சுயமரியாதைத் திருமண முறையைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை நூலாசிரியர்
மனோஜ் மிட்டா அவர்கள் ‘‘சாதிப் பெருமை’’ புத்தகத்தில் தேதி வாரியாக எழுதியிருக்கிறார்!
திருமண முறையில் எப்படியெல்லாம் கொடுமைகள் நடந்திருக்கின்றன; எப்படியெல்லாம் புரட்சிகள் வளர்ந்திருக்கின்றன என்பதை
சென்னை, செப்.15 சுயமரியாதைத் திருமண முறை யைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள் ‘‘சாதிப் பெருமை’’ புத்தகத்தில் தேதி வாரியாக எழுதியிருக்கிறார். திருமண முறையில் எப்படியெல்லாம் கொடுமைகள் நடந்திருக்கின்றன; எப்படியெல்லாம் புரட்சிகள் வளர்ந்திருக்கின்றன என்பதைத் திராவிட இயக்கம் செய்வதைவிட, ஒருபடி மேலே போய், தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘‘சாதிப் பெருமை’’ (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘சாதிப் பெருமை’ மொழி ஆக்க நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஒரே ஒரு கேள்வியைக் கேட்டோம், திராவிடர் கழகத்தினராகிய நாங்கள்.
ஏன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் கழுத்தில் குடுவைக் கட்டிக் கொள்ளவேண்டும்?
‘‘சரி, உன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். எச்சிலைக் கண்ட இடத்தில் துப்பக்கூடாது. அதற்காக கழுத்தில் குடுவை கட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், எல்லோரும் குடுவையைக் கழுத்தில் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஏன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் கழுத்தில் குடுவைக் கட்டிக் கொள்ளவேண்டும்? அவர்கள் மட்டும்தான் சுகாதாரத்தைப் பாதுகாக்கவேண்டுமா? நீங்கள் எல்லாம் சுகாதாரத்தைப் பாதுகாக்கவேண்டாமா?’’ என்று.
என்னங்க, ‘‘மலம் எடுக்கின்றவர்கள் எல்லாம், வேறு வேலைக்குப் போனால், யார்தான் மலம் எடுப்பது?’’ என்று கேட்டார்கள்.
‘‘எவன், மலத்தை விடுகிறானோ,
அவன் மலத்தை அவனே எடுக்கட்டும்!’’
பெரியார்தான் சொன்னார், ‘‘எவன், மலத்தை விடுகி றானோ, அவன் மலத்தை அவனே எடுக்கட்டும்’’ என்றார்.
என்னடா, இவர் இப்படிப் பேசுகிறாரே என்று நீங்கள் எல்லாம் கோபப்படுவீர்கள். அய்யா சொல்கிறார், ‘‘உங்கள்வீட்டில் உள்ள குழந்தை மலம் கழித்தால், அதை எடுப்பீர்கள் அல்லவா! அப்படி அதை எடுக்கும்போது, உன்னுடைய மலத்தை நீ எடுத்தால், என்ன கேவலம்?’’ என்று கேட்டார்.
மனிதநேயத்தைக் காக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிக்கிறார்கள்
எங்களுடைய தோழர்களை இன்னும் இழிவு படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் ஜாதி.
அந்த ஜாதி, ஸநாதன வெறியினால்தான், மனு தர்மத்தை மாய்த்து – மனிதநேயத்தைக் காக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கவும் துடிக்கிறார்கள்.
ஆகவே, 1916 இல் வெள்ளைக்கார அரசாங்கத்தில், மனக் ஜி கொண்டு வந்த மசோதாவிற்கு ஆதரவு கொடுத்த ஒரே ஒருவர் யார் தெரியுமா, பனகால் அரசர்.
‘‘இராமராய நிங்கார்’’ என்பதைவிட ‘பனகால் அரசர்’ என்று பதிவிட்டிருக்கலாம்!
இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்த நம்முடைய நண்பர் விஜயசங்கர் அவர்கள், ‘‘இராமராய நிங்கார்’’ என்று பதிவு செய்திருக்கிறார். ‘‘இராமராய நிங்கார்’’ என்றால், நம்மாட்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் அவர் என்று நினைத்துக் கொள்வார்கள்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த பதிப்பிலாவது ‘‘இராமராய நிங்கார்’’ என்று போட்டு, அடைப்புக் குறிக்குள் பனகால் அரசர் என்று பதிவு செய்யவேண்டும்.
