மார்தட்டிக் கூறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர்!

கிருட்டினகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.270.75 கோடி மதிப்பில் 193 நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.562.14 கோடி மதிப்பிலான 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் கம்பீரமாக தமது ஆட்சியின் சாதனைகளை எடுத்து வைத்துள்ளார்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் 505இல் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

பொதுவாக தேர்தல் வாக்குறுதிகள் சம்பிரதாயமான வைகளாகவே இருந்து வந்திருக்கின்றன.

ஆனால் தேர்தல் அறிக்கை பேசு பொருளாக ஆக்கப்பட்டிருப்பது – தி.மு.க.வால்தான்! இன்னும் சொல்லப் போனால் தேர்தல் காலத்தில் கதாநாயகனாக வலம் வந்திருப்பதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான்.

இன்று, முதலமைச்சர் சொல்லுவது போல், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சொல்வது போல, வேறு எந்த அரசியல் கட்சியாவது வெளிப்படையாக ஒரு பொது விழாவிலோ, மேடையிலோ அறிவித்ததுண்டா?

இன்றைக்கு, தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டவைகளை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றாததாக நாக் கூச்சமில்லாமல் மேடைகளில் உரக்கப் பேசும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. கடந்த காலத் தில் ஆட்சியில் இருந்த நிலையில் இப்படி அதிகாரப் பூர்வமாக அறிவித்ததுண்டா?

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டுக் கால ஆட்சியில் பாய்ச்சல் வேகத்தில் நடைபெற்ற சாதனைகள், ஒப்பீட்டு அளவில் இந்திய மாநிலங்களில் முதன்மையான இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

2020ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியைவிட தற்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறது; பல தனியார் நிறுவனங்கள் ஆய்வின் அடிப்படையில் இதை  வரையறுத்துக் கூறுகின்றன.

2024ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாகப் பாராட்டப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கடந்த 2023–2024ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் வளர்ச்சிக் குறித்த ஆய்வில் மனித வளங்களை வளர்ப்பதில் மகாராட்டிரம், குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தேசிய சராசரி 21 விழுக்காடாக உள்ள நிலையில் தமிழ்நாடு, 51.3 விழுக்காட்டுடன் முதல் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்.நா.வின் 79ஆம் பொதுச்சபையில் பன்னாட்டு முனைப்புக் குழு விருது கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில், 21 எம்.பி.க்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ்சவுத்ரி, தேசிய அளவிலான தனி நபர் வருமானம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 309 ரூபாய் உயர்ந்து, இந்திய அளவில்  இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு தனி நபர் வருமானத்திலும் வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டு இருப்பது நோக்கத் தக்கதாகும்.

அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட ஓர் ஆய்வில் 10 முக்கியமான துறைகளில் பின் தங்கி இருந்தது. அதே நேரத்தில் ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக ஒளி வீசித் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் இன்றைய தினம் இந்தியாவைக் கடந்து உலகளவில் பேசப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் இடைநிற்றல்  சுழியம் என்பது மனித உணர்வு  உள்ள ஒவ்வொருவராலும் பாராட்டத்தக்கதாகும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் புதுமையானது. ஆட்சித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை சாதாரண நிலையில் உள்ள பொது மக்கள் நேரிடையாக அணுகிக் குறைகளைக் கூறுவது, நிவாரணம் பெறுவது, குதிரைக் கொம்பாக இருந்ததை தலை கீழாக மாற்றும் சட்டம் இது.

அதிகாரிகளே மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெற்று 45 நாள்களுக்குள் தீர்வு என்பது – கற்பனைக்கு எட்டாத ஒன்றே!

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையில் பெண்கள் விடுதலை என்பது மிக மிக முக்கியமானது; அந்த வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் வரலாற்று மகுடத்தில் ஒளிரும் நட்சத்திரமாகும்.

அவ்வழி வந்த தளபதி மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்தில் முழு அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு நில்லாமல் அவற்றையெல்லாம் உடனுக்குடன் செயல்படுத்தியும் வருகிறது.

முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் முதலில் அவர் கையொப்பமிட்ட அய்ந்து திட்டங்களுள் பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டம் மிகச் சிறப்பானது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்குக் கைலாகு கொடுக்கப்படுகிறது.

பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவது, கல்வியையடுத்த உன்னதமான ஒன்றே.

நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் இந்த அளவில் பயன் பெறுகின்றனர். இதனால் அரசுக்குப் பெரும் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், அதைவிட இழப்பிலிருந்து பெண்கள் மேல் நிலைக்கு உயருகிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கி எழுகிறது.

கல்வி வளர்ச்சியில் பெண்கள் மேலே எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டம் புரட்சிகரமானது. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பெற்றிட மாதம் ஒன்றுக்கு ஓராயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதைப்போல ‘தவப் புதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவர் களுக்கும் திமுக ஆட்சியின் உதவிக்கரம் நீள்கிறது.

மகளிர் சுய உதவித் திட்டத்தை கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதியதாக ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்குத் தொழில் தொடங்க அரசால் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன.

இப்படியே அடுக்கிக் கொண்டே போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தி.மு.க. ஆட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் அறிவித்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.

நமது முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மார்தட்டிக் கூறுவதன் பொருள் புரிகிறதா?

2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் இதுவரை கண்டிராத பெரு வெற்றியை தி.மு.க. பெறப் போவது உறுதி! உறுதி!! உறுதி!!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *