட்டத்தை நடத்துபவர் சொல்வார்கள். அவர் பேச்சை மக்கள் காத்திருந்து கேட்டுச் சுவைத்த நிகழ்ச்சிகள் ஏராளம். பெரியாரின் பேச்சுகளைத் தொகுத்துப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் அரசியல் வரலாற்றை, சமுதாய வரலாற்றை அறிவித்துக் கொண்டிருக்கிறன.
தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியதற்கு வகுப்புவாரி உரிமைப் போர் தான் காரணம். 1916, 17இல் இப்போர் ஆரம்பமாகிவிட்டது. 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டில் இச்சிக்கல் மீண்டும் எழுந்தது. மாநாட்டில் சிலர் சூழ்ச்சியைக் கையாண்டு இக்கருத்தைப் புறக்கணிக்கச் செய்தனர். கொதித்தெழுந்த பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறினார்; நீதிக்கட்சிக்கு ஆதரவு தரலானர். 1926இல் டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையிலிருந்த முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவை மிகுந்த துணிவோடு எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நிறைவேற்றினார். இந்த ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் 1950இல் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை எதிர்த்துப் பெரியார் கிளர்ச்சி நடத்தினார். அரசாங்கம் அஞ்சி நடுங்கிது. அதன் விளைவால் பெரியார் திரும்பவும் வெற்றி பெற்றார்.
தொடக்கம் முதல் இறுதிவரை இப்போராட்டத்திற் பங்கேற்று இவர் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க சொற்பொழிவுகள், பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை வளத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்துள்ளன. அக்கால அரசியலின் நிலையைக் காட்டுவதுடன், இலக்கியமாயும் அவை நின்று சிறக்கின்றன.
வகுப்பு வாரி உரிமையைப் பற்றிப் பேசும்போது, தகுதி – திறமை அடிப்படையைக் கொண்டு வர முயல்பவர்களைப் பார்த்து, “ஒரு மாணவனின் கெட்டிக்காரத் தனத்துக்கு, திறமைக்கு மார்க்கையா அளவு கோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதாற் கெட்டிகாரன் என்று சொல்லிவிட முடியுமா? கண்ணை மூடிக் கொண்டு உருப்போட்டால் மார்க் வந்து விடுகிறது. மார்க் வாங்குவதிலே என்னென்ன முறைகள் கையாளப்படுகின்றன. என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். பரீட்சை முடிந்தவுடனேயே பேப்பர்கள் எங்கே போகின்றன என்பதைக் கண்டுபிடித்துப் பணத்தைத் தூக்கிக் கொண்டு பறக்கிறார்களே!” என்று கூறித் தகுதி-திறமை என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என விளக்குகிறார். அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்னும் கருத்தைக் கல்வித் துறை ஆய்வாளர்களே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனையே தந்தை பெரியார் முப்பது ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி வந்தார்.
திருமண விழாக்களில் தந்தை பெரியார் பேசியுள்ள பேச்சுகள் அழியா இலக்கியங்களாய் உள்ளன. திருமண வீட்டில் இருந்துகொண்டு சாதகத்தை, சடங்குகளை, புரோகிதரைச் சாடி வந்தார். வேறு எவருக்கும் இந்தத் துணிவு ஏற்பட்டதில்லை. நோய் எங்குத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குச் சென்று, நோய் வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்துகின்ற சிறந்த சீர்திருத்தவாதி பெரியார். தந்தை பெரியார் அப்பாதையில் அணுவும் அகலாமல் தொண்டாற்றி வந்தார். எனவேதான் மூடத்தனம் மூடிக்கிடக்கின்ற இத்திருமணத்தை அகற்றவேண்டுமானால், திருமண நிகழ்ச்சிகளின் மூலமாகவே விளக்கம் தந்து தெளிவை உண்டாக்க வேண்டும் என்று விரும்பினார். இவ்விருப்பம் வீணாகவில்லை. ஆயிரக்கணக்கான சீர்திருத்தத் திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் பெரியாரின் பேச்சு விளைவித்த மாற்றந்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
பெண்களுக்குச் சமஉரிமை அளித்து, பிள்ளைப் பேற்றைக் குறைத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ, அனைவரையும் வேண்டுகிறார். முக்கியமாகக் கணவனும் மனைவியும் தங்கள் முதல் லட்சியமாகக் கொள்ளவேண்டுவது வரவுக்கு மீறாமற் செலவு செய்வதுதான். வரவுக்கு மேல் செலவு செய்வது ஒரு விபசாரம் போன்றதாகும். இப்படியெல்லாம் வாழ்க்கையில் வழுக்கிவிழக்கூடாது. ஆண்கள் பெண்களின் மூடநம்பிக்கையைப் போக்கிப் பக்குவப்படுத்த வேண்டும். துணிமணி நகைகளை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விடுவது சரியன்று. பெண்களுக்கு அறிவை அளிக்க வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும் முறையான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்பேச்சு இலக்கியமாய் இருப்பதில் வியப்பில்லை.
