திருவனந்தபுரம், செப்.16 புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி நிகழ்வுகளை செய்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமிய ருமான சஃபீர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பெனடிக்ட் மென்னி உளவியல் – சமூக மறுவாழ்வு மய்யம். அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயதான ராகி எனும் பெண் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இறப்பின் தருவாயில் இருந்தபோது தனது கடைசி ஆசையைச் சொல்லி உள்ளார்.
ஹிந்து முறைப்படி தனக்கு இறுதி நிகழ்வுகள் (சடங்குகள்) செய்யப்பட வேண்டுமென அவர் சொல்லி உள்ளார். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தனது உறவினர்கள் மற்றும் சொந்த ஊர் உள்ளிட்டவை நினைவில் இல்லை.
இந்த சூழலில் கடந்த 12.9.2025 அன்று அவர் உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த மய்யத்தை கிறித்தவ மகளிர் பராமரித்து வந்த னர். அவர்கள் சிட்டாட்டுமுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லா மியருமான சஃபீரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி உள்ளனர்.
கடைசி ஆசைப்படி…
இது குறித்து அறிந்த சஃபீர், உயிரிழந்த அந்த பெண்ணின் கடைசி ஆசைப்படி, அவருக்கு மகன் இடத்தில் முன்னின்று இறுதி நிகழ்வுகளை ஹிந்து முறைப்படி செய்துள்ளார்.
“உயிரிழந்த பெண்ணின் உறவி னர்களை கண்டுபிடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் யாரேனும் ஒருவர் தனது கடைசி ஆசையை சொல்லும் போது, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அதைதான் எனது மதம் எனக்குப் போதித்துள்ளது. எனது வார்டில் அனைத்து மத சமூகத்தை சேர்ந்த மக்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் இன்னும் பிற செயல்பாடுகளில் நான் அடிக்கடி பங்கேற்பதால், அந்த சடங்குகள் குறித்து எனக்கு ஓரளவு பரிச்சயம்.
அதோடு எரியூட்டுக் கூடத்தில் இருந்தவரும் எனக்கு வழிகாட்டினார். இந்த இறுதி நிகழ்வுகளை மேற்கொள்ள எனது மதம் எனக்குத் தடையாக இல்லை. உள்ளூர் ஜமாத்தின் இமாம் என்னை வாழ்த்தினார். இது சரியான செயல் என்று அவர் கூறினார்” என்று சஃபீர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பும் இதே போல உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதி நிகழ்வுகளை செய்துள்ளார் சஃபீர். இந்நிலையில், அவரது செயல் குறித்து அறிந்த கேரள நெட்டிசன்கள் ‘தி ரியல் கேரளா ஸ்டோரி’ என புகழ்ந்து வருகின்றனர்.