மனக் ஜிக்கு ஆதரவு கொடுத்தவர் பனகால் அரசர்!
பனகால் அரசர் அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியில் முதலமைச்சராக மட்டும்தான் இருந்தார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது – 1912 ஆம் ஆண்டிலிருந்து 1916 ஆம் ஆண்டுவரையில்.
மனக் ஜிக்குக் கை கொடுத்த ஒருவர், திராவிட இயக்கத்தைச் சார்ந்த பனகால் அரசர். இது ஓர் அற்புதமான செய்தி.
அதற்கடுத்து நண்பர்களே, இன்னொரு மிக முக்கியமான ஒன்று.
சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் கொள்கை பிறவி பேதம் அகற்றுதல்!
அடிமைத்தனத்தை உருவாக்குவது ஜாதி, பிறவி பேதம்தான். சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் கொள்கை என்னவென்றால், பிறவி பேதம் அகற்றுதல்.
பிறவி பேதம் என்றால், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மட்டும்தான் என்று நினைப்பார்கள்.
அப்படியில்லை. பெரியார்தான் சொன்னார், ‘‘பிறவி பேதம் என்றால், ஆண் உயர்ந்தவர்; பெண் தாழ்ந்தவர் என்ற பேதத்தைக் காட்டுகிறீர்களே, அதையும் ஒழிக்கவேண்டும்’’ என்றார்.
ஆகவே, முழுக்க முழுக்க இந்த பேதங்களை யெல்லாம் உள்ளடக்கி சிந்தித்ததினால்தான், தீண்டாமை, பிறவி பேதத்திற்கு அடுத்து ஊற்று எது? என்கிற கேள்வி எழுந்து திருமண முறையில் மாற்றம் தேவை என்பது புரிந்தது.
தமிழ்நாட்டிற்குத் தெரியாத தகவல்களை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்!
சுயமரியாதைத் திருமண முறையைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை மனோஜ் மிட்டா அவர்கள் இந்தப் புத்தகத்தில் தேதி வாரியாக எழுதி யிருக்கிறார்.
ஒரு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
பெரியார் அவர்கள் ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனது.
இனிமேல் ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று, எல்லோரும் அந்தக் கட்சியை விட்டு ஓடினார்கள்.
தந்தை பெரியார் உரை
ஜஸ்டிஸ் கட்சியின் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, ‘‘இந்தத் தோல்வியை நான் மிகவும் வரவேற்கிறேன். இனிமேல்தான் சரியான முடிவை எடுக்கவேண்டும்’’ என்றார். ‘‘ஏனென்று கேட்டால், பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, பதவிக்காக மட்டும் இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டிற்குப் போனவுடன், அய்யர் காலில்தானே விழுகிறீர்கள்; அவரை அழைத்துதானே சிரார்த்தம் நடத்துகிறீர்கள். கோவிலுக்குப் போய் கும்பிடுகிறீர்கள். அங்கே அவனுக்கு அடிமை; வெளியில் வந்து, எங்களுக்கு உரிமை என்று கேட்டால், அது பெரிய முரண்பாடு அல்லவா’’ என்று கேட்டார்.
திராவிட இயக்கம் செய்வதைவிட,
ஒருபடி மேலே போய்…
ஆக, திருமண முறையில் எப்படியெல்லாம் கொடு மைகள் நடந்திருக்கின்றன; எப்படியெல்லாம் புரட்சிகள் வளர்ந்திருக்கின்றன என்பதைத் திராவிட இயக்கம் செய்வதைவிட, ஒருபடி மேலே போய், இந்நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள் இந்தத் தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.
பல பேருக்குத் தெரியாத ஒரு தகவலைச் சொல்கிறேன்.
தெய்வானை ஆச்சி Vs சிதம்பரம் வழக்கு!
இராஜகோபாலாச்சாரியார், முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்,ஆந்திரப் பார்ப்பனரான சத்திய நாராயண ராவ் என்ற ஒருவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜகோபாலன் அய்.சி.எஸ். என்பவரும் (இரண்டு பார்ப்பனர்கள்) சேர்ந்து செல்லாது என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தனர்.
