சுயமரியாதை என்னும் பெயருடன் அதற்கு ஈடான ஒரு பெயருடைய இயக்கம் உலகில் வேறு எங்கும் உண்டா என்று தேடித் தேடிப்பார்த்தாலும் அத்தனை தேடல்களிலும் வந்து விழும் முடிவுகள் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் என்பதைத் தவிர வேறு இருக்காது. சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாகவும் திராவிடர் கழகத்திலிருந்து அரசியல் கட்சியாக உருவெடுத்த திராவிட முன்னேற்றக் கழகமும் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்திருக்கிறது.
பெயரும். பெரும்புகழும் சமுதாய மாற்றமும் மறுமலர்ச்சியும் ஜாதி ஒழிப்பு பெண்ணடிமை ஒழிப்பு ஆகிய இன்னும் பல தளங்களில் வெற்றிகளைக் குவித்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை, சுயமரியாதை இயக்கத்தில் சிறுவனாக இணைந்து – சுயமரியாதை இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியான திராவிடர் கழகத்தின் தலைவராக 93 வயதை தொடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக நடத்தி வருகிறார். அதில், சுயமரியாதை இயக்க வீரர்களின் தொண்டை நினைவு கூர்ந்து திராவிடர் கழகம் இன்று நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் சமுதாய ஏற்றங்களின் மூலம் வேர்களுக்கு விழுதுகளின் காணிக்கையை உரித்தாக்கி வருகிறார்.
அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் தமிழர்களின் மான உணர்ச்சியை நிலைநிறுத்துவதற்கு சுயமரியாதை காப்பதற்கு ஆற்றிய பங்களிப்பை சுருங்கச்சொல்லி விட முடியாது. இதில் காலனி என்னும் பெயர் நீக்கம் குறித்த ஆணை முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த எண்ணம் சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டு தீர்மானத்திலிருந்து பிறந்தவை ஜாதி, மத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம் – குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்வது என்ற தீர்மானமாகும்
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் திண்மையுடன் திராவிட மாடல் அரசின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் 2024 டிச.12 அன்று நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றியதை காணலாம்.
மக்களிடம் சமத்துவ எண்ணம் வளரவேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சமூகரீதியாக, அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறி இருக்கிறோம் ஆனால் இது போதாது இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
உயர்ந்த ஜாதி- தாழ்ந்த ஜாதி. ஏழை- பணக்காரன், ஆண்- பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும் முன் இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்.
நவீன வளர்ச்சிகளால் இந்த பகுபாடுகளை நீக்க முழுமையாக முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டும் அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது சட்டம் தேவை அதை விட மனமாற்றம் நிச்சயம் தேவை.
யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளரவேண்டும் பகுத்தறிவு சிந்தனை வளர வேண்டும் அரசியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுக வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் என்பது அரசின் கொள்கை மட்டுமல்ல ஆட்சியின் கொள்கை. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை அடைந்திருக்கிறோம் சமத்துவத்தை அடையை எந்த விலையும் கொடுக்கலாம் என்று உரைத்தார்.
தீண்டாமை குறியீடான காலனி நீக்கம்
இதன் வெளிப்பாடு தான். 2025 ஏப். 29 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும். தீண்டாமையின் குறியீடு சொல்லாக மாறி இருப்பதால். காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அறிவிப்போடு நிற்காமல், தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி பொதுப்பெயர்கள் சூட்ட வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெயர் என்ன செய்து விடும்
காலனி என்ற சொல் நீக்கத்தினால் என்ன மாற்றம் ஏற்பட்டு விடப்போகிறது. இது பெரிய புரட்சியா என கேட்போர் நாட்டில் உண்டு. ஒரு சொல் என்ன செய்து விடும் கும்பிடுறேன் சாமி,நமஸ்காரம் என்பது வணக்கம் ஆனதும் சம்பாஷனை உரையாடல் ஆனதும். குறைபாடுடையோர் மாற்றுத்திறனாளிகள் ஆனதும், மூன்றாம் பாலினத்தவரை இகழ்ந்து கூறப்பட்ட சொற்கள் நீக்கப்பட்டு திருநங்கை- திருநம்பி ஆனதும். கல்யாணம் திருமணமாகவும், திருமணம் இன்று வாழ்க்கை இணையேற்பு ஆனதும் ஒற்றை சொல்லால் ஏற்பட்ட மாற்றமும் புரட்சியும் தான் என்பதை சுயநினைவுள்ள யாவரும் ஒப்புக்கொள்வர். இந்த வரிசையில் காலனி எனும் அடிமைச் சொல் நீக்கப்படுவது அப்பகுதியில் வசிப்போரின் சுயமரியாதையை காப்பதற்கும் – சமத்துவத்துக்கான திறவுகோலாகவும் அமையும். திராவிட மாடல் அரசின் காலனி நீக்கம் என்ற கொள்கை முடிவு என்பது, இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் முடிவாகும். திராவிட மாடல் சொல்லாட்சியை வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும், திராவிட மாடலை உலக மாடலாக மாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை தாங்கி நிற்கும் வேரும்- விழுதும் ஆவார்கள். வெல்லட்டும் சுயமரியாதை இயக்க கொள்கைகள்.