கவுகாத்தி, செப்.15- மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அசாமில் 2 சிறுமிகள் காயமடைந்ததுடன், பல வீடுகளும் சேதமடைந்தன.
4 முறை நில நடுக்கம்
வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமை மையமாக கொண்டு நேற்று மாலையில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட முதல் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.
அதைத்தொடர்ந்து 6.11 மணி வரை மேலும் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இவற்றின் அளவு முறையே 3.1, 2.9, 2.7 புள்ளிகளாக இருந்தன. இதில் 3ஆவது நிலநடுக்கத்தின் மய்யப்பகுதி அசாமின் சோனிட்பூராக இருந்தது. மீதமுள்ள 3 அதிர்வுகளும் உடால்குரி மாவட்டத்தை மய்யமாக கொண்டு நிகழ்ந்தது.
சுமார் 1 ½ மணி நேரத் தில் 4 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அசாமில் கணிசமான சேதம் நிகழ்ந்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டன.
மேலும் தங்கும் விடுதி ஒன்றின் கூரையும் சரிந்தது. இதில் அங்கே தங்கியிருந்த 2 சிறுமிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வீடுகள் குலுங்கின
அசாமை மய்யமாக கொண்டு ஏற்பட்டாலும் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் ஓட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உண ரப்பட்டன. குறிப்பாக அருணாசலப் பிரதேச தலைநகர் இடாநகரில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதைப்போல மணிப்பூரி லும் இந்த நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசாமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் சில நிமிடங்களுக்கு அதிர்வுகள் நீடித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை காண முடிந்தது. எனினும் இந்த மாநிலங்களில் உயிர்ச்சேதம் மற்றும் உடைமை சேதம் பற்றிய தகவல் எதுவும் இல்லை.
பிரதமர் மோடி கேட்டறிந்தார்
பிரதமர் மோடி 2 நாள் வட கிழக்கு மாநில பயணத்தை முடித்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவை நேற்று அடைந்தார்.
அங்கிருந்தவாறே அசாம் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு நிலநடுக்க சேதங்களை கேட்டறிந்தார். சேதங் களை சீரமைக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.