அந்த வழக்குதான் தெய்வானை ஆச்சி Vs சிதம்பரம் வழக்காகும்.
சுயமரியாதை என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தவர் இராஜாஜி!
அந்த வழக்கில், திருமண முறையைப்பற்றி சொல்லும்போது, ஹிந்து வழக்கம் சம்பிரதாயப்படி, Non Conformity Marriages என்றுதான் இராஜகோபாலாச்சாரியார் சொன்னார். சுயமரியாதைத் திருமணச் சட்ட வடிவம் என்று அவர் சொல்லவில்லை. சுயமரியாதை என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்தார்.
இன்னொரு ஆட்சி வந்தது. அப்போது வெங்கட்ராமன் ‘‘சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரலாம். ஆனால், ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறதே, சுயமரியாதை என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்ல முடியாது’’ என்றார்.
பிறகு அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன்தான் சாதித்துக் காட்டினார். அதன்மூலம் உரி மையை மட்டுமல்ல, மானத்தையும் தந்தார்.
ஏனென்றால், சுயமரியாதைத் திருமணம், மிக எளிமை யாக நடத்தக்கூடிய திருமணம் என்று சொல்லும்போது, அதற்குரிய ஓர் ஆதாரத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.
சுயமரியாதைத் திருமணம் என்றே பெயர் வைத்து, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறார். அதனை எதிர்ப்பதற்கே ஆளில்லை அன்றைக்கு.
இந்த இயக்கம் மிகப்பெரிய அளவிற்கு வந்தி னால்தான், பெண்ணடிமை நீங்கியது. பெண்களை உயர்த்தியது.
‘கன்னிகாதானம் செய்விக்க பெரியோர்களால் நிச்சயித்தபடி’’ என்று அழைப்பிதழில் அச்சடிக்கிறார்கள்.
பெண்களை மனிதர்களாகப் பார்க்கவில்லை; ஒரு பண்டமாகத்தான் பார்த்தார்கள்!
அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமலேயே, அந்த வார்த்தையைப் போடுகிறார்கள். கன்னிகாதானம் என்றால் என்ன? கன்னி என்றால், பெண்; தானம் என்றால், தர்மம். தர்மம் கொடுத்த பொருளை, மறுபடி திரும்பிக்கூட பார்க்கக் கூடாது.
எனவே, பெண்களை மனிதர்களாகப் பார்க்கவில்லை. ஒரு பண்டமாகத்தான் பார்த்தார்கள். சந்தையில் ஆடு, மாடுகளை விற்பதுபோன்று – வரன் தட்சணை, வரன் தட்சணை என்று சொல்லி, இன்றைக்கு அந்த நோய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றது.
பண்பாட்டுப் படையெடுப்பை ஒழிப்பதற்குத்தான் சுயமரியாதைத் திருமணம்!
பண்பாட்டுப் படையெடுப்பை ஒழிப்பதற்குத் தந்தை பெரியார் அவர்கள், ஒரு முறையை உருவாக்கினார்கள். அந்த முறைக்கு சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னார்.
தந்தை பெரியாரிடம் வெளிநாட்டுத் தோழர்கள் கேட்டார்கள், ‘‘அய்யா, ஒவ்வொரு நேரத்தில் தலைவர் வருகிறார்; மணமக்கள் மாலையை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக சுயமரியாதைத் திருமணத்திற்கு ஒரு வரையறையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும்’’ என்று.
அறிவுக்கு விடுதலை கொடுப்பதும், சமத்துவம் கொடுப்பதுதான் மிக முக்கியமானது!
அப்படி கூடாது; சுயமரியாதைத் திருமணத்திற்கு ஏன் ஒரு வரையறையை செய்யக்கூடாது என்றால், ஒரு கார் இன்றைக்குப் புது மாடலாக வருகிறது என்றால், சில ஆண்டுகள் கழித்து புதிய மாடல் கார் வரும். மாடலை மாற்றிக் கொண்டு போவதுதான் அறிவு. ஒரு கட்டத்தில் வந்தவுடன், தேவையா, இந்தத் திருமணம் என்று நினைக்கக் கூடிய அளவிற்குக்கூட அறிவு போகும். எனவே, அறிவுக்கு விடுதலை கொடுப்பதும், சமத்துவம் கொடுப்பதுதான் மிக முக்கியமானது’’ என்று சொல்லி, ஒரு தெளிவான விளக்கத்தைத் தந்தை பெரியார் கொடுத்தார்.
அதனுடைய அடிப்படையை மிக அழகாக இப்புத்தகத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இப்புத்தகத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள்.
அது என்னவென்றால், இது வெறும் திருமண முறையை மட்டும் பொருத்ததல்ல; நாத்திகம், சுதந்திரம், பெண்ணடிமை நீக்கம், சமத்துவம் இவை அத்தனையையும் உள்ளடக்கியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தபோது, ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன்.
அண்ணா அவர்கள் மறைந்த நிலையில், இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த காலகட்டம் அது.
அண்ணா மறைவிற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டம்
சென்னை கடற்கரையில், அண்ணாவிற்கு இரங்கல் கூட்டம் நடத்துகிறார்கள். பிரதமர் இந்திரா காந்தி அந்த இரங்கல் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தற்காலிகமாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். கலைஞர் அவர்களும் அந்த மேடையில் அமர்ந்திருக்கின்றார். காந்தியார் சிலைக்கு பக்கத்தில்தான் மேடை போட்டிருந்தார்கள். தந்தை பெரியார், இராஜகோபாலாச்சாரியார், லட்சுமண சாமி முதலியார் அவர்களும் அமர்ந்திருந்தனர். பிரதமர் பங்கேற்கும் கூட்டம் என்பதால், நிறைய பேரை மேடையில் ஏறவிட மாட்டார்கள். பிரதமர் வருவதற்கு முன் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். இராஜாஜி கொஞ்சம் காலதாமதமாக வந்தார். பிறகு பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் வந்துவிட்டார். மொழி பெயர்ப்பிற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த க.திரவியம்தான் மொழி பெயர்த்தார்.
அப்போது இராஜாஜி, ‘‘நான் சீக்கிரம் செல்லவேண்டி இருப்பதால், முன்கூட்டியே உரையாற்றிவிட்டுச் செல்கி றேன்’’ என்று பிரதமர் இந்திரா காந்தியிடம் கூறினார்.
பொதுவாக தந்தை பெரியார் அவர்களுக்கு செவித் திறன் கொஞ்சம் குறைவாக இருந்த காரணத்தால், சில கருத்துகள் போய்ச் சேராது. நாங்கள் அதுகுறித்து அவரிடம் சொல்வோம். அய்யாவிற்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்பதால், அய்யாவின் பின்புறம் அமர எனக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். யார் யார் என்னென்ன பேசுகிறார்கள் என்ற குறிப்பை எடுத்து வைப்பேன்.
நாத்திகம்பற்றியெல்லாம் பேசிய அண்ணா பிறகு மாறிவிட்டார்: இராஜாஜி
இராஜாஜி அவர்கள், ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். ‘‘அண்ணா மறைந்தது பெரிய சோகத்திற்குரியதுதான். ஆனால், ஒன்றை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளைஞராக இருக்கும்போது, நாத்திகம்பற்றியெல்லாம் பேசினார். பிறகு அவர் மாறிவிட்டார்’’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
இராஜாஜி பேசியதை மொழி பெயர்ப்பு செய்ய வில்லை. இராஜாஜி என்ன பேசினார் என்று அப்போது அய்யாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை.
அய்யாவிடம், சிறிய தாளில்
எழுதிக் கொடுத்தேன்!
உடனே நான் ஒரு சிறிய தாளை எடுத்து, ‘‘அண்ணா, இளைஞராக இருக்கும்போது உங்களுடைய சுயமரி யாதை, நாத்திகக் கொள்கைகளையெல்லாம் ஏற்றார். ஆனால், பிறகு அவர் மாறிவிட்டார்’’ என்று ஆங்கிலத்தில் பேசினார் என்று எழுதி, அய்யாவிடம் நீட்டினேன்.
அதைப் படித்துப் பார்த்த அய்யா அவர்களுக்கு ஒரு கோபம் வந்தது பாருங்கள்; அதுவரை அவ்வளவு ஆவேசப்பட்டதே இல்லை.
சுயமரியாதைத் திருமணம் என்றால், நாத்திகத்தை உண்டாக்குவது, மனிதத் தன்மையை உண்டாக்குவது!
தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, ‘‘என்னுடைய நண்பர் இராஜாஜி அவர்கள் உரை யாற்றும்போது, அண்ணா அவர்கள் மாறிவிட்டார் என்று ஒரு தவறான செய்தியை சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். நான் சொல்கிறேன், அண்ணா கடைசிவரையில் என் கொள்கையில்தான் இருந்தார்; கடவுள் மறுப்பில் இருந்தார் என்பதற்கு என்ன அடையாளம் தெரியுமா? சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டம் வடிவம் கொடுத்தாரே, அதுதான் அடையாளம். சுயமரியாதைத் திருமணம் என்றால், நாத்திகத்தை உண்டாக்குவது, மனிதத் தன்மையை உண்டாக்குவது’’ என்று பதிலளித்துப் பேசினார்.
அந்தக் கருத்தை, மனோஜ் மிட்டா அவர்கள், இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இன்னொரு செய்தியையும் உங்களிடம் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு…
சுயமரியாதைத் திருமணச் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். அதை மாற்றவேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்கள்.
வடநாட்டிலிருந்து வந்த உயர்ஜாதி நீதிபதியும் அந்த அமர்வில் இருந்தார். இன்னொரு நீதிபதி தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அண்ணா நிறைவேற்றிய சட்டப்படி, சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள்!
எந்தத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதோ, அதே இடத்தில், அண்ணா நிறைவேற்றிய சட்டப்படி, அந்தத் திருமணம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தத் தகவல்களையெல்லாம் அருமையாக மனோஜ் மிட்டா அவர்கள் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
எனவே, இதுவரையில் நமக்குக் கிடைக்காத தகவல்களெல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
‘‘சங்கராச்சாரியார் யார்?’’
இந்தப் புத்தகத்தை நிறைய தோழர்கள் வாங்கியி ருக்கிறீர்கள். எத்தனை புத்தகங்களை தமிழில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. உடனே விற்றுவிடும். நம்முடைய தோழர்கள் உடனே வாங்கிவிடுவார்கள் என்கிற கருத்தில் இதைச் சொல்ல வில்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து ஒன்றைச் சொல்கிறேன். ‘‘சங்கராச்சாரியார் யார்?’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். கிட்டத்தட்ட 3,000 புத்தகங்களை முதல் பதிப்பில் போட்டோம். ஒரே வாரத்தில் அத்தனை புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
அடுத்த பதிப்புப் போடவேண்டும் என்று சொன்னார்கள். என்னங்க, அவ்வளவு ஆர்வமா? இந்தப் புத்தகத்தின்மீது என்று நினைத்தோம். சங்கரமடமே அத்தனை புத்தகங்களையும் வாங்கிவிட்டது. அந்தப் புத்தகத்தை வேறு யாரும் படிக்கக் கூடாது என்பதால்.
ஆகவே, இந்தப் புத்தகத்திற்கும் நிறைய கிராக்கி இருக்கும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
எதிரிகள் இருட்டடிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு!
நானும், சகோதர் எழுச்சித் தமிழரும் விற்றோம் என்றால், பல பதிப்புகளைப் போடவேண்டி இருக்கும். எதிரிகள் இந்தப் புத்தகத்தை இருட்டடிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
ஆகவேதான், இது ஓர் அற்புதமான நிகழ்ச்சி, சிறப்பான நிகழ்ச்சி.
ஹிந்து மதம் – ஜாதி = 0 இவ்வளவுதானே!
ஹிந்து என்பதற்கு வரையறை உண்டா?
நாங்கள் எல்லோரும் வழக்குரைஞர்கள்தான். ஹிந்துவிற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார்கள்.
யார் முஸ்லீம் இல்லையோ,
யார் கிறித்தவர் இல்லையோ
யார் பார்சி இல்லையோ அவர்கள்தான் இந்துவாம்.
ஒலிபெருக்கி என்றால் என்ன? என்று கேட்டால், அதற்கு என்ன விளக்கம் சொல்வோம். ஒலிபெருக்கிமுன் மெதுவாக பேசினாலும், கூட்டத்தின் கடைசியில் இருக்கின்றவர்களுக்கும் கேட்கும், அதுதான் ஒலி பெருக்கி. குறைந்த சத்தத்தில் பேசலாம்; அதைப் பெருக்கி கடைசியில் இருக்கின்றவரையில் அந்த உரை கேட்கும் என்று சொன்னால், அது சரியான பதிலாகும்.
