கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம் தெற்கு ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுவேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கிருஷ்ணகிரி செப்.15-  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, தெற்காசியா விலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூறினார்.

ரூ.2,885 கோடியில் திட்டப்பணிகள்

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.270.75 கோடியில் 193 நிறைவடைந்த பணிகளை தொடங்கிவைத்தும், ரூ.562.14 கோடியில் 1,114 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 2,23,013 பயனாளிகளுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இவ்விழாவில் 85,711 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களையும், பணிகளையும் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைக்க முடியாமல், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தவறான தகவலைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.  திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டுள்ளன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் பரிசீலனையில் 37 திட்டங்களும், நிதியில்லாமல் 64 திட்டங்களும் நிலுவையில் உள்ளன.

தேர்தலில் தி.மு.க.
வெற்றி பெறும்

தேர்தலில் சொல்லாத காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதையெல்லாம் மறைத்து, பொய்களைப் பரப்பி சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்.

நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக ஆட்சி நெடுநாள் நீடிக்காது. நிச்சயம் ஒருநாள் நம் மாநிலத்துக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சி அமையும். தமிழ்நாட்டை நிச்சயம் தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உருவாக்கிக் காட்டுவேன்.அவதூறு, பொய், வீண்பழிகளைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படக்கூடியவன் அல்ல. 50 ஆண்டுகளாக இவற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். 2026 தேர்தலிலும் நிச்சயம் திமுக வெற்றி பெறும். காலமெல்லாம் மக்களாட்சி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார், அமைச்சர் அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், ராமச்சந்திரன், பிரகாஷ், எம்.பி. கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *