தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திறக்கப்படவிருக்கின்றது! அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்!

5 Min Read

சிறுகனூரில், ரூ.100 கோடி திட்டத்தில் பெரும் சிறப்புடையதொரு
‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, செப்.17 – சிறுகனூரில்,  ரூ.100 கோடி திட்டத்தில் பெரும் சிறப்புடையதொரு  ‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது. தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், அது சிறப்பாகத் திறக்கப்படவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (செப்.17) தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து, சமூகநீதி நாள் உறுதிமொழி கூற, தோழர்கள் திரும்பக் கூறினர்.

பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

தலைவர் தந்தை பெரியாருடைய 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியார், தமிழர் தலைவராக உரு வாகி, இன்றைக்கு உலகத் தலைவராக அவரது தொண்டறத்தின்மூலம் உச்சத்திற்குச் சென்றிருக்கின்றார்.

தந்தை பெரியார் பிறந்த நாள், ‘சமூகநீதி நாள்!’

அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் பிறந்த நாளை (செப்.17) நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர், இன்றைக்கு அகிலம்  வியக்கக் கூடிய சாதனைகள் மூலம் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள்,  முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே,  தந்தை பெரியார் பிறந்த நாளை, ‘சமூகநீதி நாள்’ என்று ஆக்கினார்.

அதுபோலவே, புரட்சியாளர்  டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை ‘சமத்துவ நாள்’என்று அறிவித்தார்.

லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், இரண்டு சிறப்பான நூல்களை வெளியிட்டார்!

ஒவ்வொரு இடத்திலும் வரலாற்று முத்திரையை ‘திராவிட மாடல்’ அரசு பதித்தது மட்டுமல்ல, ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்பதை நமது முதலமைச்சர் அவர்கள் நிரூபித்து வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றாலும், அதேபோல, அய்ரோப்பிய நாடுகளான ஜப்பானுக்குச் சென்றாலும், இங்கிலாந்திற்குச் சென்றாலும், அங்கேயும் தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டினைச் சிறப்பிக்கின்றார். லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், இரண்டு சிறப்பான நூல்களை வெளியிட்டார்.

ஒன்று, ‘திராவிட மாடல்’ ஆட்சியை, திராவிடத் தத்துவங்களை விளக்கிய  ‘‘The Dravidian Pathway: How The DMK Redefined Power And Identity In South India’’ என்ற  ஆங்கில நூல். இன்னொன்று, சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாற்றைச் சிறப்பாகச் சொல்லக்கூடிய தந்தை பெரியாருடைய வரலாற்றைச் சொல்லக்கூடிய, Cambridge University Press வெளியீடான  ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற நூலினையும் வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவில் பன்னாட்டமைப்பின் மாநாடு!

ஆஸ்திரேலியாவில், பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம் உருவாகி, வருகின்ற நவம்பர் மாதம் பெரியார் பன்னாட்டமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கின்றது.

எனவே, எந்தெந்த நாடுகளிலும் பெரியாருடைய தத்துவங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. பெரியார், உடலால் மறைந்து, உணர்வால் நிறைந்திருக்கின்ற கட்டம் – ஓர் அரை நூற்றாண்டுக்குப் பின்னும், நேசிக்கவேண்டிய மக்கள் அவரை நேசிக்கிறார்கள்; தூஷிக்கவேண்டியவர்கள் அலறித் துடிக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு அதுதான் தொழில். ஆனால், அவையெல்லாம் பெரியாருடைய விளைச்சலுக்கு நல்ல உரமாக ஆக்கிக் காட்டப்பட்டு இருக்கின்றன.

எனவே, ‘‘பெரியார் உலக  மயம் – உலகம் பெரியார் மயம்!’’

ரூ.100 கோடி திட்டத்தில் ‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது!

சிறுகனூரில்,  ரூ.100 கோடி திட்டத்தில் சிறப்பானதொரு ‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது. தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், அது சிறப்பாகத் திறக்கப்படவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்!

தூண்டுதல் அரசியலுக்கு
‘திராவிட மாடல்’ ஆட்சி இடந்தராது

செய்தியாளர்: நாளைக்கு தூய்மைப் பணியாளர்கள், அவர்களுடைய கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். இன்றைக்குப் பெரியாருடைய பிறந்த நாளாகும். சமூகநீதி, சமத்துவம் வேண்டி அடித்தட்டு மக்களுக்காகப் போராடுவதுதான் உங்களுடைய கடமையாக பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணி. அவர்களின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: சமூகநீதி, சம உரிமை, வாய்ப்புகள், அனைவருக்கும் அனைத்தும் என்பதை நிலை நாட்டக்கூடிய ஆட்சி இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பதற்கான அரசியல் சூழ்ச்சியோடு, அரசியல் மாச்சரியத்தோடு, சிலரைத் தூண்டி விட்டிருக்கின்றார்கள். அந்தத் தூண்டுதல் அரசியலுக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி இடந்தராது.

எனவேதான், எது வெண்ணெய்? எது சுண்ணாம்பு? என்று பிரித்துப் பார்க்கின்ற தகுதியை உருவாக்குவோம்.

இன்னார்தான், அந்த வேலைக்குத் தயார் என்பதைக் கண்டித்து ஜாதி ஒழிப்புப் பணி!

செய்தியாளர்: தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்கலாமே?

தமிழர் தலைவர்: இப்போது அது பிரச்சினையல்ல. எப்போது நிரந்தரம் ஆக்குவது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். முதலில், நம்முடைய எதிரியை நிரந்தமாக்கிடக் கூடாது.

முதலில், இன்னார்தான், அந்த வேலைக்கு உரியவர்கள் என்ற நிலை இருப்பதைக் கண்டித்துதான், ஜாதி ஒழிப்பு அடிப்படையில்,  அந்தத் தத்துவத்தில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம்.

வேகமாகச் சென்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து, ஒரு சந்துக்குள் செல்லுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருகிறீர்கள். சந்தும் திருத்தப்படவேண்டும்; பெரிய அகலமான வழிகளும் அடைக்கப்படக் கூடாது.

அதற்கு வேண்டிய நோக்கம்தான், பெரியாருடைய பிறந்த நாள் ஒவ்வொன்றும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்!

செய்தியாளர்: ஆணவப் படுகொலை தொடர்பாக தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இப்போது தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஆணவப் படுகொலைக்கு ஆளாகிறார்கள். இந்த சமூகநீதி நாளில், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆணவப் படுகொலைகள் என்பதை மிகவும் கண்டித்துத் தொடர்ச்சியாக எழுதி, பணி செய்து கொண்டிருப்பவர்கள் திராவிடர் கழகத்தார் மட்டுமல்ல; தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைவரும்தான். அதற்குரிய தனிச் சட்டத்திற்கு விரோதமாக இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்காது.

விரைவில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெறவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இடையறாது, நாங்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றோம்.

அதேபோல, மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் இடம்பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.

இரண்டிற்கும் அவர் இணக்கமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். அதற்கு விடை உரிய நேரத்தில் கிடைக்கும். செய்வார்கள்!

இது ஜாதி ஒழிப்பை நோக்கிய ஓர் அரசு என்பதால்,

சமதர்மத்தையும், சுயமரியாதையும் இலக்காகக் கொண்டிருக்கின்ற அரசு என்பதால், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள், இதை அரசியலாக்கி, புகுந்து விளையாட விரும்பவில்லை.

– இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *