60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட சமூகம், ஒரு சாராருக்கு மட்டும் இருந்த கல்வி
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்
உயர்கல்வித் துறை அமைச்சர் – இணைவேந்தர் கோவி.செழியன் நெகிழ்ச்சியுரை!
- 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட சமூகம், ஒரு சாராருக்கு மட்டும் இருந்த கல்வி
- சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம்!
- என் வாழ்வியல் பெருமையாகக் கருதுகிறேன்!
- அரங்கம் ஒரு தத்துவத்தில் ததும்பி நிற்கிறது
- பேரியக்கக் கருத்துகளைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம்
- பெரியாருடைய தத்துவங்களை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்!
- எத்தனை எத்தனை நூற்றாண்டு விழாக்கள்!
- வாழும் காலத்திலேயே நூற்றாண்டு காணவிருக்கின்ற ஆசிரியர் அய்யா!
- தமிழ்நாட்டில் தொடங்கிய பெரியாருடைய பெருந்தத்துவம், உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது!
- ‘‘யாருக்கும் கிடைக்காத பெரியார், உங்களுக்குக் கிடைத்தார்’’ என்று வியக்கின்றனர் பல நாட்டவர்!
- தமிழ்நாட்டில் காவிக்கொடிக்கு வேலையில்லை!
- ஆட்சி அதிகாரத்தைவிட என் மக்களின் நோக்கம், லட்சியம் முக்கியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மேனாள் மாணவன் நான்!
சென்னை, செப்.16 அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட சமூகம், ஒரு சாராருக்கு மட்டும் இருந்த கல்வி, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற நிலை கிட்டியது தந்தை பெரியார் என்ற மாமனிதர் இந்த நாட்டில் பிறந்த காரணத்தினால். இல்லையென்றால், ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற வார்த்தையை சொல்ல முடியுமா? என்றார் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம்!
கடந்த 11, 12.9.2025 ஆகிய இரு நாள்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் நடைபெற்றது. இரண்டாம் நாள் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக் கழகத் இணைவேந்தருமான கோவி.செழியன் அவர்கள் நிறை வுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
என் வாழ்வியல்
பெருமையாகக் கருதுகிறேன்!
பெருமையாகக் கருதுகிறேன்!
வரலாறாக வாழுகிற தத்துவம் தந்த தந்தை பெரியாருடைய செயல்கள், கொள்கைகள், நோக்கங்கள் வெற்றியடைந்து இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியார் என்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்தத் தருணத்தில், வரலாற்றுப் பெருமையுடைய சென்னைப் பல்கலைக் கழகத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், தலைநகர் சென்னையில் இரண்டு நாள்கள் சிறப்பான முறையில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள், சான்றோர்கள், ஆளுமைமிக்க மாமனிதர்கள் எல்லாம் பல்வேறு கருத்துகளை, திராவிடச் சிந்தனைகளை, பெரியாரின் கொள்கைகளை, தத்துவங்களையெல்லாம் கற்றறிந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தி யில், அழுத்தந்திருத்தமாக உரையாற்றி, பதிவு செய்திருக்கக்கூடிய இந்த நிகழ்வில், எளியவனாகிய நானும் கலந்துகொள்வது என் வாழ்வியல் பெருமையாகக் கருதி முதலில் நன்றி யைத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நேற்றைய தினம், ஆசிரியர் அவர்களும், மேனாள் ஒன்றிய அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் இராசா அவர்களும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மரியாதைக்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் பல்வேறு கருத்துகளை, தத்துவங்களை உங்களிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.
அரங்கம் ஒரு தத்துவத்தில் ததும்பி நிற்கிறது
இன்று (12.9.2025) காலையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் அவர்கள் உரையாற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் ஆளுமைமிக்க மனிதர்கள் உரையாற்றி னார்கள் என்பதற்கான சான்று, எனக்கு முன்னதாகப் பேசிய நம்முடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய கருஞ்சட்டைப் போராளியினுடைய அற்புதக் கருத்துகள் கடைசி ஆதாரமாக இந்த மன்றத்தில் நானும் கேட்டேன், நீங்களும் கேட்டீர்கள்; அரங்கம் ஒரு தத்துவத்தில் ததும்பி நிற்கிறது.