சரியான விளக்கமாகுமா?
ஆனால், ஒலி பெருக்கி என்றால் என்ன தெரியுமா? எது மேசையல்லவோ, எது புத்தகம் அல்லவோ, எது நாற்காலி இல்லையோ, அதுதான் ஒலிபெருக்கி என்று சொன்னால், அது சரியான விளக்கமாகுமா?
அவர்களுக்கு ஜாதிதான் மிக முக்கியம்.
நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள், மதுரையில், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் 10 ஆயிரம் பள்ளிகள் இருந்தது என்று இத்தாலியிலிருந்து வந்த பாதிரியார் அவர்கள் எழுதியிருப்பார்.
பாதிரியார் ராபர்ட் டி நொபிலி
அந்தப் பாதிரியார் மதம் மாறவேண்டும் என்று சொன்னார். அந்தப் பாதிரியாரின் பெயர் ராபர்ட் டி நொபிலி. அவர்தான் முதன்முதலில், நீங்கள் எந்த ஜாதி யில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். எங்கள் மதத்திற்கு மட்டும் வாருங்கள் என்றார்.
ஜாதியினுடைய தத்துவமே ஒன்று சேர விடாதே – தனித்தனியாக ஆக்கு என்பதுதான்!
ஒடுக்கப்பட்டோர் சமுதாயத்தினரிடையே உயர்ஜாதி யினர் ஒரு கோடு போட்டு, அதனால் அவர்கள் இன்னமும் கல்லறைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஜாதியினுடைய தத்துவமே ஒன்று சேர விடாதே – தனித்தனியாக ஆக்கு என்பதுதான்.
இரண்டு பிரபலமான நாளேடுகளில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. என்ன கட்டுரை என்று சொன்னால், பிரதமர் மோடி கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தினுடைய சிறப்பியல்புகளை, அவருடைய பெருமைகளைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். அதில், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எவ்வளவு நல்லவர்கள், எவ்வளவு தெளிவானவர்கள் என்று சொல்லவேண்டும் என்றால், அதற்கு மோகன் பகவத்தான் உதாரணம் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இத்தனை ஆண்டுகளில், மோகன் பகவத் பிறந்த நாளில், பாராட்டி வாழ்த்துச் சொன்னதே இல்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு நாக்பூர் பக்கமே சென்றிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் எழுதுகிறார், மோகன் பகவத் மதங்களைக்கூட வேறுபடுத்தியதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியது. அது சேவை செய்யக்கூடிய அமைப்பாகும்.
ஆனால், ஒன்றே ஒன்று, இந்திய நாட்டில் யார் யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் ஹிந்துக்கள்தானாம்.
கோல்வால்கரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ்!
கோல்வால்கர் என்ன எழுதியிருக்கிறார்?
யார் எதிரிகள் என்று சொன்னால், நெம்பர் ஒன் எதிரி முஸ்லிம், கிறித்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்றுதான் பஞ்ச் ஆஃப் தாட்ஸ்சில் எழுதியிருக்கிறார்.
‘‘சாதியப் பெருமை’’ புத்தகங்கள் பரப்பப்படவேண்டும்!
ஆகவே, இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ‘‘சாதியப் பெருமை’’ புத்தகங்கள் பரப்பப்படவேண்டும் என்று சொல்லும்போது, நம்முடைய வாதங்கள் எவ்வளவு நியாயமானவை; எவ்வளவு வரலாற்றுப் பூர்வமானவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வரலாறு நமக்குத் தெரியவேண்டும்.
இந்தப் புத்தகத்தைப் படித்த இளைஞர்கள், தங்க ளோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். தயவுசெய்து மற்ற இடங்களுக்குச் சென்று இந்தக் கருத்துகளைப் பரப்புங்கள்.
ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
புத்தகங்களை வாங்கிய தோழர்களுக்கு நன்றி!
திரிபுவாதங்களிலிருந்து காக்கவேண்டும்!
நாம், பெரியாரையும், அம்பேத்கரையும், இந்த இயக்கங்களையும் பரப்புவதைவிட, பாதுகாப்பது மிகவும் முக்கியம். திரிபுவாதங்களிலிருந்து நம்மைக் காப்பதற்கு அது உதவிகரமாக இருக்கும்.
வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.