அண்மையில் சென்னை கோயம்பேடு பணிமனையிலிருந்து தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஒடிசா மாநில இளைஞர் கடத்திச் சென்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, அவர்களில் சிலர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதை இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன.
சென்னை – திருப்பதி செல்வதற்கான ஓர் அரசுப் பேருந்து, கோயம்பேடு பணிமனையில் திருடுபோனதாக செப்டம்பர் 11 அன்று சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளைக் காவல் துறையினர் ஆய்வுசெய்ததில், ஒருவர் பேருந்தைத் திருடி ஆந்திர மாநிலத்துக்கான வழித்தடத்தில் ஓட்டிச் செல்வது தெரியவந்தது. நெல்லூர் பகுதியில் நடத்தப்பட்ட வாகனப் பரிசோதனையில் அந்தப் பேருந்து சிக்கியது. இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் ஒடிசாவைச் சேர்ந்த ஞானசஞ்சன் சாஹூ (24). பேச்சுத்திறனும் கேட்கும்திறனும் சற்றுக் குன்றியுள்ள அவர், ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசையில் பேருந்தைத் திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய பாதிப்பு இல்லை எனினும், பேருந்தையே ஒருவர் திருடிச்செல்லும் அளவுக்கான நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகும். தனிநபர் ஒருவரின் அத்துமீறலாக மட்டுமே இதைக் கடந்துசெல்ல முடியாது. தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நடந்துவரும் சில குற்றச்செயல்களின் பின்னணி இதை உணர்த்துகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. குற்றவாளியின் முக அடையாளம் தெரிந்த பிறகும். அவரைப் பிடிப்பது காவல் துறைக்குச் சவாலான வேலையாகவே இருந்தது. குற்றவாளி குறித்துத் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குற்றம் நிகழ்ந்த இடம் ஆந்திரத்தை ஒட்டிய பகுதி என்பதால், இரு மாநிலங்களிலும் உள்ள பல இடங்களில் குற்றவாளியைத் தேடிக் காவல் துறையினர் அலைய வேண்டியிருந்தது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சூளூர்பேட்டையில் உள்ள ஓர் உணவகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெயர் ராஜு பிஸ்வகர்மா (35) என்பதும் தெரியவந்தன. மனைவியைப் பிரிந்துள்ள அவர், வார விடுமுறை நாள்களில் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து செல்வதாகவும், சம்பவம் நடந்த அன்று ஆரம்பாக்கத்தில் குடிபோதையுடன் இறங்கிய அவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்தார்.
மனைவி, குழந்தைகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்து குறைந்தபட்ச ஊதியம், குறைவான வாழ்விட வசதிகளோடு தங்கியிருக்கும் வட மாநிலத்தவருக்கு மத்தியில், குற்றங்களில் ஈடுபடுவதற்கான பின்புலத்தோடு அலைந்துகொண்டிருப்பவர்களும் இருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியது. தொழிலகங்களிலும் வீடுகளிலும் வட மாநிலத்த வரால் அரங்கேற்றப்படும் கொள்ளைகளும் தமிழ் நாட்டில் இயல்பானவையாக மாறிக் கொண்டிருக்கின்றன.
வட மாநிலத்தவர் வேலைக்காகப் பெரும் எண் ணிக்கையில் குடியேறுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால், இத்தகைய பெருந்திரளான குடியேற்றத்தில் ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பொறுப்பு அதிகரிப்பதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநிலத்தவர் குறித்த கண்காணிப்பு அவசிய மாகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த அடிப் படைத் தகவல்களை ஒப்பந்ததாரர்கள் அளிப்பது தற்போது நடைமுறையில் இருப்பினும், அதில் பல போதாமைகள் உள்ளன. எந்த ஆவணமும் இன்றி நடமாடும் ஒருவர் குற்றத்தில் ஈடுபடும்போது அவரைப் பிடிப்பது காவல் துறைக்குக் கடினமான தாகி விடுகிறது. இத்தகைய நபர்கள் குற்றம் செய்து விட்டுச் சுதந்திரமாகச் சுற்ற முடிவதைப் போலவே, பணியிடங்களில் மிக மோசமாகச் சுரண்டப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. வட மாநிலத்தவர் மீதான முறையான கண்காணிப்பு இந்த இரண்டு சிக்கல்களுக்கும் தீர்வாக இருக்கும்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ தலையங்கம் 15.9.2025