வாழ்க்கைத்துணை என்பது அறிவுப் பொருத்தம், அன்புப் பொருத்தம் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டுவது. ஜாதகப் பொருத்தம் பார்ப்பது வீண்வேலை. இவ்வுண்மைக் கருத்தைத் தருகின்றது ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்னும் இவரின் சொற்பொழிவு நூல்.
தாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை பொருளாதாரத்தை, அரசியல், சமுதாயத்தைச் செப்பனிடப் பெரியாரவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் திரட்டிப் பார்க்கின்ற பொழுது அவரின் பேருழைப்பு வெளிப்படுகின்றது. நமது நாட்டிற்கு முதலில் தேவைப்படும் சீர்திருத்தம், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டுள்ளதைக் களைவதேயாகும். இரண்டாவது மூடபக்தி, குருட்டு நம்பிக்கை இவற்றிற்குக் காரணமாக உள்ள மதம், கடவுள், மோட்சம், நரகம் என்பவற்றை அகற்றுவதே அடிப்படையான சீர்திருத்தங்களாகக் கொண்டார். இவர் பேச்சுகள் இக்கருத்துகளை மையமாகக் கொண்டே சுழன்றன. அச்சூழற்சியின் பயனால் விளைந்த மாற்றங்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஜாதிப் போராட்டத்தில், மூட நம்பிக்கைகள் குறைந்து தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
கிராமங்களே இல்லாமல் செய்வதுதான். அஃதாவது நகரங்களைப் போன்று கிராமங்களும் மாற்றம் பெறுவது தான் உண்மையான கிராமச் சீர்திருத்தம் என்கிறார் அவர். ‘கிராமச் சீர்திருத்தம் என்னும் இவரின் சொற்பொழிவு நூல்’ கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்குக் கொண்டு வந்தால், நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச் செலவு-முட்டு அணிக்குக் கூடப் பத்தும் பத்தாமற் கணக்குப் போட்டு, விலைபேசி, ஒன்றுக்கு ஒன்றே காலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரயத்தைத் ‘தரகு, மகிமை, சாமிக்காசு, நோட்டுவட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெற்றிலைபாக்குச் செலவு’ என்றெல்லாம் பல செலவுக் கணக்குப் போட்டுப் பிடித்துக் கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன்மீது கருணை வைத்துக் கடவுள் இவ்வளவு ரூபாயைக் கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக் கொண்டு காப்பி சாப்பிட்டுச் சினிமாப் பார்த்துவிட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ, இந்தச் சரக்கை வாங்கி இருப்பு வைத்து, அதிக விலை வரும்போது விற்று, இலாபமடைந்து, இலட்சாதிபதியாகி, மாடமாளிகை கட்டிக்கொண்டு, கிராமவாசியினை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டுவேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான். கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது; கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்காகவே இருந்துவருகிறது. என்று நடைமுறையில் உள்ள இவ்விரங்கத்தக்க நிலைக்காக வருந்துகிறார். கிராமச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுகின்ற எந்தத் தலைவரும் இக்குறைகளை நெருங்கிப் பார்த்ததில்லை. கிராமங்கள் நகரங்களின் அடிப்படையாகத்தான் இருக்கின்றன. இக்குறை களைய வேண்டுமானால், உண்மைச் சீர்திருத்தம் நடைபெறவேண்டும்; கிராமங்கள் நகரங்களாக உயரவேண்டும் என்கிறார்.
சொற்பொழிவு நூல்கள் பெருகியதற்கு காரணமே தந்தை பெரியார்தான். இவர் இயக்க மேடைகளில், மாநாடுகளில், திருமணங்களில், கல்லூரி அரங்குகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அத்தனையும் இன்று இலக்கியங்களாய் மணக்கின்றன; வரலாற்றுச் சான்றுகளாய் வாழ்கின்றன. சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவு நூல்கள் உருவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை வேறு எந்தச் சொற்பொழிவாளரும் எட்ட முடியவில்லை. சொற்பொழிவு இலக்கியத்தின் தந்தையாகப் பெரியார் விளங்குகிறார். பெரியார் தொடர்ந்து மூன்று மணி, நான்குமணி நேரங்கள்கூடப் பேசும் திறன் படைத்தவர். பெரியார் பேச்சை முடிக்கவில்லையே என்று யாரும் எண்ணுவதில்லை; மாறாகத் தொடர்ந்து பேசமாட்டாரா? என்று தங்கள் ஆவலை வெளிப்படுத்தி நிற்பர். தேவையான குட்டிக்கதைகள், உள்ளத்தை மகிழவைக்கும் உவமைகள், பாரட்டப்பெறும் பழமொழிகள் அனைத்தையும் கலந்து விருந்து படைக்கும் சொல்லின்செல்வர் தந்தை பெரியார்” என்கிறார் ஆய்வாளர் கு.வணங்காமுடி
(நூல் : பகுத்தறிவு இலக்கிய வரலாறு பக்கம் 52 – 57)