ஒரு மணிநேரத்திற்கு மேலாக அழுத்தமான கருத்து களை உள்வாங்குவது என்பது மனித இயல்பு கிடையாது. மூளைச் சோர்வு, உடல் சோர்வு, சிந்தனைச் சோர்வு – இயற்கை.
இல்லையென்றால், இரண்டே கால் மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் 30 நிமிடம் இடைவெளி. காலையில் மூன்று பாடத் திட்டம், மாலையில் மூன்று பாடத் திட்டம்; ஆனாலும், இடையிடையே வேறு பாடம். ஒரே பாடம் என்றால் சலிப்பு.
பேரியக்கக் கருத்துகளைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம்
ஆனால், எத்தனை மணிநேரம்? எத்தனை நாள்? எத்தனை வாரம்? எத்தனை மாதம்? எத்தனை ஆண்டுகள்? கழித்தாலும், சலிக்காத பேரியக்கக் கருத்துகளைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம், திராவிட இயக்கம், திராவிட இயக்கம்!
அதில் வென்று காட்டியிருக்கின்ற காரணத்தி னால்தான், நூறாண்டையும் கடந்த அந்தச் சொல்லை சொன்னால், நம்முடைய உணர்வில், உதிரத்தில், ரத்தத்தில் அந்த உணர்வு சிலிர்க்கிறதே, அந்தச் சிலிர்ப்புக்கு அடிப்படைக் காரணம், தந்தை பெரியார் என்ற மாமனிதர் என்பதை உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.
அதன் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சி. கற்ற றிந்த சான்றோர்கள் மேடையில் வீற்றிருக்கிறார்கள். பேராசிரியப் பெருந்தகைகள், நிர்வாகப் பொறுப்பேற்று இருக்கின்ற சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய ஆளுமைகள்.
பெரியாருடைய கருத்துகளைப் படித்து அறிந்து, புரிந்து, உணர்ந்து ஆசிரியர்ப் பெருமக்கள் எதிரில் – அந்த உணர்வோடு ஒட்டியிருக்கின்றோம் என்று சொல்லுகின்ற எதிர்காலத் தலைமுறையான மாணவச் செல்வங்கள் எதிரில்.
பெரியாருடைய தத்துவங்களை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்!
இப்படி ஓர் அரங்கத்திலிருந்து இந்த நிகழ்வை நாம் நடத்திக் கொண்டிருப்பது என்பது, பெரியாருக்குப் பெருமை என்று சொல்வதைவிட, அவருடைய தத்துவங்களை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.
எத்தனை எத்தனை நூற்றாண்டு விழாக்கள்!
1925 ஆம் ஆண்டு திராவிட இயக்கக் கருத்து களை தொடக்கம் என்று சொல்லி, இன்றைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். திராவிட இயக்கத்திற்கு மட்டும் நூற்றாண்டு விழா அல்ல. இதன் நாயகர்களாக உழைத்தார்களே, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினுடைய தலைவர்கள், முன்னோடிகள் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கண்டி ருக்கின்றோம். தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழா கண்டிருக்கின்றோம். அவருடைய சீடர் அறிஞர் அண்ணாவிற்கு நூற்றாண்டு விழா கண்டிருக்கின்றோம். அவர் வழியில் வந்து கொள்கைகளைச் சட்டமாக்கித் தந்தாரே, முத்தமிழறிஞர் மூதறிஞர் டாக்டர் கலைஞர், அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்கின்றோம்.
எனக்கு அண்ணன் இல்லாத குறையைப் போக்குகிற எங்கள் அண்ணன் இனமானப் பேராசிரியர் என்று கலைஞர் பேசுவாரே மேடைகளில், அந்த இனமானக் காவலர் பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியிருக்கின்றோம்.
‘‘நடமாடும் பல்கலைக் கழகம்’’ என்று பாராட்டப்பட்ட நாவலருக்கும் நூற்றாண்டு விழா கொண்டாடியி ருக்கின்றோம்.
வாழும் காலத்திலேயே நூற்றாண்டு காணவிருக்கின்ற ஆசிரியர் அய்யா!
எனக்கு இருக்கின்ற ஆவல், மறைந்ததற்குப் பிறகு, நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்தத் தருணத்தில், வாழும் காலத்திலேயே நூற்றாண்டு காணவிருக்கின்ற ஆசிரியர் அய்யா என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
அது நடக்கும்!
அவருடைய சுறுசுறுப்பு, ஓயா உழைப்பு, சிந்தனைத் திறன், கவரும் சக்தி – நூறு பேர் மேடையில் இருந்தாலும், அவர் எடுத்தாளும் அந்தச் சொல்லாடல், அவருக்கு நிகர் அவர்தான்.
எனவே, வாழும் காலத்தில் நூற்றாண்டு விழா காணவிருக்கின்ற தலைவர் அய்யா ஆசிரியர் என்பதை இந்த அரங்கக் கூட்டத்தில் நான் பதிவு செய்து, அது நடக்கவேண்டும் என்று விரும்புகின்றேன்.
அது அவருக்காக அல்ல; அவருடைய கொள்கை களுக்கு, லட்சியங்களுக்கு, தத்துவங்களுக்கு.
அந்த வகையில், இன்றைக்கு நூற்றாண்டைக் கடந்து நாம், மரியாதைக்குரிய பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் இங்கே உரையாற்றும்போது சொன்னார்.
பல ஆண்டுகள் போராடிப் போராடி கிடைக்க முடியாத தத்துவங்களை, அய்ம்பதாண்டுகளில் கொண்டு வந்து, சட்டமாக்கி, தன் கண்களாலேயே கண்டவர் தந்தை பெரியார் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
அது இந்த மண்ணிற்குக் கிடைத்த பெருமை.
அவர் பிறக்காமல் இருந்திருந்தால், நம்மில் எத்தனை பேர் மனிதர்களாக வாழாமல் போயிருப்போம் என்பது நமக்குத் தெரியும்.
எனவே, வீதியில் நடப்பதற்குக்கூட உரிமையில்லாது இருந்தவர்களுக்காகப் போராடி, உரிமையைப் பெற்றுத் தந்தார் பெரியார் அவர்கள்.
கல்விக்கான விடுதலை, பெண் சுதந்திரம், சமத்துவம், சமதர்மம், ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு – அடக்குமுறை எங்கு வந்தாலும், அதை எதிர்கொண்டு போராடிய ஒரு போராளி தந்தை பெரியார் என்ற பெருமை நமக்குக் கிடைத்திருப்பதுதான் – அந்த வழியில் பயணப்படுகின்ற நமக்குக் கிடைத்திருக்கின்ற பெரும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் தொடங்கிய பெரியாருடைய பெருந்தத்துவம், உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது!
தன்னிகரில்லாத தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் அய்யா பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்த அதே தருணத்தில், அவர் ஆளு கின்ற மாநிலத்தில், இன்றைக்குப் பெரியாரின் கருத்துகளை நாம் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து பேசிக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால்,
தாய்வீடாக இருக்கின்ற தமிழ்நாட்டில் தொடங்கிய பெரியாருடைய பெருந்தத்துவம், உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது என்பதை முதலமைச்சர் நிரூபித்துவிட்டு, இன்றைக்குத் தாய் மண்ணுக்கு வந்திருக்கின்றார்.
நான் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமேயானால், காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கும் நேரம் வரை, நமது சுய சிந்தனைக்கு உள்பட்ட காலத்தில், திராவிட இயக்கத் தலைவர்களை சிந்திக்காத ஒரு தமிழன், தமிழ்நாட்டில் இருக்க முடியுமா?
அருள்கூர்ந்து நினைத்துப் பாருங்கள், பெரியாரை நினைக்காமல், அண்ணாவை நினைக்காமல், அன்புத் தலைவர் கலைஞரை நினைக்காமல், ஆசிரியரை நினைக்காமல், திராவிடச் சித்தாந்தங்களை நினைக்காமல், எந்த ஒரு மனிதனும் தன் சுய நினைவு நேரத்தில் கடக்க முடியும் என்ற நிலை, இல்லாமல் இருக்கின்ற ஒரே இனம், நம்முடைய தமிழினம், திராவிடம், தமிழ்நாடு என்ற பெருமை நமக்குக் கிடைத்திருக்கின்றது.
‘‘யாருக்கும் கிடைக்காத பெரியார், உங்களுக்குக் கிடைத்தார்’’ என்று வியக்கின்றனர் பல நாட்டவர்!
அதுதானே, அண்டை மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கின்ற பெருமை. யாருக்கும் கிடைக்காத பெரியார், உங்களுக்குக் கிடைத்தார் என்று பலர் பல நாடுகளில் பேசுவதற்குக் காரணம் என்ன?
அதற்கான வீரியத்தை, விதையை விதைத்த பூமி, இந்தத் திராவிட பூமி!
அகில இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறக்கலாம், காவிக்கொடி.
தமிழ்நாட்டில் காவிக்கொடிக்கு வேலையில்லை!
காவிக்கொடிக்கு இங்கே வேலையில்லை என்று அறைகூவல் விடுத்து, கருப்புக்கொடி பறக்கின்ற மாநிலமான தமிழ்நாடு இந்த நிலையை எட்டியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் யார்?
அந்தச் சித்தாந்தங்களை விதைத்து யார்?
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது யார்?
செயல்படுத்தியது யார்?
சட்டமாக்கியது யார்?
பாதுகாப்பது யார்?
ஆட்சி அதிகாரத்தைவிட என் மக்களின் நோக்கம், லட்சியம் முக்கியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளைய தினம் மொழிக்கோ, இனத்திற்கோ ஓர் ஆபத்து என்று சொன்னால், சட்டத்தின் அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் துடிதுடித்துக் கண்டிக்கின்றார் என்று சொன்னால், ஆட்சி அதிகாரத்தைவிட என் மக்களின் நோக்கம், லட்சியம் முக்கியம் எனக் கருதுகின்ற முதலமைச்சர், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர்.
இல்லையென்றால், இவ்வளவு புரட்சி நடந்தி ருக்குமா? கல்விப் புரட்சி!
எந்தப் பல்கலைக் கழகத்தில், எவன் படிக்கக் கூடாது என்று சொன்னார்களோ, அதே பல்கலைக் கழகத்தில், அய்யா, பெரியாரின் கருத்துகளை, அமர்ந்து, ரசித்துக் கேட்டு, அந்த நிகழ்ச்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால், பெரியார் எங்கே வென்று காட்டியிருக்கிறார்?
சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மேனாள் மாணவன் நான்!
அதிலே எனக்கு இருக்கின்ற பெருமை, இதே பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்ற மேனாள் மாணவர். எந்தப் பல்கலைக் கழகத்தில், ‘அ’னா, ‘ஆ’வனா படிக்கக் கூடாது என்று கல்வி மறுக்கப்பட்டதோ, கல்வி கூடாது என்று சொன்னார்களோ, 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட சமூகம், ஒரு சாராருக்கு மட்டும் இருந்த கல்வி, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற நிலை கிட்டியது தந்தை பெரியார் என்ற மாமனிதர் இந்த நாட்டில் பிறந்த காரணத்தினால். இல்லையென்றால், ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற வார்த்தையை சொல்ல முடியுமா?
கற்றலும், கற்பித்தலும் அவர் தொழில். இந்த வலியை, வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னால்கூட இன்றைக்குச் சிலருக்குக் கசக்கும். காரணம், அனைவருக்கும் கல்வி என்று சொன்னால், திராவிட இயக்கம், பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த சட்டங்கள்.
(தொடரும்)