திருச்சி, செப். 16- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கலாச்சாரக் குழுவின் சார்பில் 10.09.2025 அன்று பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் முனைவர். க. வனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் கேழ்வரகு, கம்பு, சோளம், கருப்புக் கவுனி, சிவப்பு அரிசி போன்ற பாரம்பரியத் தானியங்களைப் பயன் படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வகையான உணவுகள், இனிப்புகள், பானங்கள் மற்றும் கூழ்களைத் தயாரித்து காட்சிப்படுத்தினர். உணவுகளின் சுவை, மணம், அலங்காரம் ஆகியவற்றுடன், அவை கொண்டுள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு பற்றியும் மாணவர்கள் விளக்கமளித்தனர்.
போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்கள்:
முதல் இடம் – எஸ். கேசவா (வகுப்பு 8)
இரண்டாம் இடம் – பி. சைந்தவி-எஸ். சம்ரின் (வகுப்பு 8)
மூன்றாம் இடம் – எஸ்.ஹெச். தன்யாசிறீ & ஜே. திவ்யாசிறீ (வகுப்பு 6)
பள்ளி முதல்வர் தனது உரையில், “இன்றைய இளம் தலைமுறை பாஸ்ட்புட் எனும் துரித உணவுகளுக்கு அடிமையாகிவரும் நிலையில், பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும். இத்தகைய விழாக்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் வளர்க்கும்” எனத் தெரிவித்தார்.
விழா நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஆர்வமும் பங்கேற்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் கலாச்சாரக் குழுவின் பொறுப்பாசிரியர் டி.கனிமொழி உள்ளிட்ட குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.